17 June 2013

கோபுரங்கள் சாய்வதில்லை


அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழ் சினிமாவை விரும்பிப் பார்க்கும் யாரும் அமைதிப்படையை புறக்கணித்திருக்க வாய்ப்பில்லை. அதில் இடம்பெற்ற வாக்கு எண்ணிக்கை காட்சி காலத்தை வென்ற நகைச்சுவை. தமிழ்த்திரையில் அரசியல் நையாண்டிக்கு ஒரு உச்சப்பட்ச எடுத்துக்காட்டாக அமைதிப்படையை குறிப்பிடலாம். அதன் வெற்றிக்கு காரணம் இரண்டு பேர். ஒருவர் நடிகர் சத்யராஜ், இன்னொருவர் இயக்குநர் மணிவண்ணன்.

எனக்கு விவரம் தெரிந்து நான் திரையரங்கில் பார்த்த முதல் திரைப்படம் ‘அமைதிப்படை’. நன்றாக நினைவிருக்கிறது. ஒரு விடுமுறை தினத்தில் நான் உறவினர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தேன். என்னுடைய அப்பா என்னை சினிமாவிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். அந்த சமயத்தில் ‘திருடா திருடா’ வெளியாகி அதன் பாடல்கள் பிரசித்தி பெற்றிருந்தன. சினிமா என்றதும் திருடா திருடாவிற்கு கூட்டிச்செல்லும்படி அப்பாவிடம் கேட்டேன். என் அப்பா சாமர்த்தியமாக அந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று ஏமாற்றி என்னை அமைதிப்படைக்கு அழைத்துச்சென்றார். சமீபத்தில் நாகராஜ சோழன் வெளிவந்தபோது ஒரு மாறுதலுக்காக நான் அப்பாவை அழைத்துச் செல்லலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அது ஒரு சுபமுகூர்த்த வாரயிறுதியில் வெளிவந்ததால் சாத்தியப்படவில்லை. நல்லவேளை !

மணிவண்ணனும் திராவிடர் முன்னேற்ற கழக பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் தான் பிறந்திருக்கிறார். மணிவன்னனுடைய தந்தையார் தி.மு.க.வின் சூளூர் நகர செயலலாராக பணியாற்றியிருக்கிறார். அதனாலேயே அவர் திராவிட கொள்கைகளை கற்று வளர்ந்திருக்கக்கூடும். தன்னுடைய இளமைப்பருவத்தில் தீவிர கம்யூனிச சிந்தனையாளராக மட்டுமில்லாமல் போராளியாக வாழ்ந்திருக்கிறார் மணிவண்ணன். முக்கியமான நக்ஸலைட்டுகளை காவல்துறை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த போது அந்த பட்டியலில் முதல் பெயராக மணிவண்ணின் பெயர் இருந்திருக்கிறது. அவருடைய நண்பர்கள் அவரை சென்னைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். திரைத்துறையில் நுழைந்தபின்னர் கலைஞரின் ஆதரவாளராக அறியப்பட்ட மணிவண்ணன், பின்னாளில் வைகோவுடன் வெளியேறி ம.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இணைந்து பணியாற்றிய மணிவண்ணன் கடைசியாக கலந்துக்கொண்ட இசை வெளியீட்டு விழாவில் கூட தான் இறந்துவிட்டால் தன்னுடைய உடலை இயக்குநர் சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மணிவண்ணனை இயக்குநராக அமைதிப்படை தவிர்த்து அதிக படங்களில் ரசித்ததில்லை என்றாலும் நடிகராக அவருடைய உடல்மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். “மாமிக்கும் எனக்கும் ஒரே சுபாவம்... கூச்ச சுபாவம்” என்று சொல்வதாகட்டும், மிலிட்டரி ஆபீசரான சுந்தர்ராஜன் முன்பு குடித்துவிட்டு கலாட்டா செய்வதாக ஆகட்டும், ராயர் அய்யாவிடம் ரவுசு செய்துவிட்டு ‘எஜ்ஜூஸ் மீ’ என்று பம்முவதாகட்டும் அவருக்கென்று ஒரு தனித்தன்மை தெரியும். அவருடைய வசன உச்சரிப்பு ஏற்ற இறக்கத்தில் ஒரு குசும்பு ஒளிந்திருக்கும்.

திரையிசை கானா பாடல்களில், மணிவண்ணன் ஆட்டம் போட்ட கானா பாடல்கள் இன்னும் ஸ்பெஷல். லவ்வாப்பழம் புடுங்கித் தந்து நைஸு பண்ண பார்த்தேன் பார்த்தேன்’ என்று விசித்திராவுடன் மணிவண்ணன் ஆடும் எட்டுப்பட்டி ராசா பாடலை மறக்க முடியுமா ? இன்னொரு படத்தில் அஜித்துக்கு அப்பாவாக நடித்திருப்பார். காதல் தோல்வி சோகத்தில் இருப்பார் அஜித். மணிவண்ணன் அவரை சமாதானப்படுத்தும் பொருட்டு தன் பரிவாரங்களுடன் சேர்ந்து கானா பாடுவார். அவரும் அவரது ஆட்களும் அஜித்தை குடிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். ஒருவழியாக, இரண்டு பல்லவி முடியும்போது அஜித் சரக்கு பாட்டிலை வாங்கி ராவாக குடிப்பார். நட்புணர்வு கொண்ட தந்தை வேடங்களில் அவரை அதிகம் ரசித்திருக்கிறேன். வசீகரா, ஆதி படங்களில் விஜய்யின் தந்தையாக நடித்திருப்பார். விஜய் அவரை அப்பா என்றழைக்காமல் மணி என்று பெயர் சொல்லி அழைப்பார், இரண்டு படங்களிலும்.

மணிவண்ணன் அடிக்கடி என்னுடைய தந்தையை நினைவூட்டுவார். இருவருக்கும் நிறைய உடல்மொழி ஒற்றுமைகள். இருவரும் நக்கல் பிடித்த பேர்வழிகள். கொள்கை ரீதியாகவும் கூட இருவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கலாம். இருவருடைய தந்தையும் தி.மு.க.விற்காக பணியாற்றியிருக்கிறார்கள். இருவரும் அரசியல்ரீதியாக தவறான தலைமையை தேர்ந்தெடுத்தவர்கள். ‘இன்னும் இருபத்தைந்து படங்கள் எடுத்து உங்களையெல்லாம் இம்சை பண்ணுவேன்’ என்று நாகராஜ சோழன் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் மணிவண்ணன். அப்படியிருக்கும்போது அவருடைய திடீர் மரணம் உண்மையில் என்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம் போல துக்கத்தில் ஆழ்த்துகிறது.

விகடன் பேட்டியின் காரணமாக நிறைய பேர் பாரதிராஜாவை விமர்சிக்கிறார்கள். மணிவண்ணனின் மறைவிற்கே கூட பாரதிராஜா ஒரு காரணம் என்கிறார்கள். எனக்கென்னவோ அது அப்படியொன்றும் ஏற்புடையதாக தோன்றவில்லை. திரைத்துறையை பொறுத்தமட்டில் மைக் கிடைத்துவிட்டால் தமக்கு உண்மையில் பிடிக்காதவர் என்றாலும் கூட எப்படியெல்லாம் பாராட்டி சீராட்டி புளுகுவார்கள் என்று நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அது அவர்களுடைய சூழ்நிலை என்று கூட சொல்லலாம். உச்ச நடிகர் ஒருவரிடம் போய் இடிச்சபுளி செல்வராஜை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால் கூட அவர் ஒரு சிறந்த நடிகர் என்றுதான் சொல்லியாக வேண்டும். எனக்கு ரஜினியை பிடிக்காது என்று சொல்லிவிட்டு எந்த புதுமுக நடிகரும் இங்கே நடித்துவிட முடியாது. அப்படியிருக்கும் போது பாரதிராஜா அவருடைய மனதில் தோன்றியது தோன்றியபடியே பேசியிருப்பது கண்டனத்திற்குரிய செயல் அல்ல. என்ன ஒன்று அவருடைய கோபத்தை பொதுவெளியில் பகிராமல் நேரடியாக மணிவன்னனிடமே வெளிப்படுத்தியிருக்கலாம். அது பாரதிராஜாவுடைய பண்பு என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான். எழுத்தாளர் ஞாநி சொன்னதுபோல அரண்மனை சோறு ஒத்துக் கொள்ளாத பிச்சைக்காரன் என்று பாரதிராஜா சொன்னது மணிவண்ணன் மீதான வசவு அல்ல. அது அவருக்கான நிஜமான பாராட்டு. ஏனென்றால் அரண்மனைகளுக்குள் தன் உடல் நுழையும் வாய்ப்பு கிடைத்தபோதும் மணிவண்ணன் மனம் சக பிச்சைக்காரர்களுக்காகவே சிந்திக்கக் கூடிய மனம்.

தொடர்புடைய சுட்டிகள்:

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

11 comments:

Ponmahes said...

நட்பு கலக்கிட்ட..... ல ....
பதிவிற்கு பொருத்தமான தலைப்பு..... அருமை ...

அவருடைய திடீர் மரணம் உண்மையில் என்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம் போல துக்கத்தில் ஆழ்த்துகிறது......

அஞ்சா சிங்கம் said...

கோகுலத்தில் சீதை .........

கும்மாச்சி said...

நல்ல குணசித்திர நடிகர், அமைதிப்படை மறக்க முடியாத படம்தான்.

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.

சீனு said...

அவரது நையாண்டிப் பேச்சு மற்றும் மாடுலேஷன் எனக்கும் மிகவும் பிடிக்கும்...நெருகிப் பழகாத போதும்..பலநாள் பழகிய ஒருவரை இழந்தது போன்ற உணர்வு...

ராஜி said...

சினிமாத் துறையில் இருந்தும் சிக்கலில் அதிகம் சிக்காமல் வாழ்ந்து காட்டியவர்.

சீனு said...

ஞானி கூறிய வார்த்தைகள் அருமை.. . (அப்போதே கூற மறந்துவிட்டேன் )

middleclassmadhavi said...

மனதிலிருந்து வந்து, மனதைத் தொட்ட வரிகள்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான அஞ்சலிக் கட்டுரை! ஆழ்ந்த இரங்கல்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...


மணிவண்ணன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

காலம் கடந்த நகைச்சுவை என்பது சரியா?

Unknown said...

எனக்கு இயக்குனராகவும் ஒரு நல்ல நடிகராகவும் அவரை பிடிக்கும்

Anonymous said...

nanum avarudaiya nadippukku rasigan..