4 November 2016

கொல்லிமலை - அருவிகள்

அன்புள்ள வலைப்பூவிற்கு,


கொல்லிமலையில் முக்கிய போக்கிடம் மற்றும் பிரதான அருவியான ஆகாயகங்கையை பற்றி ஏற்கனவே முந்தைய கட்டுரையொன்றில் பார்த்தோம். ஆகாயகங்கை அல்லாமல் வேறு சில அருவிகளும் கொல்லிமலையில் உண்டு.

முதலாவது, மாசிலா அருவி. மாசிலா அருவி சென்றடைய சுலபமான, சிறிய அருவி. ஆகாயகங்கை படிக்கட்டு இறங்கி ஏற முடியாதவர்கள், அத்தனை உயர மலையிலிருந்து பாயும் அருவியின் சீற்றத்தை தாங்க இயலாதவர்கள், உடல் பருமனானவர்கள், வயோதிகர்கள், இதய நோயாளிகளுக்கான பாதுகாப்பான அருவி ! ஆகாயகங்கை அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. அருவியைச் சுற்றி பூங்கா ஒன்றினை அமைத்து நன்றாக பராமரித்து வருகின்றனர். பூங்காவில் சிறுவர்களுக்கான ஊஞ்சல், ஸீஸா போன்றவை இருக்கின்றன.

மாசிலா அருவியில்...
நாங்கள் மாசிலா அருவிக்கு சென்றடைந்தபோது உச்சி வெயில். ஆமாம் வெயில். மலை வாசஸ்தலம் என்றாலும் மதிய வெயில் காட்டமாக இருக்கிறது. அருவியை பார்த்ததும் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. வெயில் கால ஒன்னுக்கு போல கொஞ்சமாக ஊற்றிக்கொண்டிருந்தது அருவி. தொப்பையுள்ள ஒரு நபர் மட்டும் குளிக்கும் வகையில் தான் அருவி நீர் வழிந்துக்கொண்டிருந்தது. ஆனால் அதிலேயே ஆண்களும், பெண்களுமாக ஈஷிக்கொண்டு ஒரு பத்து பேர் குளித்துக்கொண்டிருந்தனர். இக்காட்சியை பார்த்ததும் எனக்கு அந்த அருவியில் தலைகாட்டும் ஆர்வமே நீர்த்துப்போனது. மேலும் உடைமாற்றும் அறை போன்ற செளகரியங்கள் பெண்களுக்கு மட்டும் இருக்கிறது. ஆண்களுக்கென ஒரு கழிவறை மட்டும் இருக்கிறது. அதனை கடைசியாக வல்வில் ஓரி காலத்தில் கழுவி விட்டிருக்கிறார்கள். பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடி சிறிதுநேரம் இளைப்பாறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

அடுத்த அருவி நம்ம அருவி. பெயரே அதுதான் ! இதுவும் மாசிலா அருவியைப் போலவே கொஞ்சமே கொஞ்சம் நீர்வரத்து கொண்ட சிறிய அருவி. ஆனால் இது அமைந்துள்ள இடம் ஒரு விஷுவல் ப்ளிஸ் !

நம்ம அருவியின் எழில் தோற்றம் !
சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளத்தாக்கு. வெளியிலிருந்து பார்த்தால் அந்த இடமே தெரியாது. பள்ளத்தில் இறங்க, இறங்க அருவியும் அதனைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களும் நம் கண்களுக்கு விருந்தாகின்றன. இன்னொரு ஆச்சர்யம், நாங்கள் அங்கே சென்றபோது ஒரு சிலரைத் தவிர வேறு யாருமில்லை. அவர்களும் சிறிதுநேரத்தில் கிளம்பிவிட அருவியை கொஞ்ச நேரத்திற்கு சொந்தம் கொண்டாடினோம்.

நம்ம அருவி
நம்ம அருவியின் அருகே அமைந்துள்ள இடம்
மனதை தளர்வாக்கவும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் தோதான இடம். 

மூன்றாவது, சந்தன அருவி, இப்படியொரு அருவி இருப்பதாக ஏதோவொரு வழிகாட்டி பதாகையில் பார்த்த ஞாபகம். ஆனால் அருவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதோ இன்னொரு கி.மீ நேராக போனால் வந்துவிடும் என்கிறார்கள். இரண்டு கி.மீ தாண்டியும் அருவியேதும் வராததால் சந்தேகப்பட்டு கேட்டால் ஒரு கி.மீ பின்னோக்கி செல்ல வேண்டும் என்கிறார்கள்.

சந்தனப்பாறை
இப்படியே முன்னும் பின்னும் அலைந்து கடைசியாக ஒருவர் எங்களுடன் வந்து சந்தன அருவி எனும் சொல்லப்படும் இடத்தைக் காட்டி இதுதான் சந்தனப்பாறை. இதைத்தான் சந்தன அருவி என்று யாரோ உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள் என்றார். சந்தன அருவியை தேடிய நேரத்தில் வேறு உபயோகமான காரியங்கள் செய்திருக்கலாம்.

அடுத்த இதுவரையில் கொல்லிமலையில் உள்ள அருவிகள், கோவில்கள் பற்றி பார்த்தோம். அடுத்த கட்டுரையில் கொல்லிமலையில் உள்ள நோக்குமுனைகள் மற்றும் பிற போக்கிடங்கள் பற்றி பார்க்கலாம்...

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

கொல்லிமலை அருவிகளை அறிந்து கொண்டோம்...
சந்தன அருவி உள்பட... :)

Aden said...

Nice blog posst