அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஒரு திரைப்படமோ, ஒரு புத்தகமோ மனதுக்கு பிடித்துவிட்டால் அதன் இயக்குநரின் / எழுத்தாளரின் மற்ற படைப்புகளை தேடுவோமில்லையா. அது போல கோவா சென்றுவந்த பிறகு இந்தியாவில் கோவாவைப் போல என்னென்ன ஐட்டங்கள் இருக்கின்றன என்று தேடத் துவங்கினேன். அத்தேடல்கள் அனைத்தும் இரண்டு ஊர்களை மீண்டும் மீண்டும் பரிந்துரைத்துக் கொண்டே இருந்தன.
ஆம், கோவாவிற்கு இரண்டு தங்கைகள். ஒன்று, கோகர்னா. மற்றொன்று வர்கலா !
இரண்டில் ஒன்று என்றெல்லாம் கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்ளவில்லை.
இரண்டும் வேண்டும். ஆனால் எது முதலில் என்ற கேள்வி வந்தபோது இரண்டு அங்குலம்
முன்னால் வந்து நின்றது வர்கலா. ஏனெனில் அது கேரளா ! மென்சோகம் இழையோடும் சாலைகள்,
இருமருங்கே நீண்டு வளர்ந்த தென்னைகள், கட்டஞ்சாயா, கள்ளு, பீஃப் கறி இவையெல்லாம்
தாண்டி கேரளா என்பது ஒரு உணர்வு !
வர்கலா செழிப்பான கடற்கரை ஸ்தலம் மட்டுமில்லாமல் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமும் கூட. அரபிக்கடலின் முத்து, தென்னகத்து காசி போன்றவை வர்கலா பெற்ற பெயர்கள். பாண்டிய மன்னனின் பாவம் போக பிரம்மன் கோவில் கட்டச் சொன்ன இடம், நாரதர் வீசிய வல்கலம் (மரப்பட்டை) வந்து விழுந்த இடம் என்று புராணமும் அதன் பங்குக்கு வர்கலா பற்றி கதைகள் சொல்கின்றன. இங்குள்ள அஞ்செங்கோ (அஞ்சு தேங்காய் என்பதின் வழுவல்) கோட்டை பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேயே அரசால் நிர்மாணிக்கப்பட்டது. அரசுக்கு பாதுகாப்பு அரணாகவும், அதே சமயம் வணிகப் தொடர்புக்கு பயன்படுபவதாகவும் இருந்திருக்கிறது இந்தக் கோட்டை. ஆன்மிகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயண குரு வர்கலாவைச் சேர்ந்தவர். இவர் அமைத்த சிவகிரி மடம் இன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது.
எனது இந்தப் பயணம் ஒரு சோலோ பயணம். Solo travel / traveller என்கிற சொற்களுக்கு
இணையான தமிழ்ச் சொற்களாக தனிப்பயணம் / தனிப்பயணி என்பவற்றை சமீபத்தில்
அறிமுகப்படுத்தியிருக்கிறார் கவிஞர் மனுஷி. இனி நாமும் அவற்றையே பயன்படுத்துவோம்.
சில தவிர்க்க முடியாத / எழுத்தில் கொண்டு வர முடியாத காரணங்களுக்காக எனது
பயணத்துணைகள் என்னோடு தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. அதனால்
நான் தனிப்பயணியானேன் !
உண்மையில் தனிப்பயணங்களில் சம அளவில் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. சாதகங்களில்
பிரதானமானது - சர்வாதிகாரம். அந்த இடத்திற்கு போனால் எனக்கு சளி பிடித்துவிடும்,
அவ்வளவு தூரம் உட்கார்ந்து வர முடியாது – எனக்கு பைல்ஸ், அலுவலகத்தில் லீவ் தர
மாட்டார்கள் (பொய்), அந்த தேதியில் தான் வீட்டில் தலுவை போடுகிறார்கள் போன்ற
விவாதங்களுக்கு வேலையில்லை. உங்கள் தேதி, உங்கள் தேர்வு. நீங்கள் திருமணமாகாதவர்
என்றால் உங்கள் மேனேஜர் ஒருவரை மட்டும் சமாளித்தால் போதும், திருமணமானவர்களுக்கு
இரண்டு. அவ்வளவுதான் !
புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், சுயமறிதல் போன்ற சில சாதகங்களும்
தனிப்பயணங்களில் உண்டு. இவை தவிர, தனிப் பயணங்களில் புது நண்பர்கள் கிடைப்பார்கள்
என்பது பொது நம்பிக்கை. Introvert என்பதால் அதுகுறித்த கள நிலவரத்தை என்னால்
கண்டறிய முடியவில்லை.
பாதகங்களில் பிரதானம் ஒரு நல்ல புகைப்படம் எடுத்துத் தரக்கூட யாரும்
இருக்கமாட்டார்கள் என்பதுதான். நம்முடன் நண்பர்கள் இருக்கும்போது கிடைக்கக்கூடிய
ஒரு கூடுதல் தைரியம் தனிப்பயணங்களில் சாத்தியமில்லை. மாலை வேளைகளில் ஒருவிதமான
வெறுமையுணர்வு தோன்றும்.
இன்னும் case specific சாதக பாதகங்களை இத்தொடரின் இடையிடையே
தெரிந்துகொள்வீர்கள்.
தரை மற்றும் வான் மார்க்கங்களில் மிக எளிதாக அணுகக்கூடிய வகையில்
அமைந்துள்ளது வர்கலா. சென்னை மத்திய ரயில் நிலையத்திலிருந்து வர்கலாவிற்கு தினசரி
ரயில் செல்கிறது (திருவனந்தபுரம் மெயில் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்).
எக்மோரிலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செல்கிறது. வர்கலா ரயில் நிலையத்திலிருந்து
சில கி.மீ. தூரத்தில் சுற்றுலா தளத்தின் மத்திய பகுதி. ஆட்டோவில் நூறு ரூபாய்.
ஒருவேளை வர்கலா ரயில் நிலையம் சாத்தியமில்லை என்றால் கொல்லம் ரயில்
நிலையத்திலிருந்து 25 கி.மீ, திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஐம்பது
கி.மீ. வான்வழி செல்வதென்றால் ஐம்பது கி.மீ தொலைவில் திருவனந்தபுரம் விமான
நிலையம். அங்கிருந்து கேரள அரசு பேருந்துகள் வர்கலாவிற்கு இயக்கப்படுகின்றன.
பழம்பொரி |
என்னிடம் கைவசம் நாட்கள் தாராளமாக இருந்ததால், போக வர இரண்டுக்கும்
திருவனந்தபுரம் மெயிலில் டிக்கட் எடுத்திருந்தேன். முதல்நாள் இரவு 7:45க்கு சென்னையிலிருந்து
கிளம்பும் ரயில் சேலம், ஈரோடு, கோயமுத்தூர் வழியாக அதிகாலையில் கேரளா மாநில
பாலக்காடு ரயில் நிலையத்தை கடக்கிறது. டீ, காபி, வடையுடன் பழம்பொரியும்
விற்கப்படுவது கேரள வருகையை உறுதிப்படுத்துகிறது. அதன்பிறகு ரயிலில் தினசரி
பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை 10.50க்கு ரயில் வர்கலாவை
சென்றடைகிறது.
ஆர்ப்பாட்டமில்லாத சிறிய ரயில் நிலையம். அருகிலேயே நான் நீ என்று
போட்டி போடாத ஆட்டோ ஸ்டாண்ட். வர்கலா ஹெலிபேட் என்று கேட்டு வருமாறு ஏற்கனவே
அறிவுறுத்தப்பட்டிருந்தேன். ரயில் நிலையத்திலிருந்து சரியாக மூன்றரை கி.மீ. வர்கலா
ஹெலிபேட் என்பது ஒரு மலை முகட்டில் அமைந்துள்ள பிரம்மாண்டமான சமதளம்.
ஹெலிகாப்டர்கள் வந்து தரையிறங்குவதற்கான அமைப்பு. அதன் மத்தியில் என்னை
இறக்கிவிட்டுச் சென்றார் ஆட்டோ ஓட்டுநர்.
இருவர் படத்தின் ஒரு காட்சியில் பிரகாஷ்ராஜ் மோகன்லாலை அவரது வீட்டு
மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்வார். மெல்ல மொட்டை மாடியின் விளிம்பிற்கு செல்லும்
மோகன்லால் கீழே அவருக்காக ஆரவாரம் செய்துக் கொண்டிருக்கும் மக்களைக் காண்பார்.
அதுபோல நான் அந்த ஹெலிபேடின் மத்திய பகுதியிலிருந்து மலை முகட்டிற்கு மெதுவாக
நடந்து செல்கிறேன்.
கீழே வர்கலா கடற்கரையின் பிரம்மாண்டமான எழில்தோற்றம் தோன்றுகிறது. “இருவர்” மோகன்லால் அடைந்ததை விட பரவசமான அனுபவம் அது !
அடுத்த பகுதி: ஆதாமிண்ட ஸ்வர்க்கம்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
N.R.PRABHAKARAN
|
7 comments:
வனக்கம் பிரபாகரன் ..
சுவாரசியமாக ஆரம்பித்து இருக்கின்றீர்கள். வாசிக்க தயாராக இருக்கிறோம்
தொடர்ந்து எழுதுங்கள் ..
கரிகாலன்.
www.karikaalan.blogspot.com
அருமையான பதிவு.
வாழ்த்துகள் தம்பி!!👍👍👍😊😊💐💐💐💐💐
Super, write every thing praba...
மீண்டும் வருக
படிக்க நன்றாக இருக்கிறது
வாசிக்க தயாராக இருக்கிறோம்
தொடர்ந்து எழுதுங்கள் ..
manohar , coimbatore
Good write up, eager to know more about varkala Praba
விரைவில் வந்து நேர்ல கண்டு மனம் திறந்து என் எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து எனதுஓருமித்த கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆவா!!!வணக்கம்
Post a Comment