27 February 2017

பிரபா ஒயின்ஷாப் – 27022017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மாதவன் (ஸ்ரீரங்கம்) எழுதிய சிமோனிலா கிரஸ்தரா சிறுகதைத்தொகுப்பை வாசித்தேன். காலகேய மொழியின் தொனியில் தலைப்பிடப்பட்டிருக்கும் மாதவனின் சிறுகதைத்தொகுப்பை நியாயமாக நான் ஒரு வருடத்திற்கு முன்பே வாசித்திருக்க வேண்டும். அப்படி இப்படியென கொஞ்சம் போக்கு காட்டிவிட்டுத்தான் என் கையில் கிடைத்திருக்கிறாள் சிமோனிலா கிரஸ்தரா. 

மாதவனின் கதைகள் இப்படியிருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வட்டார வழக்கு ஜார்கன்ஸ் அதிகம் கொண்ட கிராமத்து சிறுகதைகளாக இருக்கும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். வாமு கோமுவின் முன்னுரையில் சுஜாதா, சோதனை முயற்சி போன்ற குறிப்புகளைக் கண்டதும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. மொத்தம் பதினைந்து கதைகள். அவற்றில் ஒரு பத்து கதைகள் நாம் வழக்கமாக வாசிக்கும் சிறுகதை வார்ப்புருவிலிருந்து தள்ளி நிற்கிறது. எழுத்தாளரை சந்திக்க வரும் அவருடைய கதாபாத்திரம், டீக்கடையில் தோன்றிய கடவுள், மனிதனிடம் சிக்கிக்கொண்ட டைம் மெஷின், பொன்னியின் செல்வன் நாவலை அடியொற்றி எழுதப்பட்ட சிறுகதை என நிறைய ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ சிந்தனைகள். கருக்கல் என்கிற சிறுகதை அப்படியே ஜோக்கர் படத்தின் மையக்கருத்தை சொல்கிறது. ஜோக்கர் வெளிவந்தது ஆகஸ்ட் 2016ல், சிமோனிலா கிரஸ்தரா ஜனவரி 2016 வெளியீடு. குறிப்பிட்ட அந்த சிறுகதை அதற்கு முன்பே இணைய இதழில் வெளியாகியிருக்கும். ஒரு பழங்கதை படிக்கும்போது அபோகாலிப்டோ சினிமாவை நினைவூட்டுகிறது. எனக்கு பிடிக்கும் என்பதை சரியாக கணித்து, சிமோனிலாவை என்னிடம் சேர்ப்பித்த நல்ல உள்ளத்தை நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.

சென்னைக்கு மிக அருகில் எங்கேயாவது பைக் உலா போகலாமா என்று வெள்ளிக்கிழமை இரவு விவாதித்து சனிக்கிழமை காலையில் வேடந்தாங்கல் கிளம்பினோம். அப்படியே வழியில் கருங்குழி மலைக்கோவிலையும் பார்த்துவிடலாமா என்று திசைமாறி, அப்படியே கருங்குழி போகும் வழியில் திருவடிசூலத்தில் உள்ள கருமாரியம்மன் கோவிலையும் பைரவர் வீட்டையும் பார்த்துவிடலாமா என்று மாற்றுத்திட்டங்கள் வகுத்து பயணம் நீண்டுவிட்டது. திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு போகும் சாலையில் செங்கல்பட்டுக்கு எட்டு கி.மீ.க்கு முன்பு அமைந்திருக்கிறது திருவடிசூலம். மாம்பழ அய்யாவின் ஆதரவாளர்கள் நிறைந்த ஊர். ஊரைக் கடந்து உள்ளே சென்றால் ஒருபுறம் பைரவர் வீடும் இன்னொருபுறம் கருமாரியம்மன் ஆலயமும் வருகிறது. 

பைரவர் வீடு
பைரவர் வீட்டிற்குள் நுழையும்போதே பக்கா கார்ப்பரேட் ஆலயம் என்பது புரிந்துவிடுகிறது. ஷாத்ஷாத் பங்காரு அடிகளார் ஃபார்முலா. ஸ்வாமியின் பெயர் ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள். 2009ம் ஆண்டு எழுந்தருளிய ஃப்ரெஷ்ஷான ஸ்வாமி. இன்னொரு பத்து, பதினைந்து வருடங்களில் ஊரை வளைத்துப்போட்டுவிடுவார் என்று கணிக்கிறேன். டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் பைரவர் வீடு டாட் காம் என்று வெப்ஸைட் கூட வைத்திருக்கிறார். நேரமிருந்தால் போய் ஸ்வாமிகளின் பூர்வீகத்தையும், புகைப்படத்தொகுப்பையும் பார்க்கலாம். இன்னொரு புறம், 51 அடி பிரம்மாண்ட சிலை அம்மன் சிலையைக் கொண்ட கருமாரியம்மன் கோவில். வெளியிலிருந்து அம்மனை தரிசிக்க முடியாதபடி அஸ்பெட்டாஸ் ஷீட் போட்டு மறைத்து வைத்திருக்கிறார்கள். மெனக்கெட்டு உள்ளே போய் பார்க்கும் அளவிற்கு ஆர்வமில்லாததால் திரும்பிவிட்டோம். பள்ளி மாணவ / மாணவிகளை இவ்விரு கோவில்களுக்கும் எக்ஸ்கர்ஷன் எல்லாம் அழைத்து வருகிறார்கள்.  

அடுத்தது கருங்குழி மலைக்கோவில். படியேறி போக வேண்டிய அவசியமில்லாமல் இருசக்கர வாகனங்களுக்கென அதிகம் பராமரிக்கப்படாத பாதையொன்று இருப்பது வசதியாக இருந்தது. ஒருபுறம் வைணவ குறிகளும், இன்னொரு புறம் சிவலிங்கமும் அமைந்திருந்திருக்கிறது. கூட்டம் அதிகமில்லை. உண்மையில் அன்றைய தினம் அங்கே எங்களைத் தவிர யாருமில்லை. 

கருங்குழி மலையிலிருந்து
மலையிலிருந்து பார்த்தால் சுற்றுவட்டார கிராமங்களும், சிறிய அணையொன்றும், நிலப்பரப்பும் அழகாக தெரிகின்றன. அங்கிருந்தே தண்ணீரில்லாத ஏரியின் வழியிலேயே பயணித்து வேடந்தாங்கலை சென்றடைந்தோம். நான் படித்த கல்லூரியிலிருந்து சுமார் பதினைந்து கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல். ஆனால் நான்காண்டு கல்லூரி வாழ்க்கையில் ஒருமுறை கூட அந்த திசைக்கு சென்றதில்லை. இப்பொழுது தான் திடீரென பயண ஆர்வம் பீறிடுகிறது. வெளியே பைனாகுலர்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. உள்ளே ஒரு கி.மீ. நீளத்திற்கு பாதை, இடதுபுறம் இடையிடையே மரங்கள் கொண்ட நீர்நிலை. 

வேடந்தாங்கல்
பறவைகள் கூட்டம் கூட்டமாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. மீனம்பாக்கம் பக்கம் சென்றது போல பறவைகள் ஒய்யாரமாக தரையிறங்குவதும், மீண்டும் பறப்பதுமாக இருக்கின்றன. ஒரு கணம் பறவைகளாகி விடலாமா என்று ஆசையாக இருக்கிறது. காதல் செய்வதற்கு தோதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது பூங்கா. புகைப்பட ஆர்வம் உள்ளவர்களுக்கு செமத்தியான இடம்.

ஒருபுறம் பைரவ ஸ்வாமிகள் போன்ற கள்ள ஆசாமிகளைப் பார்த்து மனம் கொதித்தாலும் ஜக்கியின் சிவராத்திரி நிகழ்ச்சி ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் அம்மன் கோவில் பாட்டுக்கச்சேரியை ரசிப்போம் இல்லையா அதுபோல ஜக்கியின் நிகழ்ச்சியை டிவியில் கண்டுகளித்தேன். கிட்டத்தட்ட ஒரு ஸ்டார் நைட் பாணியில் கேளிக்கையாக இருந்தது. நிகழ்ச்சியில் பாடிய கனலே கனலே பாடல் பயங்கரமாக மனதை ஆக்கிரமித்துக் கொண்டது. இணையத்தில் சல்லடை போட்டு தேடி அந்த பாடலை கண்டுபிடித்துவிட்டேன். ஈஷாவின் அலை ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல் அது. நித்தியின் ஆல்பங்களைப் போல அல்லாமல் இணையத்தில் எளிதில் கிடைக்கின்றன ஜக்கியின் பாடல்கள். எம்.பி.3யில் பாடலைக் கேட்டபிறகு தான் என்னை ஹெவியாக ஈர்த்தது பாடல் அல்ல, பாடகி என்று உணர்ந்துக்கொண்டேன். ஈஷாவின் மொத்த சிவராத்திரி நிகழ்வும் யூடியூபில் கிடைக்கிறது. குறிப்பிட்ட இந்த காணொளியில் 2:12:45 தொடங்கி காணொளியின் இறுதிவரை தோள்களை லேசாக அசைத்தபடி பாடும் அழகிய சிங்கரின் பெயர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

20 February 2017

பிரபா ஒயின்ஷாப் – 20022017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

தமிழகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்காத ஒரு ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது. அதனை அகற்றும் கடைசி நம்பிக்கையாக இருந்தது சனிக்கிழமை நடைபெற்ற சட்டமன்ற வாக்கெடுப்பு. அதுவும் சொதப்பலில் முடிந்துவிட்டது. சனியன்று எல்லாம் சரியான பாதையில் போய்க்கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரையில் இது சொதப்பலாக முடிந்ததற்கு காரணம் ஸ்டாலின் கைதானது தான். அவர் கைதாவதை தவிர்த்திருக்க வேண்டும். சூழ்நிலையை கணித்து தொண்டர்களுக்கு ரகசிய முன்னறிவிப்பு கொடுத்து மெரினாவில் கூட்டியிருக்கலாம். காவல்துறை ஸ்டாலினை கைது செய்துவிட முடியாதபடி தொண்டர்கள் அரண் அமைத்திருக்கலாம். அப்படி செய்திருந்து இன்னொரு இரண்டு மணிநேரத்தை கடத்தியிருந்தால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து தி.மு.க.வின் போராட்டத்தில் கலந்துகொள்ள துவங்கியிருப்பார்கள். அதன்பிறகு எல்லாம் வரலாற்று நிகழ்வாகியிருக்கும். முன்பே ஒருமுறை சொன்னது போல ஸ்டாலின் இன்னமும் கடந்த தலைமுறை அரசியலையே நம்பியிருக்கிறார். இப்போது கூட புதன்கிழமை அறப்போராட்டம் அறிவித்திருக்கிறார். அன்றைய தினம் அடையாளமாக எல்லோரும் கைது செய்யப்பட்டு, மண்டபங்களில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, மாலையில் விடுதலையாவார்கள். பிரயோஜனமில்லாத போராட்டம். கிரிக்கெட் மாட்சில் இந்தியா எட்டு விக்கெட்டுகளை இழந்தபிறகும் ஸ்ரீநாத்தும், கும்ளேயும் அடிப்பார்கள் என்றொரு குருட்டு நம்பிக்கையுடன் காத்திருப்போம் அல்லவா அப்படியொரு நம்பிக்கையுடன் இப்பொழுது கவர்னரை நம்பிக் காத்திருக்கிறேன்.

பார்க்க நினைத்து விட்டுப்போய் கிடப்பிலிருக்கும் படங்களிலிருந்து யாவரும் நலம் பார்த்தேன். பொதுவாக ஹாரர் படங்கள் மூன்று வகை. ஒன்று, தர்க்கப்பாதையில் போகும், இரண்டாவது அமானுஷ்யப் பாதையில் போகும், மூன்றாவது இரண்டும் கலந்து கொஞ்சம் ஆன்மிகம் சேர்ந்திருக்கும். யாவரும் நலம் முதல் வகையாக இருக்கும் என்று நினைத்திருந்தால் அது பொசுக்கென இரண்டாவது ரூட்டில் போய்விட்டது. அதன்பிறகு ஒருமாதிரியாக போய் படத்தின் தலைப்பிற்கேற்ப முடிவடைகிறது. மற்றபடி நல்ல கதை. எட்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம். நிறைய நாடகத்தனங்கள். நாடகத்திற்குள் ஒரு நாடகம் வேறு வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மிகத்தீவிரமாக அந்த நாடகத்தை பார்க்கிறார்கள். எப்படியென்றால் வீட்டில் மருமகளுக்கு அபார்ஷன் ஆகியிருக்கிறது. அந்தச் சூழலில் கூட நாடகம் பார்க்கிறார்கள். நாடகத்தின் தலைப்புப் பாடலுக்கெல்லாம் ஷங்கர் மஹாதேவன் குரல் ஒலிக்கிறதே என்று சந்தேகப்பட்டு பார்த்தால் படத்திற்கே அவருடைய குழுதான் இசையமைத்திருக்கிறது. ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்ட படம் போலிருக்கிறது. டப்பிங் கொடூரம். நீத்து சந்திராவுக்கு தமிழில் முதல் படம். கோலிவுட் கவனிக்காமல் தவறவிட்ட பொக்கிஷங்களில் நீத்துவும் ஒருவர் என்பது என் எண்ணம். அற்புதமான முகசாயல் நீத்துவுக்கு !

சூரியன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் செல்வக்குமாரின் ஃபேண்டஸி கதைகள் படித்தேன். நண்பர் ஹரீஷ் கேட்டது போல புத்தகத்தில் எழுத்தாளரின் பெயர் ஏன் ‘செல்வு@selvu’ என்றிருக்கிறது என்று புரியவில்லை. எழுத்தாளரின் பெயர் என்பது கம்பீரமாக இருக்க வேண்டாமா ? எனக்குப் பொதுவாக குழந்தைகளுக்கு கதை சொல்ல தெரியாது. என் குழந்தைக்கு இதுவரை நான் ஒரு கதை கூட சொன்னது கிடையாது. செல்வாவின் புத்தகத்தை படித்தபிறகு இனி அந்த கவலையில்லை என்று தோன்றுகிறது. புத்தகம் எல்லா தரப்பினருக்குமானது என்றாலும் கதையில் வரும் பல விஷயங்களும் குழந்தைகளின் உலகத்தை நினைவூட்டுகிறது. ஒரு சின்ன இடத்தில் கூட விரசமோ, இரட்டை அர்த்தமோ இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு புத்தகம் படிக்கிறேன். பெரும்பாலான கதைகளில் ஒரு அதிசயப்பொருள் அல்லது அதிசய சக்தி வருகிறது. உதாரணத்திற்கு, ஒருமுறை ஏறி இறங்கினால் உயரம் கூட்டும் ராட்டினம், தொலைக்காட்சி தொகுப்பாளரின் நகையை கவரும் காந்தம், கரப்பான்களை கண்டாலே அடித்துக் கொல்லும் சுத்தியல் :), நிழலை தின்கிற ஆடு இப்படி ஏதாவது ஒன்று வருகிறது. அந்த அதிசிய பொருளையோ சக்தியையோ தவறாக பயன்படுத்தினால் பேக்ஃபயர் ஆகிறது. கதையினூடே நீதி போதனையும் செய்கிறார் செல்வா. கதை மாந்தர்கள் செய்யும் சின்னச் சின்ன தவறுகளுக்கு சின்னச் சின்ன தண்டனைகள் கிடைக்கின்றன. ஒரு கதையில் ஒரு நபர் அடிக்கடி திரைப்படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறார். அப்படி பார்க்கும்போதெல்லாம் அவரிடமிருந்து நூற்றியிருபது ரூபாய் காணாமல் போய்விடுகிறது. எழுத்துநடையில் அவ்வப்போது அராத்துவின் தற்கொலை கதைகளின் விளிம்புவரை தொட்டுவிட்டு வருகிறார். இரண்டு நாற்காலிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றிற்கும் நான்கு கால்கள் என்றெல்லாம் எழுதி அச்சமூட்டுகிறார். செல்வாவின் எழுத்து ஒரு வகையான படைப்பாற்றல் என்றால் அதற்கு கதிர் வரைந்துள்ள ஓவியங்கள் இன்னொரு கோண படைப்பாற்றல். இருவருமாக சேர்ந்து நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். 

தமிழ் சினிமாவில் உள்ள பெரிய (சம்பளம் வாங்கும்) நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியில் தொடங்கி விஜய் சேதுபதி வரை அந்த நடிகருக்காகவே படம் பார்க்கும் ரசிகர்கள் / ரசிகைகள் உண்டு. ஏன் அசோக் செல்வனுக்காகவும், கலையரசனுக்காகவும் படம் பார்க்கும் ரசிகைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ‘பருத்தி வீரன்’ கார்த்திக்காக ஒரு படத்தைப் பார்த்த ரசிகரையோ ரசிகையையோ நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஹீரோவாகவே பதிமூன்று படங்களில் நடித்துவிட்டார். அவற்றில் ஒன்று கூட தரை மொக்கை என்று சொல்ல முடியாது. அவருடைய எல்லாப் படங்களும் ஏதோவொரு தரப்பை ஓரளவிற்காவது திருப்தி செய்யும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. நடிகர் திலகத்திற்குப் பிறகு முதல் படமே பிரம்மாண்ட வெற்றியாக அமைந்தது அவருக்குத்தானே. ஆனாலும் ஏன் அவருக்கென ரசிகர் வட்டம் இல்லையென்பது குழப்பமாகவே இருக்கிறது. ஆள் பார்ப்பதற்கும் ஒப்பீட்டளவில் ஸ்மார்ட்டாகவே இருக்கிறார். அமீர், செல்வராகவன், வெங்கட் பிரபு, ரஞ்சித் என பெரியப் பெரிய கைகளில் தவழ்ந்த கார்த்திக்கு இப்போது மணிரத்ன படவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மீசையெல்லாம் ட்ரிம் செய்து ஆளே மாறியிருக்கிறார். டீசர் பார்த்தால் நமக்கு இன்னொரு ரோஜா கிடைக்கும் போலிருக்கிறது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நகைக்கடை விளம்பரத்தில் அதிதி ராவ் வருவார். பிரிந்து செல்லும் கணவரை ஏக்கமாய் ஒரு பார்வை பார்ப்பார். அவ்வளவு க்யூட்டாக இருப்பார். காற்று வெளியிடையில் அந்த அதிதி தான் ஹீரோயின், ஆனால் அந்த க்யூட்நெஸ் மிஸ்ஸிங்.

கோலியுட்டில் ஒரு காலத்தில் பெண் ரசிகைகள் அதிகம் கொண்டிருந்த அரவிந்த் சாமிக்கும், மாதவனுக்கும் அப்படி அமைவதற்கு காரணமாக இருந்தவர் மணிரத்னம். அஜித் கூட மணிரத்னத்தின் தயாரிப்பில் வெளியான ஆசையில் தான் பிரபலமடைந்தார். அந்த ராசி கார்த்திக்கு வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். 

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

13 February 2017

பிரபா ஒயின்ஷாப் – 13022017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நீண்ட நாட்களுக்குப் பிறகு மொபைலில் பாடல் தொகுப்பு இல்லாத காரணத்தினால் பண்பலை கேட்க வேண்டிய சூழல். பண்பலைகளில் மூன்றில் ஒரு பங்கு நேரம் மட்டும்தான் பாடல்கள் ஒலிபரப்பாகின்றன. நிறைய விளம்பரங்கள். பெரும்பாலானவை அபார்ட்மெண்ட்ஸ், நகைக்கடை போன்ற சத்யம் தியேட்டர் வகையறா விளம்பரங்கள். தனியார் பண்பலைகள் அறிமுகமான புதிதில் எங்கு பார்த்தாலும் பண்பலை தான் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அப்போது சூரியனும், மிர்ச்சியும் ரஜினி, கமல் மாதிரி. கொஞ்ச நாட்களில் ஒவ்வொரு பண்பலையாக அறிமுகமாகி அவற்றின் மீதிருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. இப்பொழுது பண்பலை அதிகம் ஒலிப்பது கார் ரேடியோக்களில் மட்டும்தான். அதனால்தானோ என்னவோ பணம் புரளும் ஆட்களை குறி வைத்தே விளம்பரங்கள் வருகின்றன. இன்னொரு விஷயம். தொலைக்காட்சியை விட விளம்பரம் செய்வதற்கு உகந்த, விளம்பரம் செய்தால் அதிக பலன் தரக்கூடிய ஊடகம் பண்பலை என்பேன். தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை வந்தால் உடனடியாக சேனல் மாற்றுவது என்பது ஒரு சம்பிரதாயம் மாதிரி ஆகிவிட்டது. பண்பலைகளை நாம் பெரும்பாலும் மற்ற வேலைகளை கவனித்தபடி அரை உணர்வோடு கேட்பதால் அவ்வாறு சேனல் மாற்றுவதில்லை. விளம்பரங்களும் அதே அரை உணர்வோடு நம் மனதில் பதிந்து விடுகின்றன. விளம்பரங்கள் தவிர்த்து ஜாக்கிகள் ஆற்றும் சொற்பொழிவுகள் ஒருபுறம். இன்று திங்கட்கிழமை என்ற விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி இரண்டு நிமிடங்களை கடத்திவிடுகிறார்கள். பண்பலை அறிமுகமான சமயம் சுசித்ராவின் வசீகர குரலுக்கும், ஏற்ற இறக்கத்திற்கும் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். (சுசித்ரா என்ன ஆனார் ?). இப்பொழுது பண்பலை தொகுப்பாளினிகள் குரல்கள் சிந்தசைஸர் வழியாக கேட்பதைப் போல செயற்கையாக இருக்கின்றன. அதிகம் கொனத்துகிறார்கள். அப்புறம் விளம்பரங்களுக்கும், பாடல்களுக்கும் இடையே வரும் டிஜிட்டல் இரைச்சல்கள், அசட்டுத்தனமான கொஞ்சம் நகைக்க வைக்கும் கான்செப்ட் ஜல்லிகள், விளம்பர இடைவேளையில்லா பாடல்கள் வழங்குவோர் என்று இரண்டு விளம்பரங்களை ஒப்பிப்பது என்று நிறைய பேஜார் செய்கிறார்கள். இடையிடையே கொஞ்சம் பாடல்களையும் ஒலிபரப்புகிறார்கள்.

காதல் வழியும் கோப்பை படித்தேன். யுவ கிருஷ்ணாவின் புத்தகங்கள் எனக்கு சிலபஸ் புக் போன்றவை. அவருடைய பத்தாவது புத்தகம். முதல் சிறுகதைத்தொகுப்பு. மொத்தம் இருபத்தி இரண்டு கதைகள். அவற்றில் இரண்டு ஏற்கனவே சரோஜா தேவியில் இடம் பெற்றவை. பொதுவாக தொகுப்புகளில் உள்ள சிறுகதைகளில் ஒரு பேட்டர்ன் தெரியும். யுவாவின் கதைகளில் அந்த மாதிரி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகம் யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான கதைகளில் ஆண்களின் அசட்டுத்தனங்கள் மையச்சரடாக இருக்கிறது. கதைகள் பெரும்பாலும் அவருடைய வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன என்று தோன்றுகிறது. சில கதைகள் படித்து முடித்தபிறகு கதை நிஜமாகவே முடிந்துவிட்டதா என்று யோசனையாக இருக்கிறது. தாள் எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று எச்சில் விட்டு தேய்த்துக்கூட சோதித்துவிட்டேன். ஒரு ஃபுரூட் சலாத் போல வெளிவந்திருக்கும் யுவாவின் காதல் வழியும் கோப்பையின் சிறப்பம்சம் – ஒவ்வொரு கதையின் முடிவிலும் அது எந்த இதழில், எந்த ஆண்டில் வெளியானது என்ற குறிப்பு இருக்கிறது. இது அந்தந்த இதழ்களின் தன்மையை சொல்லி நமக்கு இதழியல் பாடம் நடத்துகிறது.

சைத்தான் படம் வெளிவந்த புதிதில், ‘ஆடுகளம் முருகதாஸை ஐடி ஊழியராக நடிக்க வைத்திருப்பதெல்லாம் காஸ்டிங் அபத்தம்’ என்று ஒரு கறாரான விமர்சகர் எழுதியிருந்தார். எனக்கும் கூட படம் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது. ஏன் நம்முடைய மனம் ஆடுகளம் முருகதாஸை ஐடி ஊழியராக ஏற்க மறுக்கிறது ? ஒன்று, ஆ.மு நிஜத்தில் எப்படி என்று நமக்குத் தெரியாது. ஆனால் சினிமாவைப் பொறுத்தவரையில் அவர் அதிகம் படிக்காத, அடித்தட்டு ஆள் வேடங்களையே தொடர்ந்து செய்துவருகிறார். அதன் காரணமாக நமக்கு அவர் மீது ஒரு கற்பிதம் ஏற்பட்டிருக்கலாம். இரண்டு, ஐடி ஊழியர் என்றாலே நன்கு படித்த, ஹேண்ட்ஸம்மான, ஸ்டைலாக ஆங்கிலம் பேசக்கூடிய இளைஞன் என்கிற கற்பிதமும் சினிமாக்களால் நமக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படியென்றால் ஆ.மு.வைப் போல அதாவது அவருடைய கதாபாத்திரங்களைப் போல அடித்தட்டு வர்க்க இளைஞன் ஒருவன் ஐ.டி பணியில் சேரவே முடியாதா ? தாராளமாக சேரலாம். ஆனால் ஐ.டி. துறைக்கென சில எழுதப்படாத விதிமுறைகள் உள்ளன. அல்லது அங்கே சேர்ந்தபிறகு மற்றவர்களைப் பார்த்து நீங்களாகவே உங்களிடம் சில விஷயங்களை மாற்றிக்கொள்ள முனைவீர்கள். டீசண்டாக உடையுடுத்த தொடங்குவீர்கள், பிராண்டட் துணிகள், உபகரணங்கள் மட்டும் வாங்குவீர்கள், பீட்ஸா சாப்பிடத் துவங்குவீர்கள், விம்பிள்டன், ஃபார்முலா ஒன், கேம் ஆஃப் த்ரோன்ஸ், ப்ரேக்கிங் பேட் எல்லாம் பார்க்கத் துவங்குவீர்கள், செவர்லேயில் ஏசி சுமார்தான் என்று நண்பருக்கு ஆலோசனை சொல்வீர்கள், நகருக்கு ஒதுக்குப்புறமாக அபார்ட்மென்ட் விலை விசாரிக்கத் துவங்குவீர்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் நீங்கள் ஐரோப்பியாவில் வாழ்ந்துக்கொண்டிருப்பதாகவே நம்பத் துவங்கிவிடுவீர்கள். ஒருவகையில் பார்த்தால் உங்கள் நிறுவனம் இதற்கெல்லாம் சேர்த்து தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் சம்பளத்தை சுளையாக வாங்கி ஃபிக்ஸட் டெப்பாஸிட்டில் போட்டுவிட்டு எப்போதும் போல திருப்பூர் காட்டனில் எடைக்கு வாங்கிய துணியையும், மூன்று வருடங்களுக்கு முன்பு நன்றாக உழைக்கும் என்று பாட்டாவில் வாங்கிய, கொஞ்சம் அடி வாங்கிய ஷூவையும் போட்டுக்கொண்டு, துண்டு பீடி வலித்துக்கொண்டு, அசிங்கமாக தமிழ்ப்படங்கள் பார்த்துக்கொண்டு, ங்கோத்தா, ங்கொம்மாலே என்று பேசிக்கொண்டிருந்தால் ஐ.டி துறையானது உங்களை வேறு வகையில் சிறப்பாக கவனிக்கும். அதனால் ஒருவேளை தப்பித்தவறி ஆடுகளம் முருகதாஸுக்கு ஐடியில் வேலை கிடைத்தால் கூட அதிகபட்சம் ஆறே மாதங்களில் அவர் ஜாவா சுந்தரேசன் ஆகிவிடுவார்.

சாஷா திருப்பதிக்கு தமிழ் தெரியாது என்று சொன்னால் நம்ப முடியவில்லை. சாஷாவின் பெயரில் தான் திருப்பதி. பிறந்தது கஷ்மீரில். வசிப்பது மும்பையில். தமிழ் சினிமாவில் தமிழ் தெரியாமல் பாடல்கள் பாடுபவர்கள் அநேகம். அவர்களெல்லாம் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் பாடல் வரிகளை எழுதி வைத்துக்கொண்டு பாடுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி பாடுபவர்களின் கொஞ்சல் தமிழில் ஒரு அழகியல் இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் சாஷாவின் உச்சரிப்பு நன்றாக தமிழ் தெரிந்தவர்களை விட சிறப்பாக இருக்கிறது. 

சிலுக்கு மர பாடலில் நான் வைகையாத்து வெள்ளத்தோடு போனா, நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா என்ற வரிகளை கவனியுங்கள். அந்த ‘ள்ள’ உச்சரிப்பு ! சான்ஸே இல்லை. சாஷாவின் மரபணுவில் எங்கேயாவது தமிழ் இருக்கும் என்று யூகிக்கிறேன். லிங்காவில் என் மன்னவா, காவியத்தலைவனில் ஏய் மிஸ்டர் மைனர் போன்றவை சாஷாவின் மற்ற அற்புதங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

6 February 2017

பிரபா ஒயின்ஷாப் – 06022017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நேற்று மதியம் தொலைக்காட்சியில் ஜாலியாக ஜல்லிக்கட்டு லைவ் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் அதனை ரத்து செய்துவிட்டு ஒளிபரப்பிய அந்த துயரச் செய்தி உங்களை அதிர்ச்சியடைய செய்திருக்கும். ஏறத்தாழ தமிழக மக்கள் எல்லோரும் அதிர்ச்சியில் தான் இருக்கிறார்கள். தமிழில் நாயை அடிப்பானேன் பீயை சுமப்பானேன் என்றொரு சொலவடை உண்டு. நம் மக்களைப் பார்த்தால் அதுதான் நினைவுக்கு வருகிறது. ரைட்டு, இப்பொழுது புலம்பி ஆகப்போவது எதுவுமில்லை. நம்மால் முடிந்தவரையில் இச்சூழலை நேர்மறையாக எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. இப்படி யோசித்துப் பாருங்கள். இப்பொழுது சின்னம்மாவிற்கு எதிர்ப்பு அலை பயங்கரமாக இருக்கிறது. இது அவர்களுக்கே தெரியும். நிலை இப்படியிருக்க முதல்வராக பதவியேற்கப் போகும் சின்னம்மா எதிர்ப்பலைகளை சமாளிப்பதற்காக அதிரடியாக சில நற்காரியங்களைச் செய்யக்கூடும் இல்லையா ? உதாரணத்திற்கு பூரண மதுவிலக்கு. மூன்று மாதங்களோ, ஆறு மாதங்களோ தற்காலிகமாக சில நல்ல விஷயங்களை நாம் அனுபவிக்கப் போகிறோம். அப்படி இல்லையென்றால் நல்ல நகைச்சுவைகளை !

சின்னம்மாவிடம் நான் கண்டு வியக்கும் ஒரு விஷயம். அவருடைய ஸ்கெட்ச் திறமை. கலைஞரை அரசியல் சாணக்கியர் என்பார்கள். சின்னம்மாவின் அரசியல் நடவடிக்கைகளில் அவரைவிட நிபுணத்துவம் தெரிகிறது. சி.எம் பதவிக்கு ஒரு ஸ்கெட்ச். அதனை அவசரப்படாமல், ஆத்திரப்படாமால் ஆறு மாதங்கள் காத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக நுணுக்கங்கள் செய்து இதோ நமக்கெல்லாம் முதல்வராகப் போகிறார். இவ்வளவு திறமையான ஒருவர் நமக்கு முதல்வராக வருவதில் என்ன தவறு ?

ஒருவகையில் சுஜாதாவின் ஆரம்பகால ஆட்டோபயோகிராஃபி என்ற கவர்ச்சியான பின்னட்டை வாசகத்தை தாங்கியிருக்கிறது மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம். கட்டுரைத்தொகுப்பு. என்ன ஒன்று பின்னட்டை வாசகத்திற்கு சகாயமாக இல்லை புத்தகம். நடுவில் ஒரு இருபது பக்கங்களுக்கு வாத்தியாருடன் நடிகை லட்சுமியும், இயக்குனர் மகேந்திரனும் பத்திரிகை ஒன்றிற்காக மேற்கொண்ட உரையாடல் வருகிறது. சவசவ என்று இருக்கிறது. குறிப்பாக, இப்போதைய அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால் உருப்புடாதுன்னு நினைக்கிறேன் என்பது போன்ற வாத்தியாரின் அக்மார்க் பதில்களை படிக்கும்போது கடுகடுப்பு ஏற்படுகிறது. அடுத்து ஒரு இருபது பக்கங்களுக்கு தனுமை என்ற சிறுகதைத் தொகுப்புக்கு வாத்தியார் எழுதிய மதிப்பீடு வருகிறது. இந்த இருபது பக்கங்களும் புரிய வேண்டுமென்றால் அதற்கு நாம் தனுமை சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்க வேண்டும். புதுக்கவிதைகள் பற்றி கொஞ்சம், சினிமா பற்றி கொஞ்சம், கம்ப்யூட்டர் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகள் கொஞ்சம் என்று கொஞ்சம் கொஞ்சம் அலுப்பூட்டக்கூடிய விஷயங்கள். புத்தகத்தின் பிற்பகுதியில் வரும் சுஜாதாவின் முதல் கதை பிரசுரமான கதை, விமானம் கற்றுக்கொண்ட அனுபவம், தமிழ்நாடு 2000 மைல் சுற்றுலா போன்றவை வாசிப்பின்பம் தருகின்றன. ஆனாலும் பின்னட்டை வாசகம் கொஞ்சம் அதிகப்படி.

மோகினி படித்தேன். வ.கீராவின் சிறுகதைத் தொகுப்பு. வட்டார வழக்கு என்றால் எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை. நாக்கு சுளுக்கிக்கொள்ளும். வட்டார வழக்கின் கடுமை தாளாமல் பத்து பக்கங்களோடு தலைமுழுகிய புத்தகங்களெல்லாம் உண்டு. கொஞ்சம் கஷ்டப்பட்டு மோகினி பழக்கமாகிக்கொண்டாள். 

எழுத்தாளர் செட்டிக்குளம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த ஊரை பொறுத்தவரை மூன்றே வேலைகள் தான். விவசாயம், லாரி ஓட்டுனர், பனியன் தொழிற்சாலை. வ.கீராவின் கதைகளில் பெரும்பான்மை லாரியும் லாரி சார்ந்தவையாகவே இருக்கின்றன. லாரி ஓட்டுனர் / கிளீனர் வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை பேசுகின்றன. தகவல்கள் சொல்கின்றன. கதைகளினூடே அவருடைய வட்டார மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல் போன்றவை சொல்லப்படுகின்றன. லாரி ஓட்டுனர்கள் என்றால் விலைமாதுகள் கட்டாயமாயிற்றே. அவர்களும் ஆங்காங்கே கதைகளுக்கு நடுவே புளியமரங்களின் பின்னாலிருந்து எட்டிப் பார்க்கிறார்கள். வ.கீராவின் கதைகள் இப்படி பல நிறங்கள் கொண்டிருந்தாலும் அவற்றின் மையச்சரடு கிராமத்து பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள். குறிப்பாக நிறமற்றவளின் கண்கள் என்கிற கதை மனதில் ஒரு லாரி பாரமேற்றுகிறது. நிறைய கதைகள் கலங்க வைக்கின்றன. ஹேப்பி எண்டிங்குக்காக கடைசியில் வைக்கப்பட்டிருக்கும் குறத்திக்கவுண்டனூர் கதை தொகுப்பிலேயே அதிகம் பிடித்திருந்தது.

சிலருக்கு சிம்ரனை பிடிக்கும், சிலருக்கு ஜோதிகாவைப் பிடிக்கும். சிலருக்கு த்ரிஷா பிடிக்கும் இல்லையென்றால் நயன்தாரா. மீனாவை எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

ஆங்கிலத்தில் ஆப்டிக்கல் இல்யூஷன் என்பார்கள். ஒரு விஷயத்தை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒருமாதிரியாகவும் வேறொரு கோணத்தில் பார்க்கும்போது முற்றிலும் வேறாக இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் மீனா என்பேன். முத்து திரைப்படம் வெளிவந்தபோது எனக்கு ஆரம்பப்பள்ளி வயது. அதில் இடம்பெற்ற தில்லானா தில்லானா பாடல் பெரிய ஹிட். அப்பொழுது ‘லைட் பெல்ட்’ சிறுவர்கள் மத்தியில் பிரபலம். லைட் பெல்ட் என்பது என்னவென்றால் நாம் இடுப்பில் அணியக்கூடிய பெல்ட் சின்னச் சின்ன LED புள்ளிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இடுப்பில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் விளக்குகள் ஒளிரும். ஒளிரும்போது பார்ப்பதற்கு தில்லானா தில்லானா பாடலில் ரஜினி அணிந்திருக்கும் இடுப்புப்பட்டை போலவே இருக்கும். நாங்கள் அதை அணிந்துக்கொண்டு ரஜினி போல டான்ஸ் ஆட விபரீதமாக முயன்றிருக்கிறோம். அப்பொழுதெல்லாம் தில்லானா பாடலை விகல்பமில்லாமல் பார்த்து ரசித்திருக்கிறோம். பாடலில் ரஜினியும் மீனாவும் மொத்தம் எத்தனை வண்ண உடைகள் அணிகிறார்கள் என்பதை எண்ணி, எண்ணி வியந்திருக்கிறோமே தவிர ஒருமுறை கூட ஆபாசமாக பார்த்ததில்லை. இப்பொழுது பார்த்தால் மீனாவின் அசைவுகள் அத்தனை விபரீதமாக தெரிகிறது. மத்திய பிரதேசத்தை வேறு அடிக்கடி க்ளோஸப்பில் காட்டுகிறார்கள். அந்த நீலநிற உடையில் மீனா அவ்வளவு செக்ஸி. மீனா ஒரு தேவதை. மீனாவைப் பற்றி தனியாக இன்னொரு சமயம் எழுத வேண்டும்.


இப்பொழுது நேரமிருந்தால் வீடியோவில் 2:10ல் தொடங்கி 2:45 வரை ம்யூட்டில் பாருங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment