அன்புள்ள வலைப்பூவிற்கு,
தீக்குளிக்கும் பச்சை மரம், சற்றே இலக்கிய நயம் மிகுந்த தலைப்பே
என்னை திரையரங்கிற்கு இட்டுச்சென்றது. மற்றபடி படத்தைப் பற்றி யாதொரு தகவலும் யான்
அறியேன், கதாநாயகி சராயு என்கிற வல்லிய கேரளத்து பெண்குட்டி என்பதைத் தவிர. ஆனால்
கவர்ச்சி காட்சிகள் இல்லை என்பது போஸ்டரிலேயே தெரிந்தது. திரையிடும்
நேரத்தை உறுதி செய்துகொள்ளும் பொருட்டு அகஸ்தியா திரையரங்கிற்கு போன் செய்தேன். அழைப்பை
ஏற்றவர் படத்தின் தலைப்பை தீக்குளிக்கும் மச்சக்காரன் என்று ஏதோ பிட்டுப்பட
தலைப்பை போல பிழையோடு சொன்னார். காலைக்காட்சிக்கு அகஸ்தியா சென்றபோது திரையரங்கில்
வழக்கத்தை விடவே அதிகமான ஜனத்திரள் தென்பட்டது. அத்தனையும் வடசென்னைக்கே உரித்தான
பாமர, உழைக்கும் வர்க்க, அடித்தட்டு மக்கள். அப்போது அங்கே வந்த திரையரங்க பணியாள்
தன்னுடைய நண்பரான ஒரு உழைக்கும் வர்க்கத்திடம் “படம் பார்த்தா நீ கண்டிப்பா
அழுதுடுவ... எப்பேர்ப்பட்ட கல்லு மனசா இருந்தாலும் கடைசி சீனுல அழுதுடுவ...” என்று
சொல்லிவிட்டுப் போனார். அதுதான் படத்தின் மீது என் முன்பு வைக்கப்பட்ட முதல்
விமர்சனம்.
ஒரு விவசாயியுடைய தற்கொலை, பள்ளிச்சிறார்கள் இணைந்து ஆசிரியரை
அடித்துக்கொல்வது என்று சற்று ரணகளமாகத்தான் படம் துவங்கியது. ஆனால், அது உண்மையான
‘ரணகளம்’ அல்ல என்பதை இரண்டாம் பாதியில் தெரிந்துக்கொண்டேன்.
விவசாயி நிழல்கள் ரவி, அவருடைய வெத்துவேட்டு தம்பி, அராத்து தம்பி
மனைவி என்று வளவளவென்று கதை சொல்ல அலுப்பாக இருக்கிறது. அதனால் கதையின்
முன்பகுதியை ஸ்கிப் செய்துவிடுகிறேன். Good, Bad and Evil – மாதிரி மூன்று
பள்ளிக்கூட சிறுவர்கள் நட்பாக திரிகிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மூவரும்
சேர்ந்து அவர்களுடைய ஆசிரியரை கொன்றுவிட, சீர்திருத்தப் பள்ளியில்
தள்ளப்படுகிறார்கள். ஆறு வருடங்களுக்கு பின்பு வெளியே வருபவர்களில் இருவர் தவறான
பாதைக்கு செல்ல, நாயகன் மட்டும் நல்லிதயத்தோடு சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கே
நாயகியுடன் காதல் கொண்டு திருமணம் செய்துகொள்கிறார் என்பது மெயின்ஸ்ட்ரீம் கதை
அல்ல. அதன் பின்பு நாயகன் பிழைப்புக்காக பிணவறையில் பணிக்கு சேர்ந்து அங்கே
நடைபெறும் குரூரமான சம்பவங்களும் அது நாயகனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும்
பாதிப்புகளுமே பிரதான கதை.
கலைப்பட பாணியில் மிதவேகத்தில் பயணிக்கிறது திரைக்கதை. பெரிய
சுவாரஸ்யங்கள் இல்லையென்றாலும் இந்தக்காட்சிக்கு ஏதாவது குறியீடு இருக்கக்கூடும்,
அந்தக்காட்சி படத்தின் பிற்பகுதியில் வரவிருக்கும் ஏதேனும் சம்பவத்திற்கான
தொடுப்பாக இருக்கலாம் என்று நாமாகவே எதையாவது யூகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாயகன்
நேர்மையாக வாழுகிறார் என்று சொல்லப்படுகிறது, ஆனால் சோற்றுக்கு என்ன செய்கிறார்
என்று சொல்லப்படவில்லை. அவரு ரொம்ப நல்லவருன்னு அப்பா சொன்னாரு என்ற மொன்னையான
காரணத்தை வைத்துக்கொண்டு நாயகனை வளைய வரும் வழக்கமான நாயகி. இடையிடையே தான்
காதலிக்கு ஏற்ற இணையில்லை என்பதை உணர்ந்து விலகும் காதலன், தன்னுடைய குடும்ப
சூழ்நிலையை கருதி காதலை நாகரிகமாக மறுக்கும் பெண் என்று ஆங்காங்கே சில நெகிழ்வான
காட்சிகள். நாயகன் – நாயகி திருமணத்திற்கு பிறகு, குடும்ப சூழ்நிலை கருதி, அதிக
பணம் கிடைக்கும் பிணவறை பணியாளாக வேலைக்கு சேர்கிறார். பணியில் சேர்ந்து முதல்
பிணத்தை அறையில் இறக்கி வைத்ததும் அப்படியே ஃப்ரீஸ் செய்து இடைவேளை போடுகிறார்கள்.
முதல் பாதியை பொறுத்தவரையில் பருத்தி வீரன் காலம்தொட்டே பார்த்து சலித்த கதைதான்
என்றாலும் கூட படத்திற்கு செய்த விளம்பரங்களோடு ஒப்பிடும்போது நல்ல படமாகவே
தோன்றியது.
நாயகனாக சன் மியூசிக் பிரஜின். சத்தியமாக அடையாளம் தெரியவில்லை. ஆரண்ய
காண்டம் சோமசுந்தரத்தை நினைவூட்டும் தோற்றம். சராயுவின் ஸ்பெஷாலிட்டி அவருடைய
இரண்டு பெரிய கண்கள். ஆனால் சந்திரிகா வேடத்திற்கு அவர் பொருத்தமில்லை. குறைந்தபட்சம்
கார்வண்ண ஒப்பனையாவது செய்திருக்கலாம். பிரஜின் சித்தியாக வரும் நடிகை ஒரு good find !
மற்ற கதாபாத்திரங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. படத்தில் டாப்பு டக்கரு
டாப்பு டக்கரு என்றொரு பாடல் வருகிறது. அதன் துள்ளிசையும் நடன அசைவுகளும்
நம்முடைய சதையையும் லேசாக அசைத்துப் பார்க்கின்றன.
இடைவேளையில் வாங்கிய கோக்கை குடித்து முடிப்பதற்குள் கதை பிணவறைக்குள்
நுழைந்து குரூரமான காட்சிகள் திரையில் விரிகின்றன. குமட்டிக்கொண்டு வருகிறது. சில
தொழிலை சாராயம் உள்ளே சென்றால்தான் செய்ய முடியும் என்கிற பிணவறை பணியாளரின் வசனம்
எத்தனை உண்மை. போலவே, தீ.ப.ம.வை பார்க்கும் ரசிகர்களும் போதையேற்றிக் கொண்டுதான்
செல்ல வேண்டும். முதலில் பிரேத பரிசோதனை. அப்புறம் இறந்தவர்களின் உறுப்புகளை
திருடுவது, கொலைகளை மறைத்து பிரேத பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதுவது,
உச்சக்கட்டமாக இறந்த உடலுடன் உறவு கொள்வது என்று தொடர் அதிர்ச்சி கொடுத்து மிரள
வைக்கிறார்கள். அதீத வன்முறை காட்சிகளுடன் திரைப்படம் நிறைவுபெறுகிறது.
பிணத்துடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் NECROPHILIA என்னும் மனநோயை
பற்றி தமிழ் சினிமாவில் காட்சி வைத்திருப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். சமீபத்தில்
வெளிவந்த பொல்லாங்கு திரைப்படத்தில்
கிட்டத்தட்ட அப்படியொரு காட்சி இருந்தது. மேலை நாடுகளை பொறுத்தவரையில்
எண்பதுகளிலேயே நெக்ரோபிலியாவை மையமாக கொண்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்த்திரையில்
முதன்முறையாக அப்படியொரு காட்சியை பார்க்கும்போது பகீரென்று இருக்கிறது. பிணவறை
பணியாளர் ஒரு முப்பதை கடந்த பெண் உடலுக்கு நகச்சாயம், உதட்டுச்சாயம் பூசி
மல்லிகைப்பூ வைத்து விடும்போதே அடுத்ததாக வரப்போகிற காட்சி புரிந்து
அதிர்ச்சியூட்டுகிறது. நெக்ரோபிலியா மட்டும்தான் என்றில்லை. படத்தின் இரண்டாம்
பாதி முழுக்கவே பிணத்தை அறுப்பது, மனைவியின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்யும்படி
கணவனை கட்டாயப்படுத்துவது, கட்டிங் மிஷின் வைத்து ஆணின் அந்த இடத்தை அறுப்பது,
இறுதியில் அதே மிஷினை பயன்படுத்தி தலைகொய்து தற்கொலை செய்துக்கொள்வது என்று
திரையெங்கும் தக்காளி ஜூஸு. எப்படி இப்படியொரு படம் சென்சாரை தாண்டி
வந்திருக்கிறது என்று புரியவில்லை.
எதற்காக இத்தனை வன்முறை ? படத்தின் வாயிலாக இயக்குநர் என்னதான் சொல்ல
வருகிறார் ? ஒரு மசுருமில்லை. சொம்மா வித்தியாசமாக, பரவலாக பேசப்பட வேண்டும்
என்பதற்காகவே எடுக்கப்பட்டது போல தோன்றுகிறது. குறிப்பாக ஒரு காட்சியில் தேர்ந்த
பிணவறை பணியாள் ஒருவர் புதிய பணியாளருக்கு தொழில் கற்றுக்கொடுக்கிறார்.
எப்படியென்றால் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ஆங் மண்டைய அப்படித்தான்
பொளக்கணும், அப்படியே நெஞ்சை கிழிக்கணும், கொடலை உருவி வெளிய போட்றனும் என்றெல்லாம்
வசனம் பேசியபடி. அந்தவகையில் தீக்குளிக்கும் பச்சை மரம் மேற்கத்திய கல்ட் படங்களை
பார்த்து அதன் சாயலில் எடுக்க வேண்டுமென்று முனைந்து புலியை பார்த்து சூடு
போட்டுக்கொண்ட பூனை !
அதேசமயம் தனிப்பட்ட முறையில் தீக்குளிக்கும் பச்சை மரம் படத்தில் சில
அனுகூலங்களும் தென்படுகின்றன. சிறு வயதில் நம் மீது சேற்றை வாறி இறைத்த சக மாணவன்,
பிரம்படி கொடுத்த வாத்தியார் போன்றவர்களின் மீதான நம்முடைய கோபத்திற்கு தீ.ப.ம
படத்தின் வன்முறை காட்சிகள் ஒரு வடிகாலாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு
நான் பார்த்த GROTESQUE என்கிற ஜப்பானிய
திரைப்படம் இன்றளவும் கூட என்னுடைய வெளிப்படுத்த இயலாத கோபங்களுக்கு வடிகாலாக
இருந்து வருகிறது. அந்த வரிசையில் இனி தீக்குளிக்கும் பச்சை மரத்தையும்
சேர்த்துக்கொள்ளலாம்.
தீக்குளிக்கும் பச்சை மரம் – தமிழ் சினிமாவில் நெக்ரோபிலியாவை காட்சி
படுத்தியமைக்காக மட்டும் பாராட்டலாம். இதுவே செல்வராகவன் மாதிரியான இயக்குநரிடம்
கிடைத்திருந்தால் ஆழமான கதையம்சத்துடன் கூடிய அருமையான சினிமா ஒன்று ரசிகர்களுக்கு
கிடைத்திருக்கும்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
10 comments:
/ தீக்குளிக்கும் மச்சக்காரன் என்று ஏதோ பிட்டுப்பட தலைப்பை போல பிழையோடு சொன்னார்./
ஆரோகணம் பாத்துட்டு போஸ்டரை காட்டி 'அரக்கோணம்' பாத்தேன்னு ஒருத்தர் சொன்னாரு எனக்கு.
/கலைப்பட பாணியில் மிதவேகத்தில் பயணிக்கிறது திரைக்கதை./
கலைப்படம் எப்பய்யா ஆமைவேகத்துல இருந்து மிதவேகத்துக்கு கன்வர்ட் ஆச்சி??
/பிணத்துடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் NECROPHILIA என்னும் மனநோயை பற்றி தமிழ் சினிமாவில் காட்சி வைத்திருப்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்/
இந்த மாதிரி சைக்கோ தகவல்களை சொல்ல உன்ன விட்டா ஆளே இல்ல பிலாசபி.
/இதுவே செல்வராகவன் மாதிரியான இயக்குநரிடம் கிடைத்திருந்தால் ஆழமான கதையம்சத்துடன் கூடிய அருமையான சினிமா ஒன்று ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும்./
ஆயிரத்தில் ஒருவன் ஒன்னு போதாது.
/ஜனத்திரள், மெயின்ஸ்ட்ரீம், துள்ளிசையும், அனுகூலங்களும்/
நடத்து மாப்ள!!
ஆஹா இப்படி வன்முறைகளையும் சகிச்சுக்கொண்டு படம் பார்த்த கில்லாடி நீங்க:))))))
வன்முறை காட்சிகளோட எப்படி படம் முழுசா பார்த்தீங்க!!! விமர்சனம் நன்று...
தம்பி உனக்கெல்லாம் வீட்டுல தட்டுல சாப்பாடு போடுறவங்கள உண்மையிலே கைய .. எடுத்து ஆயிரம் கும்பிடு போட்டாலும் தகும் ....
//இதுவே செல்வராகவன் மாதிரியான இயக்குநரிடம் கிடைத்திருந்தால் ஆழமான கதையம்சத்துடன் கூடிய அருமையான சினிமா ஒன்று ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். //
ayyo amma! ungaludaiya arivu... pullarikka vaikkuthu.
//அத்தனையும் வடசென்னைக்கே உரித்தான பாமர, உழைக்கும் வர்க்க, அடித்தட்டு மக்கள். //
தேவையற்ற இந்த வரி எதற்கு?
பொறுக்கிகளிடம் உள்ள பயமா ? அவர்கள் பாமரர்கள் அல்ல குடிகார பொறுக்கிகள்....உழைக்கும் .வர்க்கம் அல்ல...கொள்ளையடிக்கும் திருடர்கள்...அடித்தட்டு மக்கள் அல்ல....அடித்து உண்டு வாழும் திருடர்கள்....
Post a Comment