13 February 2017

பிரபா ஒயின்ஷாப் – 13022017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

நீண்ட நாட்களுக்குப் பிறகு மொபைலில் பாடல் தொகுப்பு இல்லாத காரணத்தினால் பண்பலை கேட்க வேண்டிய சூழல். பண்பலைகளில் மூன்றில் ஒரு பங்கு நேரம் மட்டும்தான் பாடல்கள் ஒலிபரப்பாகின்றன. நிறைய விளம்பரங்கள். பெரும்பாலானவை அபார்ட்மெண்ட்ஸ், நகைக்கடை போன்ற சத்யம் தியேட்டர் வகையறா விளம்பரங்கள். தனியார் பண்பலைகள் அறிமுகமான புதிதில் எங்கு பார்த்தாலும் பண்பலை தான் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அப்போது சூரியனும், மிர்ச்சியும் ரஜினி, கமல் மாதிரி. கொஞ்ச நாட்களில் ஒவ்வொரு பண்பலையாக அறிமுகமாகி அவற்றின் மீதிருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. இப்பொழுது பண்பலை அதிகம் ஒலிப்பது கார் ரேடியோக்களில் மட்டும்தான். அதனால்தானோ என்னவோ பணம் புரளும் ஆட்களை குறி வைத்தே விளம்பரங்கள் வருகின்றன. இன்னொரு விஷயம். தொலைக்காட்சியை விட விளம்பரம் செய்வதற்கு உகந்த, விளம்பரம் செய்தால் அதிக பலன் தரக்கூடிய ஊடகம் பண்பலை என்பேன். தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளை வந்தால் உடனடியாக சேனல் மாற்றுவது என்பது ஒரு சம்பிரதாயம் மாதிரி ஆகிவிட்டது. பண்பலைகளை நாம் பெரும்பாலும் மற்ற வேலைகளை கவனித்தபடி அரை உணர்வோடு கேட்பதால் அவ்வாறு சேனல் மாற்றுவதில்லை. விளம்பரங்களும் அதே அரை உணர்வோடு நம் மனதில் பதிந்து விடுகின்றன. விளம்பரங்கள் தவிர்த்து ஜாக்கிகள் ஆற்றும் சொற்பொழிவுகள் ஒருபுறம். இன்று திங்கட்கிழமை என்ற விஷயத்தை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி இரண்டு நிமிடங்களை கடத்திவிடுகிறார்கள். பண்பலை அறிமுகமான சமயம் சுசித்ராவின் வசீகர குரலுக்கும், ஏற்ற இறக்கத்திற்கும் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். (சுசித்ரா என்ன ஆனார் ?). இப்பொழுது பண்பலை தொகுப்பாளினிகள் குரல்கள் சிந்தசைஸர் வழியாக கேட்பதைப் போல செயற்கையாக இருக்கின்றன. அதிகம் கொனத்துகிறார்கள். அப்புறம் விளம்பரங்களுக்கும், பாடல்களுக்கும் இடையே வரும் டிஜிட்டல் இரைச்சல்கள், அசட்டுத்தனமான கொஞ்சம் நகைக்க வைக்கும் கான்செப்ட் ஜல்லிகள், விளம்பர இடைவேளையில்லா பாடல்கள் வழங்குவோர் என்று இரண்டு விளம்பரங்களை ஒப்பிப்பது என்று நிறைய பேஜார் செய்கிறார்கள். இடையிடையே கொஞ்சம் பாடல்களையும் ஒலிபரப்புகிறார்கள்.

காதல் வழியும் கோப்பை படித்தேன். யுவ கிருஷ்ணாவின் புத்தகங்கள் எனக்கு சிலபஸ் புக் போன்றவை. அவருடைய பத்தாவது புத்தகம். முதல் சிறுகதைத்தொகுப்பு. மொத்தம் இருபத்தி இரண்டு கதைகள். அவற்றில் இரண்டு ஏற்கனவே சரோஜா தேவியில் இடம் பெற்றவை. பொதுவாக தொகுப்புகளில் உள்ள சிறுகதைகளில் ஒரு பேட்டர்ன் தெரியும். யுவாவின் கதைகளில் அந்த மாதிரி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகம் யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான கதைகளில் ஆண்களின் அசட்டுத்தனங்கள் மையச்சரடாக இருக்கிறது. கதைகள் பெரும்பாலும் அவருடைய வாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன என்று தோன்றுகிறது. சில கதைகள் படித்து முடித்தபிறகு கதை நிஜமாகவே முடிந்துவிட்டதா என்று யோசனையாக இருக்கிறது. தாள் எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று எச்சில் விட்டு தேய்த்துக்கூட சோதித்துவிட்டேன். ஒரு ஃபுரூட் சலாத் போல வெளிவந்திருக்கும் யுவாவின் காதல் வழியும் கோப்பையின் சிறப்பம்சம் – ஒவ்வொரு கதையின் முடிவிலும் அது எந்த இதழில், எந்த ஆண்டில் வெளியானது என்ற குறிப்பு இருக்கிறது. இது அந்தந்த இதழ்களின் தன்மையை சொல்லி நமக்கு இதழியல் பாடம் நடத்துகிறது.

சைத்தான் படம் வெளிவந்த புதிதில், ‘ஆடுகளம் முருகதாஸை ஐடி ஊழியராக நடிக்க வைத்திருப்பதெல்லாம் காஸ்டிங் அபத்தம்’ என்று ஒரு கறாரான விமர்சகர் எழுதியிருந்தார். எனக்கும் கூட படம் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது. ஏன் நம்முடைய மனம் ஆடுகளம் முருகதாஸை ஐடி ஊழியராக ஏற்க மறுக்கிறது ? ஒன்று, ஆ.மு நிஜத்தில் எப்படி என்று நமக்குத் தெரியாது. ஆனால் சினிமாவைப் பொறுத்தவரையில் அவர் அதிகம் படிக்காத, அடித்தட்டு ஆள் வேடங்களையே தொடர்ந்து செய்துவருகிறார். அதன் காரணமாக நமக்கு அவர் மீது ஒரு கற்பிதம் ஏற்பட்டிருக்கலாம். இரண்டு, ஐடி ஊழியர் என்றாலே நன்கு படித்த, ஹேண்ட்ஸம்மான, ஸ்டைலாக ஆங்கிலம் பேசக்கூடிய இளைஞன் என்கிற கற்பிதமும் சினிமாக்களால் நமக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படியென்றால் ஆ.மு.வைப் போல அதாவது அவருடைய கதாபாத்திரங்களைப் போல அடித்தட்டு வர்க்க இளைஞன் ஒருவன் ஐ.டி பணியில் சேரவே முடியாதா ? தாராளமாக சேரலாம். ஆனால் ஐ.டி. துறைக்கென சில எழுதப்படாத விதிமுறைகள் உள்ளன. அல்லது அங்கே சேர்ந்தபிறகு மற்றவர்களைப் பார்த்து நீங்களாகவே உங்களிடம் சில விஷயங்களை மாற்றிக்கொள்ள முனைவீர்கள். டீசண்டாக உடையுடுத்த தொடங்குவீர்கள், பிராண்டட் துணிகள், உபகரணங்கள் மட்டும் வாங்குவீர்கள், பீட்ஸா சாப்பிடத் துவங்குவீர்கள், விம்பிள்டன், ஃபார்முலா ஒன், கேம் ஆஃப் த்ரோன்ஸ், ப்ரேக்கிங் பேட் எல்லாம் பார்க்கத் துவங்குவீர்கள், செவர்லேயில் ஏசி சுமார்தான் என்று நண்பருக்கு ஆலோசனை சொல்வீர்கள், நகருக்கு ஒதுக்குப்புறமாக அபார்ட்மென்ட் விலை விசாரிக்கத் துவங்குவீர்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் நீங்கள் ஐரோப்பியாவில் வாழ்ந்துக்கொண்டிருப்பதாகவே நம்பத் துவங்கிவிடுவீர்கள். ஒருவகையில் பார்த்தால் உங்கள் நிறுவனம் இதற்கெல்லாம் சேர்த்து தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் சம்பளத்தை சுளையாக வாங்கி ஃபிக்ஸட் டெப்பாஸிட்டில் போட்டுவிட்டு எப்போதும் போல திருப்பூர் காட்டனில் எடைக்கு வாங்கிய துணியையும், மூன்று வருடங்களுக்கு முன்பு நன்றாக உழைக்கும் என்று பாட்டாவில் வாங்கிய, கொஞ்சம் அடி வாங்கிய ஷூவையும் போட்டுக்கொண்டு, துண்டு பீடி வலித்துக்கொண்டு, அசிங்கமாக தமிழ்ப்படங்கள் பார்த்துக்கொண்டு, ங்கோத்தா, ங்கொம்மாலே என்று பேசிக்கொண்டிருந்தால் ஐ.டி துறையானது உங்களை வேறு வகையில் சிறப்பாக கவனிக்கும். அதனால் ஒருவேளை தப்பித்தவறி ஆடுகளம் முருகதாஸுக்கு ஐடியில் வேலை கிடைத்தால் கூட அதிகபட்சம் ஆறே மாதங்களில் அவர் ஜாவா சுந்தரேசன் ஆகிவிடுவார்.

சாஷா திருப்பதிக்கு தமிழ் தெரியாது என்று சொன்னால் நம்ப முடியவில்லை. சாஷாவின் பெயரில் தான் திருப்பதி. பிறந்தது கஷ்மீரில். வசிப்பது மும்பையில். தமிழ் சினிமாவில் தமிழ் தெரியாமல் பாடல்கள் பாடுபவர்கள் அநேகம். அவர்களெல்லாம் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் பாடல் வரிகளை எழுதி வைத்துக்கொண்டு பாடுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி பாடுபவர்களின் கொஞ்சல் தமிழில் ஒரு அழகியல் இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் சாஷாவின் உச்சரிப்பு நன்றாக தமிழ் தெரிந்தவர்களை விட சிறப்பாக இருக்கிறது. 

சிலுக்கு மர பாடலில் நான் வைகையாத்து வெள்ளத்தோடு போனா, நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா என்ற வரிகளை கவனியுங்கள். அந்த ‘ள்ள’ உச்சரிப்பு ! சான்ஸே இல்லை. சாஷாவின் மரபணுவில் எங்கேயாவது தமிழ் இருக்கும் என்று யூகிக்கிறேன். லிங்காவில் என் மன்னவா, காவியத்தலைவனில் ஏய் மிஸ்டர் மைனர் போன்றவை சாஷாவின் மற்ற அற்புதங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

3 comments:

N.H. Narasimma Prasad said...

Nice...

அனுஷ்யா said...

1) /செவர்லேயில் ஏசி சுமார்தான்/

தங்கமீன்கள் பற்றி எழுதும்போது ராஜன் இதே வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.

2) சிலுக்கு மரமே பாடல் தமிழ் பாடல் என்ற தகவலுக்கு நன்றி ;)

Philosophy Prabhakaran said...

உங்களுக்கு அபார ஞாபக சக்தி மயிலன் :)