அன்புள்ள வலைப்பூவிற்கு,
நேற்று மதியம் தொலைக்காட்சியில் ஜாலியாக ஜல்லிக்கட்டு லைவ் பார்த்துக்கொண்டிருந்த
சமயத்தில் அதனை ரத்து செய்துவிட்டு ஒளிபரப்பிய அந்த துயரச் செய்தி உங்களை
அதிர்ச்சியடைய செய்திருக்கும். ஏறத்தாழ தமிழக மக்கள் எல்லோரும் அதிர்ச்சியில் தான்
இருக்கிறார்கள். தமிழில் நாயை அடிப்பானேன் பீயை சுமப்பானேன் என்றொரு சொலவடை
உண்டு. நம் மக்களைப் பார்த்தால் அதுதான் நினைவுக்கு வருகிறது. ரைட்டு, இப்பொழுது
புலம்பி ஆகப்போவது எதுவுமில்லை. நம்மால் முடிந்தவரையில் இச்சூழலை நேர்மறையாக
எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. இப்படி யோசித்துப் பாருங்கள். இப்பொழுது
சின்னம்மாவிற்கு எதிர்ப்பு அலை பயங்கரமாக இருக்கிறது. இது அவர்களுக்கே தெரியும்.
நிலை இப்படியிருக்க முதல்வராக பதவியேற்கப் போகும் சின்னம்மா எதிர்ப்பலைகளை
சமாளிப்பதற்காக அதிரடியாக சில நற்காரியங்களைச் செய்யக்கூடும் இல்லையா ? உதாரணத்திற்கு
பூரண மதுவிலக்கு. மூன்று மாதங்களோ, ஆறு மாதங்களோ தற்காலிகமாக சில நல்ல விஷயங்களை
நாம் அனுபவிக்கப் போகிறோம். அப்படி இல்லையென்றால் நல்ல நகைச்சுவைகளை !
சின்னம்மாவிடம் நான் கண்டு வியக்கும் ஒரு விஷயம். அவருடைய ஸ்கெட்ச்
திறமை. கலைஞரை அரசியல் சாணக்கியர் என்பார்கள். சின்னம்மாவின் அரசியல்
நடவடிக்கைகளில் அவரைவிட நிபுணத்துவம் தெரிகிறது. சி.எம் பதவிக்கு ஒரு ஸ்கெட்ச். அதனை
அவசரப்படாமல், ஆத்திரப்படாமால் ஆறு மாதங்கள் காத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக
நுணுக்கங்கள் செய்து இதோ நமக்கெல்லாம் முதல்வராகப் போகிறார். இவ்வளவு திறமையான
ஒருவர் நமக்கு முதல்வராக வருவதில் என்ன தவறு ?
ஒருவகையில் சுஜாதாவின் ஆரம்பகால ஆட்டோபயோகிராஃபி என்ற கவர்ச்சியான பின்னட்டை வாசகத்தை தாங்கியிருக்கிறது மிஸ்.
தமிழ்த்தாயே நமஸ்காரம். கட்டுரைத்தொகுப்பு. என்ன ஒன்று பின்னட்டை வாசகத்திற்கு
சகாயமாக இல்லை புத்தகம். நடுவில் ஒரு இருபது பக்கங்களுக்கு வாத்தியாருடன் நடிகை
லட்சுமியும், இயக்குனர் மகேந்திரனும் பத்திரிகை ஒன்றிற்காக மேற்கொண்ட உரையாடல்
வருகிறது. சவசவ என்று இருக்கிறது. குறிப்பாக, இப்போதைய அரசியல் பற்றி என்ன
நினைக்கிறீர்கள் என்று கேட்டால் உருப்புடாதுன்னு நினைக்கிறேன் என்பது போன்ற
வாத்தியாரின் அக்மார்க் பதில்களை படிக்கும்போது கடுகடுப்பு ஏற்படுகிறது. அடுத்து
ஒரு இருபது பக்கங்களுக்கு தனுமை என்ற சிறுகதைத் தொகுப்புக்கு வாத்தியார் எழுதிய
மதிப்பீடு வருகிறது. இந்த இருபது பக்கங்களும் புரிய வேண்டுமென்றால் அதற்கு நாம்
தனுமை சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்க வேண்டும். புதுக்கவிதைகள் பற்றி கொஞ்சம்,
சினிமா பற்றி கொஞ்சம், கம்ப்யூட்டர் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகள் கொஞ்சம்
என்று கொஞ்சம் கொஞ்சம் அலுப்பூட்டக்கூடிய விஷயங்கள். புத்தகத்தின் பிற்பகுதியில்
வரும் சுஜாதாவின் முதல் கதை பிரசுரமான கதை, விமானம் கற்றுக்கொண்ட அனுபவம்,
தமிழ்நாடு 2000 மைல் சுற்றுலா போன்றவை வாசிப்பின்பம் தருகின்றன. ஆனாலும் பின்னட்டை
வாசகம் கொஞ்சம் அதிகப்படி.
மோகினி படித்தேன். வ.கீராவின்
சிறுகதைத் தொகுப்பு. வட்டார வழக்கு என்றால் எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை. நாக்கு
சுளுக்கிக்கொள்ளும். வட்டார வழக்கின் கடுமை தாளாமல் பத்து பக்கங்களோடு தலைமுழுகிய
புத்தகங்களெல்லாம் உண்டு. கொஞ்சம் கஷ்டப்பட்டு மோகினி பழக்கமாகிக்கொண்டாள்.
எழுத்தாளர்
செட்டிக்குளம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த ஊரை பொறுத்தவரை மூன்றே வேலைகள்
தான். விவசாயம், லாரி ஓட்டுனர், பனியன் தொழிற்சாலை. வ.கீராவின் கதைகளில்
பெரும்பான்மை லாரியும் லாரி சார்ந்தவையாகவே இருக்கின்றன. லாரி ஓட்டுனர் / கிளீனர்
வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை பேசுகின்றன. தகவல்கள் சொல்கின்றன. கதைகளினூடே அவருடைய வட்டார மக்களின்
வாழ்க்கைமுறை, அரசியல் போன்றவை சொல்லப்படுகின்றன. லாரி ஓட்டுனர்கள் என்றால்
விலைமாதுகள் கட்டாயமாயிற்றே. அவர்களும் ஆங்காங்கே கதைகளுக்கு நடுவே புளியமரங்களின்
பின்னாலிருந்து எட்டிப் பார்க்கிறார்கள். வ.கீராவின் கதைகள் இப்படி பல நிறங்கள்
கொண்டிருந்தாலும் அவற்றின் மையச்சரடு கிராமத்து பெண்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள்.
குறிப்பாக நிறமற்றவளின் கண்கள் என்கிற கதை மனதில் ஒரு லாரி பாரமேற்றுகிறது. நிறைய
கதைகள் கலங்க வைக்கின்றன. ஹேப்பி எண்டிங்குக்காக கடைசியில் வைக்கப்பட்டிருக்கும்
குறத்திக்கவுண்டனூர் கதை தொகுப்பிலேயே அதிகம் பிடித்திருந்தது.
சிலருக்கு சிம்ரனை பிடிக்கும்,
சிலருக்கு ஜோதிகாவைப் பிடிக்கும். சிலருக்கு த்ரிஷா பிடிக்கும் இல்லையென்றால்
நயன்தாரா. மீனாவை எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
ஆங்கிலத்தில்
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பார்கள். ஒரு விஷயத்தை ஒரு கோணத்தில் பார்த்தால்
ஒருமாதிரியாகவும் வேறொரு கோணத்தில் பார்க்கும்போது முற்றிலும் வேறாக இருக்கும்.
அதற்கு சிறந்த உதாரணம் மீனா என்பேன். முத்து திரைப்படம் வெளிவந்தபோது எனக்கு
ஆரம்பப்பள்ளி வயது. அதில் இடம்பெற்ற தில்லானா தில்லானா பாடல் பெரிய ஹிட். அப்பொழுது
‘லைட் பெல்ட்’ சிறுவர்கள் மத்தியில் பிரபலம். லைட் பெல்ட் என்பது என்னவென்றால் நாம்
இடுப்பில் அணியக்கூடிய பெல்ட் சின்னச் சின்ன LED புள்ளிகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும். இடுப்பில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் விளக்குகள் ஒளிரும்.
ஒளிரும்போது பார்ப்பதற்கு தில்லானா தில்லானா பாடலில் ரஜினி அணிந்திருக்கும்
இடுப்புப்பட்டை போலவே இருக்கும். நாங்கள் அதை அணிந்துக்கொண்டு ரஜினி போல டான்ஸ் ஆட
விபரீதமாக முயன்றிருக்கிறோம். அப்பொழுதெல்லாம் தில்லானா பாடலை விகல்பமில்லாமல்
பார்த்து ரசித்திருக்கிறோம். பாடலில் ரஜினியும் மீனாவும் மொத்தம் எத்தனை வண்ண
உடைகள் அணிகிறார்கள் என்பதை எண்ணி, எண்ணி வியந்திருக்கிறோமே தவிர ஒருமுறை கூட
ஆபாசமாக பார்த்ததில்லை. இப்பொழுது பார்த்தால் மீனாவின் அசைவுகள் அத்தனை விபரீதமாக
தெரிகிறது. மத்திய பிரதேசத்தை வேறு அடிக்கடி க்ளோஸப்பில் காட்டுகிறார்கள். அந்த
நீலநிற உடையில் மீனா அவ்வளவு செக்ஸி. மீனா ஒரு தேவதை. மீனாவைப் பற்றி தனியாக
இன்னொரு சமயம் எழுத வேண்டும்.
இப்பொழுது நேரமிருந்தால் வீடியோவில் 2:10ல் தொடங்கி 2:45
வரை ம்யூட்டில் பாருங்கள்.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
5 comments:
ரொம்ப நாளைக்குப் பிறகு உங்க பகிர்வு பார்த்து மகிழ்ச்சி.
வழக்கம் போல் தொகுப்பு நன்று...
நாயை அடிச்சாச்சு இனி சுமந்துதானே ஆகணும்... சசியின் திருவிளையாடல்.
வட்டார வழக்கு கதைகள் எனக்குப் பிரியம்... இருப்பின் சில வார்த்தைகளை புரிந்து கொள்வது கடினம்.
சசிகலாவால் நல்லது நடக்கும்க்குற உங்க நம்பிக்கை பலிக்கட்டும்
மீனாவை செக்ஸியா பார்க்கணும்னா அவ்வை சண்முகி பாருங்கோ
பிரச்சினை சசிகலா இல்ல பாஸ், அவங்க சொந்தக்காரங்கதான், அதான் மக்கள் எதிர்கிறாங்க.
இப்பொழுது தேவை அதுவா இல்லை இதுவா என்பதல்ல,
நாட்டில் நிறைந்து நிறைந்து கிடக்கிற பிரச்சனைகளை
சாமாளிக்கத்தெரிந்த சூசகம் மிக்கவரே,,,/
Post a Comment