அன்புள்ள வலைப்பூவிற்கு,
துண்டுத் துண்டாக அவ்வப்போது சின்னத்திரையில் பார்த்த சில காட்சிகள்
பிடித்திருந்ததால் ரோமியோ ஜூலியட் (2015ல் வெளிவந்த தமிழ்ப்படம்) பார்த்தேன். சராசரி
பொழுதுபோக்கு சினிமாவிற்கான நல்ல உதாரணம் ரோமியோ ஜூலியட். காதலியால் ஏமாற்றப்பட்ட காதலன்
அவளுக்கு நூதனமுறையில் தன் காதலை புரிய வைத்து அவளுடன் இணைகிறான். இந்த ஒன்லைன்
கேட்பதற்கு கொஞ்சம் புதிதாக இருக்கிறதில்லையா ? முன்பே சொன்னது போல
துண்டுத்துண்டாக சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஆனால் முழுப்படமாக
பார்க்கும்போது ஒருவித தொய்வு வந்துவிடுகிறது. மேலும் கதையில் நிறைய தர்க்கப்பிழைகள்.
லட்டு மாதிரி இருக்கும் மதுமிளாவை பார்த்தபிறகும் அவருடைய தோழியான ஹன்சிகாவைப்
போய் காதலிக்கிறார் ஜெயம் ரவி. எவ்வளவு பெரிய தர்க்கப்பிழை இது ! அடுத்தது மச்சி
மச்சி என்று செல்லம் கொஞ்சிக்கொண்டு ஜெயம் ரவியிடம் வந்து அழகாக ப்ரொபோஸ்
செய்கிறார் பூனம் பஜ்வா. அவரையும் விட்டுவிட்டு ஹன்சிகாவிடமே
தொங்கிக்கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. தமிழில் மட்டும் ஹன்சிகா பதினைந்து
படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துவிட்டார் என்பதை நினைக்கும்போது ஜெயம் ரவி
மட்டுமல்ல அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களின் மீதும் கோபமாக இருக்கிறது. அப்படி என்ன
பெருசாக இருக்கிறது ஹன்சிகாவிடம் ?
பூர்ணா, பூனம் பஜ்வா... ஏன் காஜல் அகர்வால் கூட... இன்னும் சில
நடிகைகள் இருக்கிறார்கள். திரைத்துறையில் நுழையும்போது வெகு சாதாரணமாக
இருக்கிறார்கள். வருடங்கள் கடந்தபின் ஒரு மதுபானத்தை போல மேம்படுகிறார்கள். பூனம்
பஜ்வா சேவலில் அறிமுகமான போது அப்படியொன்றும் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால் ரோமியோ
ஜூலியட்டில் செம்ம க்யூட்டாக இருக்கிறார். ரோமியோ ஜூலியட் வெளிவந்து இரண்டு
ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது பூனம் டைலூஷன் பாயிண்டை தாண்டிப் போய்விட்டார். ஒரு
சுற்று அகலமாகிவிட்டார். கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட். வருத்தப்பட்டு பிரயோஜனமில்லை.
எட்டு தோட்டாக்கள் பார்த்தேன். இத்திரைப்படத்தில் துணை வேடத்தில்
நடித்திருக்கும் மீரா மிதுன் என்பவர் என்னுடைய முன்னாள் சக ஊழியர் என்ற வகையில்
அவரை சில முறை பார்க்கவும், அவரிடம் பேசவும் செய்திருக்கிறேன். மீரா என்ன
செய்திருக்கிறார் என்று பார்ப்பதற்காகவும், பக்கத்தில் பார்த்து சைட்டடித்த பெண்ணை
வெண்திரையில் சைட்டடிப்பதற்காகவும் எட்டு தோட்டாக்களுக்கு சென்றேன். மேலும்
வெளிவந்த முதல் நாளே விமர்சகர்களின் ஓஹோபித்த பாராட்டுகளால் கொஞ்சம் எதிர்பார்ப்பு
இருந்தது.
கதாநாயகனாக நடித்திருக்கும் வெற்றி அரும்பாடுபட்டு எட்டு தோட்டாக்களை
படுகொலை செய்ய முயன்றிருக்கிறார். சுட்டுப் போட்டாலும் நடிப்பு வராத வகையறா.
எல்லாவற்றிற்கும் முகத்தில் பூஜ்ய பாவனை. சர்வநிச்சயமாக இவர் தயாரிப்பாளருக்கு
நெருக்கமான ஆளாக இருக்க வேண்டும். வெற்றியிடமிருந்து படத்தை காப்பாற்றியிருப்பது
நாசர், எம்.எஸ்.பாஸ்கர் என்கிற இரண்டு நடிப்புலக ஜாம்பவான்கள். நாசருக்கு பெரிய
ஸ்கோப் இல்லையென்றால் கூட அவருடைய கதாபாத்திரமும், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள
வசனங்களும் பிடித்திருந்தன. எம்.எஸ்.பாஸ்கர் அமர்க்களம். ஒரு குறிப்பிட்ட
காட்சியில் சுமார் பத்து நிமிடங்களுக்கு அவருக்கு மட்டும் க்ளோசப் ஷாட்
வைத்திருக்கிறார்கள். அதில் அத்தனை நுட்பமாக நடித்திருக்கிறார் எம்.எஸ்.பி.
தொழில்நுட்பத்தரம், பரபரப்பான திரைக்கதை, நாசர் மற்றும்
எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு போன்றவை இருந்தாலும் ஒரு திரைப்படம் நமக்குள் கடத்துகிற
உணர்வு மிக முக்கியமானது. அந்த வகையில் எட்டு தோட்டாக்கள் முழுக்க ஒரு போலி
மனிதாபிமானம் விரவியிருப்பதைக் காண முடிகிறது. தானே புண்ணை சொறிந்துக்கொண்டு தானே
மருந்தும் தடவுவது போல. உங்களுக்கு துரோகமிழைத்த ஒருவர் உங்களிடம் வந்து அவர்
இழைத்த துரோகத்தை யாரோ செய்தது போல நெஞ்சுருகி உங்களுக்கு ஆறுதல் சொன்னால் உங்களுக்கு
எப்படி இருக்கும் ? அப்படியிருக்கிறது எட்டு தோட்டாக்களின் அடிப்படை கதை. ஒன்றுமில்லை,
நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் இதுபோன்ற எண்ணம் ஒரு முறையாவது தோன்றியிருக்கும்.
காதலி / காதலன் துரோகமிழைக்கும் போது, மேனேஜர் காண்டு ஏற்றும்போது, அரசியல்வாதிகள்
ஓட்டு கேட்டு வரும்போது, நாட்டில் அநீதிகள் நடக்கும்போது, ம்மாள ஒரு துப்பாக்கி
மட்டும் இருந்தால் டொப்புன்னு சுட்டுட்டு போயிட்டே இருக்கலாம் என்று தோன்றும். அப்படிப்பட்ட
பெர்வர்ட்டட் கற்பனை நிஜமானால் எப்படியிருக்கும் என்பதுதான் கதை. அதில் எதுவும்
தவறில்லை. ஆனால் அதே குரூர குணம் கொண்ட ஒருவன், நெகிழ, நெகிழ பதினைந்து நிமிடங்கள்
(அதுவும் அவன் யாருடைய பணியை கெடுக்கிறானோ அவனிடமே) பேசுவது உறுத்துகிறது.
இறுதியில் இது பழிவாங்கும் உணர்வை ஆதரிக்கும் சாதாரண பொழுதுபோக்கு படமா அல்லது அற
போதனை ஏதாவது செய்ய முயற்சிக்கிறார்களா என்று குழப்பமாகவே இருக்கிறது. எட்டு
தோட்டாக்களின் கதை அகிரா குரோசோவாவின் ஸ்ட்ரே டாக் படத்தின் தழுவல் என்று
படித்தேன். வெளிநாட்டு சினிமாக்களில் இருந்து படம் எடுப்பவர்கள் அதனை அப்படியே
எடுத்து வைத்தால் கூட எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கிறது. அதனை தமிழ் சினிமாவுக்கு
தகுந்தாற்போல மாற்றுகிறேன் பேர்வழி என்று கொத்து பரோட்டா போட்டுவிடுகிறார்கள். மேலும் காதல், அபர்ணா பாலமுரளி, பாடல்கள் என நிறைய தேவையில்லாத விஷயங்களை சேர்த்து நேரத்தை நீட்டியிருக்கிறார்கள். தனிப்பட்ட
முறையில் எட்டு தோட்டாக்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. வெறும்
நல்லவனாக மட்டும் இருப்பவர்களுக்கு இவ்வுலகம் உகந்ததல்ல. நல்லவனா இருந்தா பெருமாள்
கோவில் வாசல்ல விபூதிக்கடை வேணும்னா போடலாம் என்று நாசருக்கு ஒரு வசனம் கொடுத்திருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால் பெருமாள் கோவில் வாசலில்
விபூதிக்கடை போடும் டெண்டரைக்கூட எம்.எல்.ஏ.வுக்கோ, மந்திரிக்கோ லஞ்சம் கொடுத்து கைப்பற்ற
வேண்டிய துர்பாக்கிய சூழலில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.
மீராவைப் பற்றி மறந்தே போய்விட்டேன். தன்னுடைய மாடலிங்
புகைப்படங்களில் இருப்பது போலில்லாமல் அழகாக இருக்கிறார் மீரா. இவருடைய வேடம்
இப்படித்தான் இருக்கும் என்று முன்பே யூகித்திருந்தேன். அது சரியாக
அமைந்திருந்தது. மூன்று சிறிய காட்சிகளில் வருகிறார். அதில் ஒன்று அழுகைக்காட்சி.
வாய்ப்பு கிடைத்தால் பெரிய நடிகையாக வருவார் என்பதில் சந்தேகமே இல்லை. ஒருவேளை
மீராவை எப்பொழுதாவது சந்திக்க நேர்ந்தால் ஏன் காஸ்மெட்டிக் சர்ஜரி
செய்துகொண்டீர்கள் ? என்று கேட்கவேண்டும். உங்களுக்கு பழைய மூக்குதான் அழகு
மீரா !
ஒருமுறை டிஸ்கவரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாசர் தமிழ்
சினிமாவில் அதிகமாக அவமானப்படுத்தப்பட்ட வார்த்தை ‘புரட்சி’ என்று பேசியதாக
நினைவிருக்கிறது. அதுபோல திரைத்துறையில், திரைக்கு வெளியே தவறாக பயன்படுத்தப்படும்
ஒரு வார்த்தை ‘ப்ரொமோஷன்’. இப்பொழுதெல்லாம் ஒரு படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு
பங்கை அதன் ப்ரொமோஷனுக்காகவே செலவிடுவதாக சொல்கிறார்கள். ஒரு படத்தை
எடுத்து முடிப்பதை விட, அதனை கச்சிதமாக ப்ரொமோட் செய்வதுதான் முக்கியம்
என்கிறார்கள். அந்த வகையில் எட்டு தோட்டாக்கள் டீம் செமத்தியாக வேலை
பார்த்திருக்கிறார்கள். செய்துக் கொள்ளட்டும். ஆனால் ப்ரொமோஷன் என்பது படைப்பில்
உள்ள நல்ல விஷயங்களை எடுத்துரைத்து கவனம் ஈர்க்க வேண்டுமே தவிர இல்லாததைச் சொல்லி
பார்வையாளர்களை ஏமாற்றக்கூடாது. சொல்லி வைத்தாற்போல நிறைய பேர் எட்டு தோட்டாக்கள்
துருவங்கள் பதினாறை விட நல்ல படம் என்று எழுதியிருக்கிறார்கள். இரண்டு தலைப்புகளிலும்
எண் வருவதால் இப்படி விபரீதமாக ஒப்பிடுகிறார்களா அல்லது இணைய விமர்சகர்களுக்கே
உரித்தான மாஸ் மனோபாவமா என்று தெரியவில்லை. யாராவது இப்படி அபத்தமாக ஒப்பிடுவதைப் பார்த்தால்
வாயிலேயே ரெண்டு போட வேண்டுமென தோன்றுகிறது. ப்ரொமோஷன் என்கிற பெயரில் நீங்கள்
இப்படி மற்றவர்களை ஏமாற்றி தற்காலிக கவன ஈர்ப்பு வேண்டுமானால் செய்யலாம், மற்றபடி
காலவோட்டத்தில் உங்கள் மீதான நம்பகத்தன்மையை நீங்களே குறைத்துக் கொள்கிறீர்கள் கோப்பால்
!
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
No comments:
Post a Comment