அன்புள்ள மனைவிக்கு,
அது ஒரு ஞாயிறு மாலை. நான் என்னுடைய குடும்பத்துடன் உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தேன்.
“ஹே........
மாப்ள வந்துட்டாரு....!” என்று பெருங்குரலெடுத்து கத்திக்கொண்டே சில
வாண்டுகள் எங்களை முந்திச் சென்றன. எங்களுடைய வருகையை உள்ளே
இருப்பவர்களுக்கு முன்னறிவிப்பு செய்திருக்கக்கூடும். எட்டுத்
திக்கிலிருந்தும் யாரோ எங்களை கண்காணித்துக் கொண்டே இருப்பதை போன்றதொரு
குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது. இதமான மாலைத்தென்றலில் கூட வியர்த்துக்
கொட்டியது. அண்டை வீட்டு வாசல்கள், மொட்டை மாடிகள், பால்கனிகள் என்று
எங்கெங்கிலிருந்தும் மனித கண்கள் எங்களை, குறிப்பாக என்னை நோட்டமிட்டபடி
இருந்தன. அவற்றில் பெரும்பாலும் பெண்கள். ஒருத்தி நைட்டி மீது குற்றால
துண்டு ஒன்றினை தற்காலிக துப்பட்டாவாக சூடியிருந்தாள். அவள் முகத்தில்
அர்த்தம் புரியாத ஒரு சிரிப்பு வியாபித்திருந்தது. அதற்குள்
வீட்டுக்குள்ளிருந்து “வாங்க... வாங்க... வாங்க... வாங்க...” என்று ஒரு
ஹை-பிட்ச் குரல் எகிறி வந்தது. உன்னுடைய தந்தை தான். கார்டனுக்குள் நுழைந்த
அமைச்சர் போலவே பம்மியபடி வந்து எங்களை உள்ளே அழைத்தார். உன் தந்தையைக்
கண்டதும் ஏனோ என் மனக்கண்ணில் ரைட்டர் பேயோனுடைய ப்ரோபைல் படம் தோன்றி
மறைந்தது.
கதவைச்
சுற்றி கோவில் வாசல் போல செருப்புகள் இரைந்து கிடந்தன. உன்னுடைய அப்பா
யாரையோ கூப்பிட்டு செருப்புகளை ஓரம்தள்ளி வைக்காதமைக்காக
கடிந்துக்கொண்டார். மிகவும் கண்டிப்பாக பேர்வழியாக இருக்கக்கூடும் என்ற
எண்ணம் தோன்றினாலும் கூட ஒரு நமுட்டுச்சிரிப்பும் கூடவே வந்துத்தொலைத்தது.
வாசற்காலில் தலை இடித்துவிடாதபடி கவனமாக உள்ளே நுழைந்தேன். அந்த குறுகிய
அறைக்குள் சுமார் ஐம்பது மனித தலைகளாவது தென்பட்டிருக்கும். நாங்கள்
நுழைந்ததும் சட்டென வாத்தியார் நுழைந்த வகுப்பறை போல நுன்னமைதி.
எங்களுக்கென சோபாவில் பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மனிதர்கள்
ஆக்கிரமிப்பு செய்யாத தரைப்பகுதியில் லட்டு, பாதுஷா, மைசூர் பாகு போன்ற
லெமூரியா காலத்து பட்சணங்கள் காட்சிப்படுத்த பட்டிருந்தன.
என்
கண்கள் என்னையே அறியாமலும் வேறு வழியில்லாமலும் உன் வீட்டுச் சுவற்றை
மேய்ந்துக் கொண்டிருந்தன. ப்ரேம் செய்யப்பட்ட ஒரு பழைய கருப்பு வெள்ளை
புகைப்படத்தில் ஒருத்தர் கோட்டு-சூட்டு போட்டு டையெல்லாம் கட்டி போஸ்
கொடுத்துக்கொண்டிருந்தார். உன்னுடைய மூதாதையராக இருக்கக்கூடும். இதயவேந்தன்
ரசிகர் மன்றம் சார்பாக கொடுக்கப்பட்ட தினசரி நாட்காட்டி பல மாதங்களாக தேதி
கிழிக்கப்படாமல் தொங்கிக்கொண்டிருந்தது. பீரோ கண்ணாடியில் கர்த்தர்
ஜீவித்துக்கொண்டிருந்தார். நானில்லாத உங்களுடைய குடும்ப புகைப்படம். அதில்
உன்னுடைய வெட்கச்சிரிப்பு. ஷோ கேஸ் சாயலில் இருந்த அலமாரியில் சில கைவினை
பொருட்கள். இன்னொரு அலமாரியில் ஒருக்களித்து சாத்தி வைக்கப்பட்டிருந்த
தடிமனான மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். அருகிலேயே உட்புறமாக
அடைக்கப்பட்டிருந்த ஒரு அறையிலிருந்து கொஞ்சம் மின்விளக்கு வெளிச்சம்
கசிந்துக்கொண்டிருந்தது. சர்வநிச்சயமாக நீ அந்த அறைக்குள்ளே தான்
இருக்கவேண்டுமென எனக்குள்ளிருக்கும் விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தார். ஒரு
முழு சுற்றை முடித்துக்கொண்டு என் பார்வை தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்க,
கீழே அமர்ந்திருந்த பெண்கள் தங்களுக்குள் ஏதோ சொல்லி
சிரித்துக்கொண்டார்கள். ஏதாவது ஜோக் அடித்திருப்பார்கள் என்று
நினைக்கிறேன்.
அதற்குள்
உன் அப்பாவிற்கு அருகில் அமர்ந்திருந்த உறவினர் உன்னைப்பற்றிய பெருமைகளை
எடுத்துரைக்க ஆரம்பிக்க, என்னுடைய கவனம் ஆங்கே நிலை கொண்டது. நீ சின்ன
வயதிலிருந்தே படிப்பில் ரொம்ப சுட்டியாமே ! டீச்சருக்கே சொல்லிக்
கொடுப்பியாம். பக்கத்து வீட்டு குழந்தைகளை எல்லாம் நீதான் பாத்துப்பியாம்.
ஒருமுறை ஸ்கூலுக்கு அப்துல் கலாம் வந்தபோது உன்னைப் பாராட்டி பேனா
பரிசளித்ததை உன் தந்தையார் உறவுக்காரருக்கு நினைவூட்டும் தொனியில் என்னிடம்
தெரிவித்தார். நீயே எம்ப்ராய்டரி போட்டது என்று ஒரு ஃப்ரேம் செய்த மயில்
படத்தையும் ஸ்வீட் ட்ரீம்ஸ் தலையணை உரையையும் காட்டி
சிலாகித்துக்கொண்டிருந்தார் உன் தந்தை. மேலும், உன்னை மருத்துவச்சியாக்க
வேண்டுமென நீ பிறந்தபோதே முடிவெடுத்து விட்டதாக சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்த கனவு நினைவான சந்தோஷமும் பெருமையும் அவருடைய கண்களில் தெரிந்தன.
சமையலறையில் இருந்து எட்டிப்பார்த்து ஒரு சிநேகமான புன்னைகையை உதிர்த்தார்
உன்னுடைய அம்மா. அநேகமாக என்னுடைய காத்திருப்பின் வலியை அவர்
உணர்ந்திருக்கக்கூடும்.
நம்மவர்களுக்கு
பேச்சை எங்கே தொடங்கினாலும் சினிமாவிலோ அரசியலிலோ கொண்டுவந்து விடும்
கெட்டப்பழக்கம் எப்பொழுதும் உண்டு. கப்பலோட்டிய தமிழனில் சிவாஜியின்
நடிப்பைப் பற்றி உன்னுடைய அப்பாவும், நாடோடி மன்னனில் எம்.ஜி.யாரின் கத்தி
சண்டையைப் பற்றி என்னுடைய அப்பாவும் சூழ்நிலைக்கு சம்பந்தமே இல்லாமல் மொக்கை
போட்டுக்கொண்டிருந்தது எனக்கு அசுவாரஸ்யத்தையும் அசவுகரியத்தையும்
ஏற்படுத்தியது. சண்டை போடாதீங்க ஏட்டய்யா என்று ஆட்டையை கலைக்க எத்தனித்தாலும் நாகரிகம் கருதி அடக்கியே வாசித்தேன். இப்படியே ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி ? பொண்ண வரச்சொல்லுங்கப்பா என்று
சபையில் எனக்காக ஒரு மீசை குரல் எழுப்பியது. மீசைக்கு கெடா வெட்டி பொங்கல்
வைக்க முடியாவிட்டாலும் ஒரு குவாட்டராவது வாங்கித்தர வேண்டுமென்று
மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். உட்புறமாக அடைக்கப்பட்டிருந்த கதவு
திறக்கப்படும் சத்தம் கேட்டது.
அடர்
சிகப்பு நிற பட்டுப்புடவையில் அலங்காரத்துடன் நீ அன்னநடை போட்டு
அறையிலிருந்து வெளிவந்த தருணம் மின்சார கனவு போல இருந்தது. பிண்ணனியில்
ஸ்ட்ராபெர்ரி கண்ணே... விண்வெளி பெண்ணே... என்ற பாடல்
ஒலித்துக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு மட்டும் ஏற்பட்டது. வீட்டு வாசலில் ஏன் கோவில் போல செருப்புகள் இரைந்து கிடந்தன ?, பட்சணங்களுக்கு மத்தியில் ஏன் ஜாங்கிரியை வைக்கவில்லை ? போன்ற உண்மைகள் புரிந்தன. “Hi... Im
Prabhakar...” என்று கம்பீரமாக எழுந்து நின்று உன்னுடன் கைகுலுக்க
வேண்டுமென என் வீட்டுக்கண்ணாடி முன்பு இருபத்தேழு முறை ஒத்திகை
பார்த்திருந்தேன். ஆனால் உன்னைக் கண்டதும் நாக்கு குறழ... ச்சே... குழற
ஆரம்பித்துவிட்டது. நான் உன்னை பார்க்கிறேனா என்று என்னையே
பார்த்துக்கொண்டிருந்த அப்பா, “டேய்... பொண்ணை சரியா பாரேன்டா...” என்று
என் காதில் கிசுகிசுத்தார். “நான் பாத்துக்குறேன் பா... நீங்க மொதல்ல
அந்தப்பக்கம் திரும்புங்க...” என்று பெருசை ஆஃப் செய்தேன். பையன், பொண்ணுக்கிட்ட தனியா நாலுவார்த்தை பேசணும்ன்னு ஆசைப்படுறான் மறுபடியும் அதே மீசைதான். டேய் நான் எப்படா சொன்னேன் மீசைக்கு குவாட்டர் கேன்சல். உள்ளுக்குள் பதட்டமாக இருந்தாலும்கூட ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்தது.
நேர்முகத்
தேர்விற்கு செல்லும் பணியாளனின் மனநிலையில் தான் அறைக்குள் நுழைந்தேன்.
நான் உன்னைப் பார்க்கும்போது நீ மண்ணையும், நான் மண்ணைப் பார்க்கும்போது நீ
என்னையும் பார்ப்பதிலேயே பத்து நிமிடங்கள் ஓடிவிட்டன. யார் முதலில் பேச்சை
துவங்குவது என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய மரணப்படுக்கையில் பக்கம்
அமரப்போவது நீயேதான் என்று மட்டும் உள்ளுணர்வு ஆணித்தரமாக சொல்கிறது.
அருகில் வந்து உன்னை இறுக்கி அனைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை வரவழைத்து எனக்கு பிடிச்சிருக்கு... உங்களுக்கு ? என்று
கேட்டுவிட்டேன். அதை உன்னுடைய காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லாத
அளவிற்கு மெதுவாகத் தான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறேன். நினைவு
திரும்பிய போது மீண்டும் சோபாவில் அமர்ந்து உன்னுடைய பதிலுக்காக
காத்திருந்தோம். நீ என்னம்மா சொல்லுற ? என்றார்
என் மாமனார். சரி என்ற சொல்லுக்கேற்ப ஒரு மெல்லிய தலையசைப்பு. சட்டென்று
மக்காவ் டவரிலிருந்து பஞ்ஜி ஜம்ப் அடித்தது போன்றதொரு ஜில்லிப்பு. அந்த
நொடியிலிருந்து நான் வாழத் துவங்கியிருந்தேன்.
அன்று
உங்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போது உன் அப்பாவின் கையை பற்றிக்கொண்டு
“தேங்க்ஸ் மாமா...” என்று சொன்னேன். ஒரு அழகு பதுமையாய் பெற்றெடுத்து
எனக்கே எனக்காக கொடுத்ததற்குத்தான் தேங்க்ஸ் சொல்கிறேன் என்ற பேசிக் நாலேஜ்
கூட இல்லாத என் மாமனார் ஒன்றும் புரியாமல் தலை சொறிந்தபடி சரிங்க மாப்ள
என்று அசடு வழிந்தார்.
இப்படியெல்லாம் எழுத முடியாம பண்ணிட்டியே என் அத்த பெத்த ரத்தினமே !
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
36 comments:
இப்படியெல்லாம் எழுத முடியாம பண்ணிட்டியே என் அத்த பெத்த ரத்தினமே !///
அடங்....
அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் பிரபா....
பிரபா, அழைப்பிதல் வாசித்தேன். வாழ்த்துக்கள்... உம் அத்தை பெத்த ரெத்தினத்தொடு மகிழ்வோடு வாழ வாழ்த்துக்கள்...
பெண் பார்க்கும் படலம் இதனை உயிர்ப்போடு எழுதி உள்ளீர்களே கலக்கல்
//என் மனக்கண்ணில் ரைட்டர் பேயோனுடைய ப்ரோபைல் படம் தோன்றி மறைந்தது. //
??????????சூப்பர்
அடப்பாவி! மேரேஜ் டேட் ஃபிக்ஸ் ஆகியிருக்கற இந்த நேரத்துல அன்புள்ள மனைவிக்குன்னு ஆரம்பிச்சு எழுதியிருக்கயேன்னு சுவாரஸ்யமா அனுபவத்தப் படிச்சுட்டு வந்தா இப்படியா முடிப்ப? கல்யாணம் ஆவட்டும்... உனக்கிருக்கு!
மணவாழ்வில் அடியெடுத்து வைக்க இருக்கும் நீங்கள் இருவரும் என்றென்று் மகிழ்வுடன் வாழ என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பிரபா!
தங்களுடையது காதல் திருமணமா இல்லை நிச்சய திருமணமா? கொலப்பிவிட்டீர்களே பிரபா..
பிரபா உம்மில் இருந்து வெளிவந்த எழுத்துக்களில் மிகச் சிறந்த எழுத்துக்கள் இவை தான் என்று நினைக்கிறன்... அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை....
கடைசியில் பத்து நிமிடம் பேச வேண்டும் என்று சொல்லி பேச முடியவில்லை என்ற இடங்களில் கண்டுபிடித்துவிட்டேன் எதோ டகால்டி வேலை தான் என்று
ஏலே கலக்கிபுட்டியே டே ...கல்யாணம் முடியிற வரைக்கும் இந்த பதிவ உன் மாமனார் கிட்ட காட்டிராத டே ...அப்புறம் மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவார் ன்னு சொல்லி கல்யாணத்த நிறுத்திற போறாவ .......
பயபுள்ள எவ்வளவு ரொமாண்டிக்கா சிந்திச்சிருக்கு...சம்பதப்பட்டவங்க...
கமெண்ட்ட போட்டு பயபுள்ளைய ஆறுதல் படுத்தவும்...!
சுகன்யா
சுகன்யா
சுகன்யா!
Superb Narration...:)
ரைட்டர் பேயோனுடைய ப்ரோபைல் படம்//// rofl
இப்படியெல்லாம் எழுத முடியாம பண்ணிட்டியே என் அத்த பெத்த ரத்தினமே !//
நாலாவது பத்தி வாசிக்கும்போதே முடிவில் உங்கள் வுட் பி சுடிதார்ல வந்து ஹாய் பிரபான்னு சொல்வாங்கன்னு நினைச்சேன்...
Even then you stumped me...
உங்கள் மின் அழைப்பு கிடைத்தது...
இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ...ADV திருமண வாழ்த்துக்கள் பிரபா...
BTW,This is your best piece till date...no wonder inspired by அத்த பெத்த ரத்தினமே...
வாங்க வாங்க வந்து சங்கத்துல்ல கலங்க கல்யாணம் ஆனா எங்கள மட்டும் பெருசுன்னு கிண்டல்லு
very impressive...good writing... congrats
வாழ்த்திய, பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...
ரீச்சிங் அவுட், ஃபினிஷிங் டச் புரியும்படி எழுதவில்லை என்று நினைக்கிறேன்... என்னுடையது காதல் திருமணம் தான்... அதனால் பெண் பார்க்கும் படலம் நடைபெறவில்லை... அந்த ஏக்கத்தின் விளைவே இந்த இடுகை...
நல்ல ரீச்சிங் அவுட், ஆனா காதலுக்கு மேட்சிங் அவுட். அதனாலென்ன? பொண்ணு பார்க்கும் படலத்தை விட்டவர்களின் மனதை தொட்டதாய் இருந்து விட்டுப் போகிறது.
அன்பின் பிரபா - பெண் பார்க்கும் - பார்த்த படலத்தினை அழகாக விவரித்தமை நனறு - அத்த பெத்த ரத்தினம் - காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடிந்தது நன்று - அழைப்பிதழ இணையத்தில் வந்தது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பையன், பொண்ணுக்கிட்ட தனியா நாலுவார்த்தை பேசணும்ன்னு ஆசைப்படுறான் மறுபடியும் அதே மீசைதான். டேய் நான் எப்படா சொன்னேன் மீசைக்கு குவாட்டர் கேன்சல்.
mass scene nanba...
Super...super...super
Wish u a happy married life
Lovely Praba :)
Wishing you and Suganiya happy married life :)
உன்னோட மேட்டரெல்லாம் ஓரளவு ஏற்கனவே தெரியும்ங்கறதால தலைப்பிலேயே இது புனைவுன்னு புரிஞ்சுதான் படிக்க ஆரம்பிச்சேன்..
ரசித்த இடம்: குற்றால துண்டு மாராப்பு ஆனதின் வர்ணிப்பு.. அடே...அடே அடே...
நல்வாழ்த்துகள்.
அந்தளவு ஜொல்லுவிட்ட மாப்பிள்ளை அத்தை மகளிடம் காலி இனி சினிமா பகிர்வு காலி!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!வாழ்த்துக்கள் மாப்பூ!
Super boss
படலம் பிரமாதம் பிரபா ...!
//என்னுடையது காதல் திருமணம் தான்...//
அடடா ...! சிங்கம் தானே போயி சிறையில சிக்குடுச்சே ...!
// அதனால் பெண் பார்க்கும் படலம் நடைபெறவில்லை... அந்த ஏக்கத்தின் விளைவே இந்த இடுகை...//
அதானே, பெண் பார்க்க போயிருந்தா இடுகையே வந்திருக்காதே ...!
எனிவே , மணம்வாடும் மணமானோர் மன்றத்திற்கு மனதார வரவேற்கிறோம் ...!
அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் பிரபா.
ada paavame naan kooda unmaiyoonnu ninachi padichi ten nanba ok ok etho aathangam pola pillaiku humm ellathukkum revit kathirukku praba wait & see ha ha ha ha ........... nice writing koodave irunthu partha mathiriyaana feelings pa
balamadhu06@gmail.com
பிரமாதம் பிரபாகரன்.கடைசி பஞ்ச் எதிர்பாராதது என்றாலும் அதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் அற்புதமான சிறுகதை..வித்தியாசாமான நடையால் கட்டி போட்டுவிட்டாய்..
சீனு சொன்ன முதல் வரிகளை ஆமோதிக்கிறேன்.
வாழ்த்துக்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபாகரன்!
//மீசைக்கு குவாட்டர் கேன்சல்.
சிரிப்ப அடக்க முடியல..
\\இப்படியெல்லாம் எழுத முடியாம பண்ணிட்டியே என் அத்த பெத்த ரத்தினமே !\\ கதை முழுசும், இது மாப்புவோட அத்தை பெண்ணாச்சே, எப்படி இதெல்லாம் என்ற குழப்பம்......... இந்த வரியில் தீர்ந்தது. எனக்கு அழைப்பு தரலையே மக்கு மாப்பு.............
Anyway Congratulations.
அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு முறை ஏற்படும் ஏற்பட்டிருக்கும் இனிய அனுபவம்.
முதல் இரவில் வாழ்க்கையின் இறுதி நாட்களை சிந்தித்தது என்னை பல முறை வாசித்து யோசிக்க வைத்தது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தெவதாஸ்
நல்ல ஒரு சிறு கதை. கோபாலகிருஷ்ணா சாரின் அறிமுகம் பார்த்து வந்தேன் வாழ்த்துக்கள்
Post a Comment