16 January 2017

பிரபா ஒயின்ஷாப் – 16012017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒயின்ஷாப் திறக்கப்படுகிறது. நேரமில்லை என்பதுதான் சாக்கு / காரணம். மீண்டும் எழுதத் துவங்கியதற்கும் அதேதான் காரணம். எழுதுவதற்கு சில தடைகள் ஏற்படும்போது அவற்றிலிருந்து மீண்டு வந்து எழுதத் தோன்றுகிறது, ஸ்டைலா, கெத்தா !

ராஸ லீலா படித்துக்கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் நாளொன்றிற்கு சாதாரணமாக ஐம்பது பக்கங்கள் வரை படித்துவிடுவேன். கதை நாவல்களாக இருந்தால் சில சமயம் ஆர்வம் தாங்காமல் ஒரே சிட்டிங்கில் கூட படித்துவிடுவேன். இப்போது அது முடிவதில்லை. காரணம், பீக் ஹவர்ஸில் பயணிப்பதால் பேருந்துகளில் உட்கார இடம் கிடைப்பதில்லை. என்னை விட்டால் கூட்ட நெரிசலில் நின்றுக்கொண்டே கூட படித்துவிடுவேன். என்ன ஒன்று சகபயணிகள் ஒருமாதிரி பார்ப்பார்கள். ராஸ லீலாவில் சாருவும் இதே பிரச்னையை சந்திக்கிறார் – இன் திஸ் சேப்டர். ‘இப்படி விழுந்து விழுந்து படிக்கிறீர்களே, ஏதாவது பரீட்சையா ?’. பரீட்சை எதுவுமில்லாமல் என்ன படிப்பு ? சிலர் புத்தகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். 

இருக்கை கிடைக்காமல் நின்றுக்கொண்டே போவதால் சக மனிதர்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டு செல்வது வாடிக்கையாகிவிட்டது. முக்கால்வாசி பேருந்து பிரயாணிகள் (சில சமயங்களில் என்னையும் சேர்த்து) எதிர்மறை எண்ணங்களோடு தான் பயணம் செய்கிறார்கள். அல்லது பேருந்தில் பயணம் செய்து, செய்து இப்படி ஆகிவிட்டார்களா என்று தெரியவில்லை. முகத்தை எப்போதும் கடுகடுவென வைத்திருக்கிறார்கள். எப்போது யார் மீது எரிந்து விழலாம் என்று காத்திருக்கிறார்கள். நெரிசலில் காலை லேசாக மிதித்துவிட்டால் உயிரே போய்விட்டது போல கத்தி வசைபாட துவங்கிவிடுகின்றனர். அதிலே பாருங்கோ, இரண்டு பார்ட்டிகளும் எவ்வளவுதான் மாறி மாறி திட்டிக்கொண்டே வந்தாலும் யாரும் சண்டையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதாக மட்டும் தெரிவதே இல்லை. வெறும் பேச்சு மட்டும்தான். 

ஒருநாள் ஒரு இளைஞரை நெரிசலான பேருந்தில் வைத்து பெண்களிடம் ஏராளமாக திட்டு வாங்கிக்கொண்டிருந்தார். நான் கவனித்த வரையில் அந்த இளைஞர் மீது தவறில்லை. ஆனால் எதுவும் பேசாமல் பொறுத்துக்கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், த்தா இந்த பஸ்ல போய் ஏறினேன் பாரு என்று சன்னமாக முனங்கினார். அவ்வளவுதான். இதுகாறும் யாரிடமாவது சண்டை போட வேண்டுமென காத்துக்கொண்டிருந்த ஒரு ஆசாமி எழுந்து, ‘ண்ணோவ்... தேவையில்லாம வார்த்தைய விடாத’ என்று ஆரம்பித்து ‘நீ சொன்ன வார்த்தைய இப்ப நான் சொல்லிக் காட்னா அசிங்கமாயிடும்’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘த்தா’ என்பது அவ்வளவு பெரிய கெட்டவார்த்தையா ? தமிழ் மக்களை, குறிப்பாக சென்னை மக்களைப் பொறுத்தவரையில் 'ஓத்தா' என்பது அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சாதாரண ஒன்று. பெரும்பாலும் வாக்கியத்தின் துவக்கத்தில் உதவும். இதற்கா இவ்வளவு கூச்சலிடுகிறார். அன்னார் கெளதம் மேனன் படங்கள் / டிரைலர் எல்லாம் பார்ப்பதில்லை போலிருக்கு. இத்தனைக்கும் ஆசாமி எண்ணூர். த்தா உனக்கெல்லாம் சென்னையில் வாழத் தகுதியே இல்லடா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

புத்தாண்டில் பார்த்த முதல் சினிமா – இருவர். தமிழக அரசியலை இந்த அளவிற்கு உண்மைக்கு மிக நெருக்கமாக யாரும் சினிமாவில் காட்டியதில்லை என்று நினைக்கிறேன். சொல்ல முடியாத சில விஷயங்களைக் கூட சில காட்சிகளில் / வசனங்களில் பூடகமாக சொல்லியிருக்கிறார். மல்டிப்பிள் ஆர்கஸம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இருவர் பார்க்கும்போது தான் அனுபவித்தேன். படத்தின் நிறைய தருணங்களில் ரோமங்கள் சிலிர்த்தெழுந்து கொண்டன. கதையில் ஒருவர் தன்னுடைய மொழி வளத்தையும், பேச்சாற்றலையும் கொண்டு மக்களை தன்பால் ஈர்த்து வைத்திருக்கிறார். இன்னொருவர் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் என்னும் வசீகரத்தால் மக்களின் அன்பை சம்பாதிக்கிறார். 

அதே போன்ற இன்னொரு இருவர் கூட்டணி. ஒருவர் தன்னுடைய சாமர்த்தியமான திரைக்கதையால் பார்வையாளர்களை சிலிர்ப்படையச் செய்கிறார். இன்னொருவர் தன்னுடைய இசைக்கருவிகளுடன் உதவியுடன் நமக்கு எழுச்சியூட்டுகிறார். ஒருவேளை மணிரத்னமும், ரஹ்மானும் இல்லாமல் போயிருந்தால் இந்த சமூகம் என்னவாகியிருக்கும் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நந்தினி ஸ்ரீகரை பார்த்தால் அவர் இந்தப்பாடலை பாடியிருக்கவே மாட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது. பார்ப்பதற்கு பக்கா வெஸ்டர்ன் பாடகி போல இருக்கிறார். ஆனால் பாடியிருப்பது தமிழ் கிளாஸிக் ! சும்மா கின்னென்று இருக்கிறது இவருடைய குரல். ஆளவந்தானில் ஆஃப்ரிக்கா காட்டுப்புலி பாடியதும் இதே நந்தினி தானாம் ! பாடலில் வரும் சீஜா சினேகாவின் முக வசீகரத்தையும் ஜோதிகாவின் பாவனைத் திறன்களையும் ஒருங்கே பெற்றிருக்கிறார். ரேர் பீஸ் ! ஏன்ப்பா டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா ! என்ன ஒன்று இப்பொழுதெல்லாம் இந்த பாடலைக் கேட்டாலே ஸ்மைல் சேட்டை ஞாபகம் தான் வருகிறது.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

4 comments:

ஜீவன் சுப்பு said...

அதர்வா நடிப்பில் கொஞ்ச நாட்களுக்கு முன் வந்த ஒரு படத்தின் பாடலைக்கூட நந்தினி தான் பாட்டியிருப்பாரோ என்று தோன்றியது...

"சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ" என்று இடையில் ஒரு வரி வரும் தாமரையின் பாடல் அது...

கண்ணம்மா பாடலோட ஸ்பெஷாலிட்டியே குரலும், வரிகளும் தான் .இன்னொரு ஆனந்த யாழாய் வர வேண்டியது...!

பேருந்தில் பயணிகள் சக மனிதர்களையும் , காட்சிகளையும் வேடிக்கை பார்ப்பதல்லம் இன்னுமா இருக்கிறது.மொபைல் நோண்டுவதற்கே நேரம் போதாதே...

ஹெட்போன் மாட்டிக்கொண்டுதான் இருவர் பார்க்க/கேட்க வேண்டும்.

விஸ்வநாத் said...

இருவர் - அருமையான classic movie.

Avargal Unmaigal said...

பொங்கலை ஒட்டி திறந்த உங்கள் ஒயின் ஷாப்பிற்கு வாழ்த்துக்கள் பல சரக்குகளை இங்கே இறக்கி வைத்து இருக்கிறீர்கள் சரக்குகள் சுவையாக இருக்கிறது

Philosophy Prabhakaran said...

@ஜீவன் சுப்பு

நீங்கள் குறிப்பிடும் பாடல் - முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் இடம்பெற்ற கண்கள் நீயே. அதைப் பாடியவர் சித்தாரா...

துரதிர்ஷ்டவசமாக அவருக்கு தமிழில் அதற்குப்பின் பெரிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மலையாள சினிமாவில் அவர் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்...