அன்புள்ள வலைப்பூவிற்கு,
ஆண்ட்ரியா தமிழில் பாடிய முதல் பாடல்
எது தெரியுமா ? விடை இறுதியில்.
கடந்த திங்கள் எழுத்தாளர் சுஜாதாவின்
நினைவு நாள். ரொம்ப சென்டிமென்ட் இல்லையென்றால் கூட ஏதோ ஒரு புத்தகத்திற்கு பதிலாக
அவருடையதை எடுக்கலாமே என்று நைலான் கயிறு படித்தேன். அவருடைய முதல் நாவல். முதல்
என்பதை நம்ப முடியவில்லை. பம்பாய் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்
கிருஷ்ணன் கொல்லப்படுகிறான். பேரலலாக சுனந்தா எனும் இளம்பெண்ணின் டைரிக்குறிப்புகள்
வருகின்றன. இறுதியில் ஒரு புள்ளியில் இரண்டும் இணைந்து கதையின் முடிவை நோக்கிச்
செல்கின்றன. கணேஷ் மட்டும் வரும் இந்த நாவலில் கணேஷும் கொஞ்சம் வசந்த் போல
குறும்பு செய்கிறார், பெண்களிடம் வழிகிறார். ப்ரியா பார்த்தபிறகு கணேஷை
படிக்கும்போதெல்லாம் பழைய ரஜினி நினைவுக்கு வருகிறார். ஒரு சமயம் கணேஷ் கதாபாத்திரமே
ரஜினியை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருக்குமோ என்று கூட அபத்தமாக தோன்றியது.
கணேஷ் அறிமுகமானது 1968. ரஜினி 1975. கணேஷ் ரஜினியை நினைவூட்டும் அதே சமயத்தில்
வசந்த் ‘திடீர்’ கன்னையாவை நினைவூட்டாதது ஆறுதலாக இருக்கிறது.
நைலான் கயிறை தொடர்ந்து சுஜாதாவின்
இரண்டாவது நாவலான அனிதா இளம் மனைவி படித்தேன். ஒரு தொழிலதிபர் கொல்லப்படுகிறார்.
அவருடைய இருபத்தி எட்டு வயது இளம் மனைவியையும், மனைவியை விட ஆறு வயது குறைவான
மகளையும் மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் துப்பறியும் நாவல். இதிலும் கணேஷ்
மட்டும் தனியாக வருகிறார். அனிதா சினிமாவாகவும் வந்திருக்கிறாள் என்று தெரிந்து
அதையும் பார்க்கத் துவங்கினேன். படத்தின் பெயர் 'இது எப்படி இருக்கு'. கணேஷாக
ஜெய்ஷங்கர் (இந்தியன் ஜேம்ஸ்பாண்ட்), அனிதாவாக ஒய்.விஜயா, தொழிலதிபரின் மகளாக
ஸ்ரீதேவி. ஏதோ ஒரு ஆர்வத்தில் பார்க்கத் துவங்கினாலும் கொஞ்ச நேரத்திலேயே போரடிக்க
துவங்கிவிட்டது. சுஜாதா ஸ்டைலா, கெத்தா சொன்ன பல விஷயங்களை சுரத்தே இல்லாமல்
தட்டையாக கையாண்டிருக்கிறார்கள். உதாரணமாக, நாவலில் பாஸ்கர் என்கிற கதாபாத்திரம்
அறிமுகமாகிறது. அவன் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கிறான். அது குறித்த விவரணைகள்
வருகிறது. விவரனையின் முடிவில் பாஸ்கர் எடுத்த காரியத்தை அளவாக, கச்சிதமாக
முடிப்பான். அதிகம் பேசமாட்டான் என்ற தகவல் நமக்கு சொல்லப்படுகிறது. இதுவே
சினிமாவில் அவன் அப்போது சீட்டு விளையாடிக்கொண்டிருந்தான் என்று மட்டும் தட்டையாக
காட்சி படுத்தப்பட்டுள்ளது. ஜெய்ஷங்கர் சோதிக்கிறார். ஸ்ரீதேவி சோதிக்கிறார்.
இருவரும் காதல் வேறு செய்து சோதிக்கிறார்கள். ஆறுதலான வேடம் ஒய்.விஜயா. நிஜமாகவே
அப்போது இளமையாக இருந்திருக்கிறார். ஆனாலும் ஸ்ரீதேவி அந்த வேடத்தில்
நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. இது எப்படி இருக்கு
படத்தோடு ஒப்பிடும்போது ப்ரியா ஆயிரம் மடங்கு பெட்டர்.
மூன்று வாரங்களுக்கு முன் பண்பலை பற்றி
எழுதியதில் சுசித்ரா என்ன ஆனார் என்று கேட்டிருந்தேன். இப்போது ட்விட்டர் போனால்
ஒரே சுசித்’ராவாக’ இருக்கிறது. சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற
தகவல் ஒரு சின்ன நெருடலை ஏற்படுத்துகிறது. அதே சமயம் பல மாமாங்கமாக ட்விட்டர்
பக்கம் போகாதவர்கள் எல்லாம் சுசித்ரா அக்கெளண்டை தேடி படையெடுத்துக்
கொண்டிருக்கிறார்கள் (என்னையும் சேர்த்து ஹி ஹி..). இப்போது ட்விட்டரில் சுச்சி
கணக்கை கண்டுபிடிப்பது என்பது திருநெல்வேலி பஸ் ஸ்டாப்பில் ஒரிஜினல் சாந்தி ஸ்வீட்ஸை
தேடுவது போலிருக்கிறது. எல்லா கணக்கிலும் லீலை, லீலை என்று ஏதேதோ பிட்டுக்களை
அவரவர் விருப்பத்திற்கு தகுந்தாற்போல பெயர் சூட்டி
வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். In fact, சுச்சி வெளியிட்டுள்ளவற்றில் அனுயா,
சஞ்சிதா தவிர்த்து மற்ற எதுவும் ஸ்கேண்டல்களே கிடையாது. கட்டிப்பிடிப்பது எல்லாம்
மேல்தட்டு ஆட்கள் மத்தியில் சாதாரணமாகிவிட்டது. ஒருவகையில் சுசித்ரா வெளியிடும்
எப்பசாப்பையான ஸ்கேண்டல்களைக் கூட பொறுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் இதுதான்
சாக்கு என்று அடுத்தவர் படுக்கையறையை அவருடைய அனுமதி இல்லாமல் எட்டிப்பார்ப்பது
என்று துவங்கி ஒழுக்க மதிப்பீடுகள், தனிமனித உரிமை மீறல், போன்ற வார்த்தைகளைப்
போட்டு பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். இவர்கள் அந்த ஸ்கேண்டல்களை வக்கணையாக
பார்த்துவிட்டு பிறகு இப்படி எழுதுகிறார்கள் என்பதுதான் கொடுமை. இதையெல்லாம்
பார்க்கும்போது எங்களுக்கு பிட்டே வாணாம்டா தயவு செய்து எங்களுக்கு மாரல் சயின்ஸ்
கிளாஸ் எடுக்காதீங்கடா என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
சுசித்ராவைப் போலவே இப்போது என்ன ஆனார்
என்று யோசிக்கும் இன்னொரு ஆதர்ஸ பாடகி வசுந்தராதாஸ். கோலியுட் முதலில்
பயன்படுத்தத் தவறியது வசுந்தராவின் இளமையை. ஒருமாதிரி தொப்பை போட்டபிறகு தான் அவரை
ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் கலைஞானிதான் கண்டுபிடித்துக்
கொடுத்திருக்கிறார். இரண்டாவது பயன்படுத்தத் தவறியது அவருடைய குரலை. இரண்டாவது
கொஞ்சம் பரவாயில்லை. தமிழில் ஒரு பத்து, பதினைந்து பாடல்கள் பாடியிருப்பார் என்று
நினைக்கிறேன். வசுந்தராவைப் பற்றி சொன்ன விஷயங்கள் (என்ன ஆனார் என்பதைத் தவிர) பொருந்தக்கூடிய
இன்னொரு பாடகி & நடிகை ஆண்ட்ரியா. அந்நியனில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும்
நோக்கியா தான் ஆண்ட்ரியா பாடிய முதல் பாடல். இந்தப்பாடலை வசுந்தரா தாஸும் சேர்ந்து
பாடியிருக்கிறார் என்பது இதன் சிறப்பு. ஆண்ட்ரியா குரலையும், வசுந்தராவின் குரலையும்
ஒருசேர கேட்பது என்பது த்ரீஸம் ஆஸம். கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள் இந்தப்பாடலில் இந்த
இரு தேவதைகளின் குரல்களையும் பிரித்தறியுங்கள்.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
1 comment:
பதிவு அருமை....தம்பி...
வாழ்த்துகள்....
Post a Comment