27 February 2017

பிரபா ஒயின்ஷாப் – 27022017

அன்புள்ள வலைப்பூவிற்கு,

மாதவன் (ஸ்ரீரங்கம்) எழுதிய சிமோனிலா கிரஸ்தரா சிறுகதைத்தொகுப்பை வாசித்தேன். காலகேய மொழியின் தொனியில் தலைப்பிடப்பட்டிருக்கும் மாதவனின் சிறுகதைத்தொகுப்பை நியாயமாக நான் ஒரு வருடத்திற்கு முன்பே வாசித்திருக்க வேண்டும். அப்படி இப்படியென கொஞ்சம் போக்கு காட்டிவிட்டுத்தான் என் கையில் கிடைத்திருக்கிறாள் சிமோனிலா கிரஸ்தரா. 

மாதவனின் கதைகள் இப்படியிருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வட்டார வழக்கு ஜார்கன்ஸ் அதிகம் கொண்ட கிராமத்து சிறுகதைகளாக இருக்கும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். வாமு கோமுவின் முன்னுரையில் சுஜாதா, சோதனை முயற்சி போன்ற குறிப்புகளைக் கண்டதும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. மொத்தம் பதினைந்து கதைகள். அவற்றில் ஒரு பத்து கதைகள் நாம் வழக்கமாக வாசிக்கும் சிறுகதை வார்ப்புருவிலிருந்து தள்ளி நிற்கிறது. எழுத்தாளரை சந்திக்க வரும் அவருடைய கதாபாத்திரம், டீக்கடையில் தோன்றிய கடவுள், மனிதனிடம் சிக்கிக்கொண்ட டைம் மெஷின், பொன்னியின் செல்வன் நாவலை அடியொற்றி எழுதப்பட்ட சிறுகதை என நிறைய ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ சிந்தனைகள். கருக்கல் என்கிற சிறுகதை அப்படியே ஜோக்கர் படத்தின் மையக்கருத்தை சொல்கிறது. ஜோக்கர் வெளிவந்தது ஆகஸ்ட் 2016ல், சிமோனிலா கிரஸ்தரா ஜனவரி 2016 வெளியீடு. குறிப்பிட்ட அந்த சிறுகதை அதற்கு முன்பே இணைய இதழில் வெளியாகியிருக்கும். ஒரு பழங்கதை படிக்கும்போது அபோகாலிப்டோ சினிமாவை நினைவூட்டுகிறது. எனக்கு பிடிக்கும் என்பதை சரியாக கணித்து, சிமோனிலாவை என்னிடம் சேர்ப்பித்த நல்ல உள்ளத்தை நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.

சென்னைக்கு மிக அருகில் எங்கேயாவது பைக் உலா போகலாமா என்று வெள்ளிக்கிழமை இரவு விவாதித்து சனிக்கிழமை காலையில் வேடந்தாங்கல் கிளம்பினோம். அப்படியே வழியில் கருங்குழி மலைக்கோவிலையும் பார்த்துவிடலாமா என்று திசைமாறி, அப்படியே கருங்குழி போகும் வழியில் திருவடிசூலத்தில் உள்ள கருமாரியம்மன் கோவிலையும் பைரவர் வீட்டையும் பார்த்துவிடலாமா என்று மாற்றுத்திட்டங்கள் வகுத்து பயணம் நீண்டுவிட்டது. திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு போகும் சாலையில் செங்கல்பட்டுக்கு எட்டு கி.மீ.க்கு முன்பு அமைந்திருக்கிறது திருவடிசூலம். மாம்பழ அய்யாவின் ஆதரவாளர்கள் நிறைந்த ஊர். ஊரைக் கடந்து உள்ளே சென்றால் ஒருபுறம் பைரவர் வீடும் இன்னொருபுறம் கருமாரியம்மன் ஆலயமும் வருகிறது. 

பைரவர் வீடு
பைரவர் வீட்டிற்குள் நுழையும்போதே பக்கா கார்ப்பரேட் ஆலயம் என்பது புரிந்துவிடுகிறது. ஷாத்ஷாத் பங்காரு அடிகளார் ஃபார்முலா. ஸ்வாமியின் பெயர் ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள். 2009ம் ஆண்டு எழுந்தருளிய ஃப்ரெஷ்ஷான ஸ்வாமி. இன்னொரு பத்து, பதினைந்து வருடங்களில் ஊரை வளைத்துப்போட்டுவிடுவார் என்று கணிக்கிறேன். டபிள்யூ டபிள்யூ டபிள்யூ டாட் பைரவர் வீடு டாட் காம் என்று வெப்ஸைட் கூட வைத்திருக்கிறார். நேரமிருந்தால் போய் ஸ்வாமிகளின் பூர்வீகத்தையும், புகைப்படத்தொகுப்பையும் பார்க்கலாம். இன்னொரு புறம், 51 அடி பிரம்மாண்ட சிலை அம்மன் சிலையைக் கொண்ட கருமாரியம்மன் கோவில். வெளியிலிருந்து அம்மனை தரிசிக்க முடியாதபடி அஸ்பெட்டாஸ் ஷீட் போட்டு மறைத்து வைத்திருக்கிறார்கள். மெனக்கெட்டு உள்ளே போய் பார்க்கும் அளவிற்கு ஆர்வமில்லாததால் திரும்பிவிட்டோம். பள்ளி மாணவ / மாணவிகளை இவ்விரு கோவில்களுக்கும் எக்ஸ்கர்ஷன் எல்லாம் அழைத்து வருகிறார்கள்.  

அடுத்தது கருங்குழி மலைக்கோவில். படியேறி போக வேண்டிய அவசியமில்லாமல் இருசக்கர வாகனங்களுக்கென அதிகம் பராமரிக்கப்படாத பாதையொன்று இருப்பது வசதியாக இருந்தது. ஒருபுறம் வைணவ குறிகளும், இன்னொரு புறம் சிவலிங்கமும் அமைந்திருந்திருக்கிறது. கூட்டம் அதிகமில்லை. உண்மையில் அன்றைய தினம் அங்கே எங்களைத் தவிர யாருமில்லை. 

கருங்குழி மலையிலிருந்து
மலையிலிருந்து பார்த்தால் சுற்றுவட்டார கிராமங்களும், சிறிய அணையொன்றும், நிலப்பரப்பும் அழகாக தெரிகின்றன. அங்கிருந்தே தண்ணீரில்லாத ஏரியின் வழியிலேயே பயணித்து வேடந்தாங்கலை சென்றடைந்தோம். நான் படித்த கல்லூரியிலிருந்து சுமார் பதினைந்து கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல். ஆனால் நான்காண்டு கல்லூரி வாழ்க்கையில் ஒருமுறை கூட அந்த திசைக்கு சென்றதில்லை. இப்பொழுது தான் திடீரென பயண ஆர்வம் பீறிடுகிறது. வெளியே பைனாகுலர்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. உள்ளே ஒரு கி.மீ. நீளத்திற்கு பாதை, இடதுபுறம் இடையிடையே மரங்கள் கொண்ட நீர்நிலை. 

வேடந்தாங்கல்
பறவைகள் கூட்டம் கூட்டமாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. மீனம்பாக்கம் பக்கம் சென்றது போல பறவைகள் ஒய்யாரமாக தரையிறங்குவதும், மீண்டும் பறப்பதுமாக இருக்கின்றன. ஒரு கணம் பறவைகளாகி விடலாமா என்று ஆசையாக இருக்கிறது. காதல் செய்வதற்கு தோதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது பூங்கா. புகைப்பட ஆர்வம் உள்ளவர்களுக்கு செமத்தியான இடம்.

ஒருபுறம் பைரவ ஸ்வாமிகள் போன்ற கள்ள ஆசாமிகளைப் பார்த்து மனம் கொதித்தாலும் ஜக்கியின் சிவராத்திரி நிகழ்ச்சி ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் அம்மன் கோவில் பாட்டுக்கச்சேரியை ரசிப்போம் இல்லையா அதுபோல ஜக்கியின் நிகழ்ச்சியை டிவியில் கண்டுகளித்தேன். கிட்டத்தட்ட ஒரு ஸ்டார் நைட் பாணியில் கேளிக்கையாக இருந்தது. நிகழ்ச்சியில் பாடிய கனலே கனலே பாடல் பயங்கரமாக மனதை ஆக்கிரமித்துக் கொண்டது. இணையத்தில் சல்லடை போட்டு தேடி அந்த பாடலை கண்டுபிடித்துவிட்டேன். ஈஷாவின் அலை ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல் அது. நித்தியின் ஆல்பங்களைப் போல அல்லாமல் இணையத்தில் எளிதில் கிடைக்கின்றன ஜக்கியின் பாடல்கள். எம்.பி.3யில் பாடலைக் கேட்டபிறகு தான் என்னை ஹெவியாக ஈர்த்தது பாடல் அல்ல, பாடகி என்று உணர்ந்துக்கொண்டேன். ஈஷாவின் மொத்த சிவராத்திரி நிகழ்வும் யூடியூபில் கிடைக்கிறது. குறிப்பிட்ட இந்த காணொளியில் 2:12:45 தொடங்கி காணொளியின் இறுதிவரை தோள்களை லேசாக அசைத்தபடி பாடும் அழகிய சிங்கரின் பெயர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN

Post Comment

5 comments:

பாஸ்கி said...

இறுதிவரை தோள்களை லேசாக அசைத்தபடி பாடும் அழகிய சிங்கரின் பெயர் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

எங்க தேடியும் கிடைக்கலப்பா.....

ஜீவன் சுப்பு said...

ஈஷா மையம் பக்கா என்டெர்டெயின்ட்மெண்ட் பாயிண்ட்.ரஹ்மான் ஷோ கூட இவ்வளவு டெக்னிக்ககலா வடிவமைக்கப்பட்டிருக்காது. சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா என்று மியூசிக் கலெக்ஷன் இருக்கு செம்மையா இருக்கும். கிட்டத்தட்ட மெஸ்மரிசம் பண்ற மாதிரி..!

குரங்குபெடல் said...

"கருக்கல் என்கிற சிறுகதை அப்படியே ஜோக்கர் படத்தின் மையக்கருத்தை சொல்கிறது. ஜோக்கர் வெளிவந்தது ஆகஸ்ட் 2016ல், சிமோனிலா கிரஸ்தரா ஜனவரி 2016 வெளியீடு. "


சுமார் 20 வருடம் முன்பு ' நான்தான் ஜனாதிபதியின் நேர்முக உதவியாளர் ' என்று ஒருவர் தமிழக ஊர் ஒன்றில்
( ஊர் பெயர் நினைவில்லை )
கிறுக்குத்தனமாக உலவி வருவதாக ஒரு கட்டுரை ஜுனியர் விகடனில் வெளிவந்தது .

ராஜூமுருகனும் விகடன் மாணவர் என்பதால் அந்த செய்தியில் இருந்துதான்
ஜோக்கர் உருவாகியிருக்கும் என நினைக்கிறேன்

Unknown said...

வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி ?

https://www.youtube.com/watch?v=kRQRe6NTD84

Ponmahes said...

செம பாட்டு பா...பதிவு அருமை...வாழ்த்துகள் ............