வணக்கம் மக்களே...
திறந்த வீட்டில் ஏதோ நுழைந்தது போல, பிரபல பதிவர்கள் எழுதிக்கொண்டிருந்த இந்த தொடர்பதிவில் நானும் இணைந்திருக்கிறேன். நான் இந்த பதிவை எழுத அனுமதி அளித்த முகிலனுக்கு நன்றிகள்.
இந்த பதிவுத்தொடரின் முந்தைய எபிசோடை படிக்க கீழுள்ள தொடுப்பை சொடுக்கவும்.
விதிகள்:
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
நடிகர்களில் யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் நான் எப்போதும் என்னை தல ரசிகன் என்றே சொல்லுவேன். ஆனால் எனக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி சிந்தித்தபோது ஒரு தல படம் கூட என்னை கடுமையாக பாதித்ததில்லை என்று உணர்ந்துக்கொண்டேன். மாறாக பத்தில் பாதி கமல் படங்களாக இருந்தது. இது தவிர்த்து நிறைய படங்கள் என் மனதை பாதித்து, ஆனால் முதல் பத்துக்குள் வர முடியாமல் போனது. சிகப்பு ரோஜாக்கள், மைக்கேல் மதன காம ராஜன், குடைக்குள் மழை, சுவரில்லாத சித்திரங்கள், நிழல் நிஜமாகிறது, சுப்ரமணியபுரம், நந்தா, விருமாண்டி, ஜாதிமல்லி, புன்னகை மன்னன், வானமே எல்லை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், உன்னால் முடியும் தம்பி, அஞ்சாதே உள்ளிட்ட படங்கள் அந்த வரிசையில் அடங்கும்.
நான் ஒன்றிலிருந்து தொடங்காமல் பத்திலிருந்து தொடங்குகிறேன். ஏறத்தாழ இந்த படங்களில் எனக்கு பிடித்த காட்சி என்றால் அது க்ளைமாக்ஸ் காட்சி தான். எனவே க்ளைமாக்ஸ் தவிர்த்து எனக்கு பிடித்த காட்சிகளை இங்கே குறிப்பிடுகிறேன்.
10. தூறல் நின்னு போச்சு
பாக்யராஜ் படங்கள் என்றாலே எனக்கு பிடிக்கும். (அட... அந்த சமாச்சாரத்துக்காக இல்லைங்க) அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த படம் "தூறல் நின்னு போச்சு". படத்திற்கு கவிதையாய் தலைப்பு தேர்ந்தெடுப்பதில் பாக்யராஜ் திறமைசாலி. படம் கொண்ட கருத்தை தலைப்பிலேயே சொல்லியிருப்பார். கதாநாயகியை பெண் பார்ப்பதில் ஆரம்பித்து அவளை மணமுடிக்கும் வரை ஏற்படும் சிக்கல்களையே படமாக எடுத்திருப்பார்கள். சுலக்ஷனா திரும்பத் திரும்ப அழுது௮ வடியும் காட்சிகள் அலுப்பு தட்டினாலும் படத்தில் பாக்யராஜ் - நம்பியார் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருக்கும். இறுதிக்காட்சியில் செந்தாமரைக்கு எதிராக அவரது மனைவி பேசும் வசனங்கள் அழுத்தமானது. கடைசியில் நாயகியின் தந்தை மனம் மாறும்போது, வசனங்களால் எதையும் விவரிக்காமல் வேறு ஒருவருடன் நடக்க இருந்த திருமணத்தின் அழைப்பிதழ்களை கிழித்து போடுவது போல காட்டுவது கவிதையாய் இருக்கும்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
வழக்கமாக தமிழ் சினிமாவில் பெண் பார்க்கும் படலம் என்றாலே சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். கிழவி, புரோக்கரை மாப்பிள்ளை என்று நினைத்து பாக்யராஜை கலாய்ப்பது, பாக்யராஜ் குழந்தையின் உடை, பொட்டில் சில மாற்றங்களை சொல்வதை கேட்டு சுலக்ஷ்னா மாற்றங்கள் செய்து கொள்வது போன்ற காட்சிகள் அருமையாக இருக்கும்.
9. இயற்கை
கப்பல், துறைமுகம், கலங்கரை விளக்கம் என்று புதியதொரு கதைக்களம். பொதுவாக தமிழ் சினிமாவில் நாயகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காதல் இருப்பது போல காட்டுவதுண்டு. ஆனால் இந்தப் படத்தில் நாயகி இரண்டு காதல்களுக்கு மத்தியில் தவிப்பது போல காட்டியிருந்தது புதுமை. ஷாமின் ஹீரோயசம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் ஷாம் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல், என்னை பொறுத்தவரையில் ரஜினி, அஜித் தம்மடிக்கும் ஸ்டைலை விட சிறப்பாக இருக்கும். கடைசி இருபது நிமிடக் காட்சிகளில் குட்டி ராதிகா, அந்த காதல் தவிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார். படத்தின் இறுதிகாட்சி மகிழ்ச்சியானதா சோகமானதா என்று கேட்டால், சோகமானது என்றே சொல்லுவேன். ஏனென்றால் படத்தை நான் ஷாமின் இடத்தில் இருந்தே பார்த்தேன்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
படத்தின் ஆரம்பத்தில் வொயின் ஷாப்பில் வரும் காட்சிகள். முன்னர் சொன்னது போல ஷாமின் ஹீரோயசத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது. வெள்ளைக்காரர்களுடன் சீட்டுக்கட்டு விளையாடுவதும், பின்னர் அதற்கேற்றாற்போல் கருணாஸை பாடச் சொல்லும் காட்சிகள் பிடித்திருந்தது.
8. அன்பே சிவம்
நீண்ட நாட்கள் வரை இந்தப் படத்தை பார்க்கும் ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. ஒரு முறை பிதாமகன் படம் பார்த்தபோது அதில் ஒரு காட்சியில் நாயக நாயகியர் திரையரங்கத்தில் அன்பே சிவம் படத்தின் உச்சகட்ட காட்சியை பார்ப்பது போல காட்டியிருப்பார்கள். அந்த காட்சியை பார்த்ததும் ஒரு அபரிமிதமான ஆவல் ஏற்பட்டு படத்தை டி.வி.டியில் பார்த்தேன். கமல், அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவ்வப்போது மிகப்பெரிய தத்துவங்களைஎல்லாம் சாதாரணமாக உதிர்ப்பார்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
நிறைய காட்சிகள் இருக்கின்றன, எதைச் சொல்வது என்று தெரியவில்லை. முக்கியமாக பிளாஷ்பேக்கில் கமல் மற்றும் குழுவினர் அரங்கேற்றும் தெருக்கூத்து, கமலை ஒரு தலையாக காதலிக்கும் உமா ரியாசின் காட்சிகள், யூகி சேது மாதவனை ஏமாற்றும் காட்சி ஆகியவைகளை சொல்லலாம்.
7. கற்றது தமிழ்
இந்தப் படத்தை நான் பல நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம், படத்தில் நாயகனின் பெயர் பிரபாகர். அதிலும் எனக்கு முன்பு படத்தை பார்த்த நண்பர்கள், நாயகனின் சிறு வயது பாத்திரமாக வரும் சிறுவன் என்னைப்போலவே இருப்பதாக கூறியதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. ஒரு கூட்டத்துடன் ஆரவாரமாக மதுராந்தகம் அலங்காரில் படம் பார்க்க சென்றோம், ஆனால் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது எல்லோரிடமும் ஒரு இறுக்கம். படத்தின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் படம் அருமையாக கம்யூனிசம் பேசியிருந்தது.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
சந்தேகமே இல்லை. படத்தில் பிரபாகருக்கும் தமிழ் ஆசிரியருக்கும் இடையில் இருக்கும் அந்த பாசம். அவர்களிருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. காட்சிகளை விட "பர பர பட்டாம்பூச்சி..." என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்ததோடு மட்டுமில்லாமல் மிகவும் ஏங்க வைத்தது.
6. வறுமையின் நிறம் சிகப்பு
இந்தப் படத்தில் எனக்கு பிடிக்காத காட்சி என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு பிரேமும் அனாயாசமாக தத்துவங்களை உதிர்த்துவிட்டுச் செல்லும். படத்தில் கமல், தந்தையிடம் தத்துவம் பேசும் காட்சிகள் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்திலும் சரி, உன்னால் முடியும் தம்பி படத்திலும் சரி, கமலுக்கும் அவரது தந்தைக்குமான உறவை ஒரே மாதிரி காட்டியிருப்பார்கள்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
சத்தியமா என்னால முடியலைங்க. இதையெல்லாம் எழுத பக்கங்கள் போதாது. கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்து பார்த்ததில் மனதில் தோன்றிய இரண்டு காட்சிகளை குறிப்பிடுகிறேன். கமல், தான் இதற்கு முன் பார்த்த வேலைகளை பற்றி ஸ்ரீதேவியிடம் குறிப்பிடுவார். அந்த ப்ளாஷ்பேக் புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மற்றொரு காட்சியில் கமல், பாரதியார் கவிதை சொல்வதை கேட்டு சலூனுக்கு வந்த தேங்காய் சீனிவாசன் அலறியடித்து ஓடுவார். அந்தக் காட்சியும் பிடிக்கும்.
5. ரத்தக்கண்ணீர்
பிறரது வாய்மொழியில் கேட்டுக் கேட்டே பிடித்துப் போன திரைப்படம். நீண்ட தேடலுக்குப்பின் படத்தின் டி.வி.டி கிடைத்தது. படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. எம்.ஆர்.ராதா எக்கச்சக்கமாக நடித்திருப்பார். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் கருத்தாழம் மிகுந்ததாக இருக்கும். சில வசனங்களில், அந்த காலகட்டத்தில் நடந்த அரசியல் வேடிக்கைகளை கொஞ்சம் இடித்து பேசியிருப்பார். அத்தகைய வசனங்கள் புரியவில்லை என்ற போதிலும் ரசிக்க முடிந்தது. படம் சொல்ல வந்த கருத்து தற்போதைய காலகட்டத்திற்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அக்காலத்தில் விதவை மறுமணத்தை பற்றி படமெடுத்ததெல்லாம் மிகப்பெரிய புரட்சி.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
கடைசி அரை மணி நேர காட்சிகள். ராதா அவர் மனைவியிடமே சென்று பிச்சை எடுக்கும் காட்சியும், அதன்பிறகு, எஸ்.எஸ்.ஆரிடம் நாத்திகம் பேசும் காட்சிகளும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. ஒரு காட்சியில் ரோட்டோரத்தில் கொட்டி வைத்திருக்கும் ஜல்லி கற்கள் தடுக்கி கீழே விழும் ராதா, "ரோடு போட மூணு வருஷமாகுது... ரெண்டு பக்கமும் கல்ல மட்டும் கொட்டி வச்சிருக்கானுங்க..." என்று குறிப்பிடுவார். இப்போதைய காலகட்டத்திற்கு கூட இந்த வசனம் அருமையாக பொருந்தும்.
4. நாயகன்
பொதுவாக மணிரத்னம் படங்கள் என்றால் எனக்கு பிடிக்கும், ஆனால் மணிரத்னத்தை பிடிக்காது. அவரது படங்களில் மிகச்சிறந்த படம் என்று இந்த படத்தை சொல்லலாம். கமல் நடிப்பில், சிறு வயது முதல் பேரன் பெறும் வயது வரை நல்ல மாடுலேஷன் காட்டியிருப்பார். பாடல்களை காட்சியாக்கிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அதிலும் குயிலி போட்ட ஆட்டத்தை எல்லாம் மறக்க முடியுமா.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
நிழல்கள் ரவியிடம் "நாயக்கரே... எடுத்துக்கங்க..." என்று கமல் வெத்தலை பெட்டியை நீட்டும் காட்சி, "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல..." என்று தன் மகளிடம் கமல் விளக்கும் காட்சி இந்த இரண்டு காட்சிகளுமே என் ஆள் டைம் பேவரிட்.
3. தேவர் மகன்
சிவாஜி கணேசன் என்னும் மிகப்பெரிய கலைஞனின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம். கமல் தான் நடிகர் திலகத்தின் கலை வாரிசு என்று இந்த படத்தின் மூலமே கமல் நிரூபித்துவிட்டார். சிவாஜிக்கும் கமலுக்கும் இடையேயான தந்தை மகன் உறவு, கமலுக்கு ரேவதி மீது கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுக்கும் காதல் ஆகியவை படத்தில் சிறப்பாக இருக்கும்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
சிவாஜி - கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அவற்றில் ஊரின் நிலைமை பற்றி எடுத்துக்கூறி, கமலுக்கு சிவாஜி அட்வைஸ் செய்யும் காட்சி மிகவும் அற்புதம்.
2. புதுப்பேட்டை
லேட்டஸ்டாக வந்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம். ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை வரலாற்றை அருமையாக விவரித்திருப்பார் செல்வராகவன். தனுஷ் நடித்த படங்களில் அவரது நடிப்பை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பளித்த படம் இந்தப் படம் தான். அக்மார்க் அரசியல்வாதியாக அழகம் பெருமாள் நடித்திருப்பார். இறுதிக்காட்சியில் டைட்டில் போட்டபடியே பேக்ரவுண்டில் தனுஷ் பேசும் வசனங்களில் தற்கால அரசியலை இடி இடியென இடித்திருப்பார்கள்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
ரவுடி கூட்டத்தில் இணைந்தபின் அவர்களுடன் அமர்ந்து தனுஷ் மது அருந்தும் காட்சி. "யாருக்கு பிடிக்காது... நாய்க்கு பூனைக்கு கூட தான் அம்மான்னா பிடிக்கும்" என்று ஆரம்பித்து தனுஷ் தனது தாயை பற்றி, போற்றி விவரிக்கும் காட்சி கண்களை கலங்க வைத்தது.
1. ஆளவந்தான்
எவ்வளவோ படங்கள் இருந்தாலும் இந்த படத்தை ஏன் எனக்கு இந்த அளவிற்கு பிடித்ததென்று எனக்கே தெரியவில்லை. படத்தில் இரண்டு கமல் இருந்தாலும், ஏன் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் நந்து கமல் மட்டும் தான். ஆழ் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சில இடங்களில் காட்சிகளாக காட்டியதால் படம் புரியாதது போலத் தோன்றும். "அன்புள்ள டைரிக்கு..." என்று டைரியின் முதல் வரிகளில் எழுதுவது எனக்கு பிடித்திருந்தது. இன்றளவும் ஏன் டைரிக்குறிப்புகளில் நான் அன்புள்ள டைரிக்கு என்றுதான் ஆரம்பிக்கிறேன்.
க்ளைமாக்சை தவிர்த்து எனக்கு பிடித்த காட்சி:
நந்து கமல் அறிமுகமாகும் காட்சி. ரவீனாவை பார்க்காமல் இருப்பதற்காக ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு நந்து பேசுவது பிடித்திருந்தது. அந்தக் காட்சியில் கமல் பேசும் வசனங்களும் கவிதைகளும் அருமை.
பதிவை வேறு யார் வேண்டுமானாலும் தொடருங்கள். ஆனால் நான் விரும்பும் சிலரது பெயர்களை இங்கே குறிப்பிடுகிறேன். அவர்கள் தொடர்ந்தால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்.
1. சேட்டைக்காரன்
2. SUREஷ் பழனியிலிருந்து
3. வால் பையன்
4. சைவகொத்துபரோட்டா
5. அவிய்ங்க ராசா
யார் தொடர்ந்தாலும் உங்களது பதிவின் இணைப்பை மறக்காமல் பின்னூட்டத்தில் தெரிவித்து விடுங்கள்.
1. சேட்டைக்காரன்
2. SUREஷ் பழனியிலிருந்து
3. வால் பையன்
4. சைவகொத்துபரோட்டா
5. அவிய்ங்க ராசா
யார் தொடர்ந்தாலும் உங்களது பதிவின் இணைப்பை மறக்காமல் பின்னூட்டத்தில் தெரிவித்து விடுங்கள்.
என்றும் அன்புடன்,
NR PRABHAKARAN
NR PRABHAKARAN
|
7 comments:
ரொம்ப நாளாச்சே தொடர் பதிவு எழுதின்னு நினைச்சேன்! சிக்க விட்டிங்களா!?
ஒன்றிரண்டு படங்களைத் தவிர மற்றவை எல்லாம் எனக்குப் பிடித்த படங்களே...
1. நாயகன் - எனக்கு இந்தப் படம் பேரை சொன்னாலே கமலின் மிகை நடிப்புதான் நினைவுக்கு வரும். அதோடு காட் ஃபாதரும்.
2. ஆளவந்தான் - டெக்னிக்கலி நல்ல படம். ஆனால் கதை?
3. தேவர் மகன் - படம் பிடித்தது முழுக்க முழுக்க சிவாஜியின் யதார்த்தமான நடிப்புக்காக.
மற்றபடி அருமையாக படங்களை விளக்கியிருக்கிறீர்கள்.
பை த வே, நான் பிரபல பதிவரில்லை.. :))
9, 8, 6, 5, 4, 3 - இந்த படங்கள்
எனக்கும் பிடிக்கும்!!!
என்னையும் தொடர சொல்லி
இருக்கிறீர்கள், நன்றி
பிரபாகர்.
வருகிறேன் எனக்கு பிடித்த லிஸ்டோடு.
நாயகன் - உலகின் சிறந்த நூறு படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுள் ஒன்று...
தேவர் மகன் - சொல்ல வார்தைகள் இல்லை...
வறுமையின் நிறம் சிகப்பு - பசியின் ஒரு பரிமாணம்...கமல்,ஸ்ரீதேவி யின் சங்கீத பாடல் புது முயற்சி...
கற்றது தமிழ் - IT யால் அழியும் இந்தியாவிற்கு கற்றுக்கொடுக்கும் ஒரு பாடம்...பறவையே எங்கு இருக்கிறாய் பாடல் ஒரு ப்ளஸ்...
அன்பே சிவம் - பஸ்ஸில் நம் அருகில் பேப்பர் படிக்கும் ஒருவனுக்கும் ஒரு காதல் இருக்கும் என உணர வைத்தது...
இயற்கை - காதலுக்கு ஒரு புதிய பரிமாணம்...
காதல் வந்தால் பாடல் ஒரு ப்ளஸ்...
இப்படிக்கு,
RJ கெளதம் G.A
www.rjgowtham.tk
http://gowthampages.blogspot.com
...
..
.
வறுமையின் நிறம் சிகப்பு மற்றும் தேவர் மகன் இது மட்டும் தாங்க நான் இந்த லிஸ்ட்ல பார்த்த படம். ஆளவந்தான் 5 நிமிஷம் பார்த்துட்டு எழுந்து போயிட்டேன். ஆனா அந்த படத்துக்கு நீங்கள் 1st place தந்துருக்கது ஆச்சரியமா தான் இருக்கு.
@ வால்பையன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... சீக்கிரமா வாங்க தல...
@ முகிலன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... 43 பின்னூட்டம் பெறுபவர்களை பிரபல பதிவர்கள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது... நமகெல்லாம் நான்கு ஐந்தையே தாண்டமாட்டேன் என்கிறது...
@ சைவகொத்துப்பரோட்டா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... சீக்கிரமா வாங்க தல...
@ Gowtham the OxygeN
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
/* வறுமையின் நிறம் சிகப்பு - பசியின் ஒரு பரிமாணம்... */
/* அன்பே சிவம் - பஸ்ஸில் நம் அருகில் பேப்பர் படிக்கும் ஒருவனுக்கும் ஒரு காதல் இருக்கும் என உணர வைத்தது... */
நன்றாக எழுதியிருந்தீர்கள்...
தங்களது வலைப்பூவை புக்மார்க் எடுத்து வைத்துள்ளேன்... நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு பின்னூட்டுகிறேன்...
@ angel
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
நாயகனையும் அன்பே சிவத்தையும் நீங்கள் பார்த்ததே இல்லையென்று கூறியது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது...
/* அந்த படத்துக்கு நீங்கள் 1st place தந்துருக்கது ஆச்சரியமா தான் இருக்கு */
பெரும்பாலானாவர்கள் இப்படித்தான் நினைப்பீர்கள் என்று எனக்கு தெரியும்... அதைத்தான் நானும் முதல் வரியிலேயே குறிப்பிட்டிருந்தேன்... (எவ்வளவோ படங்கள் இருந்தாலும் இந்த படத்தை ஏன் எனக்கு இந்த அளவிற்கு பிடித்ததென்று எனக்கே தெரியவில்லை.) "ஆளவந்தான்" ஒரு தலைசிறந்த படம் என்று நான் கூறமாட்டேன்... ஆனாலும் அந்த படத்தை பார்த்ததும் எனக்குள் ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது... அது என்னவென்று எனக்கு விளக்கிச் சொல்ல தெரியவில்லை... ஒருவேளை என் சொந்த வாழ்வில் நடந்த சம்பவங்களின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்...
வாங்க ஏஞ்சல்... இந்தியாவின் இளம் (பெண்) பதிவர் நீங்கள்தான் போல...
தங்களது வலைப்பூவை புக்மார்க் எடுத்து வைத்துள்ளேன்... நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டு பின்னூட்டுகிறேன்...
நல்ல படங்களை தேர்வு செய்துள்ளீர்கள்
தூறல் நின்னு போச்சு எனக்கும் பிடித்த படம்
எனது வலை தளத்திற்கு வருகை தந்தமைக்கு
நன்றி
தொடருங்கள்
r.v.saravanan
kudanthaiyur.blogspot.com
Post a Comment