அன்புள்ள வலைப்பூவிற்கு,
நான்கு நாட்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஒயின்ஷாப்பின்
இப்பிரதியை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் நான் கோவாவின் ஏதாவது ஒரு
கடற்கரையில் உற்சாகமாக இருப்பேன்.
புதிய காதலி எஸ்கேப்பில் இரண்டு படங்கள் பார்த்தேன். முதலாவது,
ஜியோஸ்டார்ம். இரண்டாவது, அவள்.
ஜியோஸ்டார்ம் படம் பார்க்கப் போனதே ஏறக்குறைய ஒரு டிஸாஸ்டர் பட
க்ளைமாக்ஸ் போலாகிவிட்டது. ஸ்பென்ஸரிலிருந்து வெளியே வரும்போதே இடியுடன் கூடிய
கனமழை. சுமார் நூறு பேர் மழை நிற்பதற்காக காத்திருக்க, ஒரு கதாநாயகனை போல அவர்களை
விலக்கிக்கொண்டு நான் வெளியே வந்து, மேலேயிருந்து கேட்ட இடி சப்தம் காமராசு பட
லைலாவை நினைவூட்ட, பயந்தபடியே நடந்துவந்து எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்குள் நுழையும்போது
என்னிரு ஷூக்களிலும் தலா ஒரு லிட்டர் தண்ணீர் சேர்ந்திருந்தது. சதக்கு சதக்கு
என்று ஈர ஷூக்களை குற்ற உணர்வுடன் மிதித்துக்கொண்டு திரையரங்கம் சென்றால் அங்கே
நிறைய பேருக்கு அதே நிலைதான்.
நம் தமிழ் சினிமாக்களில் ஹீரோ அரசியல்வாதியின் சட்டையைப் பிடித்தால்
நாமெல்லாம் சிலிர்த்துப் போய் சில்லறையை சிதறவிடுவது போல ஹாலியுட்டில் விண்வெளிப்
படங்களுக்கு சிலிர்ப்பு அதிகம் என்று ஒருமுறை (ஹாய்) மதன் சொல்லியிருந்தார். ஜியோஸ்டார்மும்
அந்த வரிசைதான்.
பருவநிலை மாற்றங்களால் உலகில் ஆங்காங்கே பேரழிவுகள் நிகழத்
துவங்குகின்றன. அவற்றிலிருந்து உலகை காப்பாற்றுவதற்காக நாடுகள் ஒன்றிணைந்து ஒரு
விண்வெளி முகாம் அமைத்து செயற்கைக்கோள்களை நிறுவுகின்றன. விண்வெளி முகாமின் பெயர் ‘டச்சு
பாய்’ ! (ஆங்கில துணைப் பாடத்தில் அணையில் விழுந்த துளையை கட்டைவிரல் கொண்டு
அடைக்கும் சிறுவனின் கதை நினைவிருக்கிறதா ?). துவக்கத்தில் அமெரிக்காவின்
கட்டுப்பாட்டில் இருக்கும் டச்சு பாயை உலக நாடுகள் குழுவிடம் ஒப்படைப்பதற்கு ஒரு
வாரம் முன்னதாக அதன் சில செயல்பாடுகள் தவறாக அமைகின்றன. அப்கானில் ஒரு கிராமமே
உறைந்து போகிறது, ஹாங் காங்கில் பூமியின் அடியிலுள்ள எரிவாயுக் குழாய்கள்
வெடிக்கின்றன. டோக்கியோவில் பனிக்கட்டி மழை பொழிகிறது, இவற்றிற்கெல்லாம் பின்னணியில்
மிகப்பெரிய சதி இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக ஜியோஸ்டார்ம் எனப்படும் உலகளாவிய
பேரழிவு ஏற்படப்போகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு, இறுதியில் சதி
முறியடிக்கப்பட்டதா என்று சொல்கிறது கிளைமாக்ஸ் !
அண்ணன் – தம்பி சென்டிமென்ட், அப்பா – மகள் சென்டிமென்ட், கொஞ்சம்
காதல், ஒரு படுக்கையறைக் காட்சி என்று பக்கா தமிழ் சினிமா கண்டென்ட். ரீமேக்
செய்தால் நல்ல இரட்டை ஹீரோ சப்ஜெக்ட் தயார். ஒரே ஆள் டபுள் ஆக்ஷனும் செய்யலாம்.
ஆப்கன், ஹாங் காங், டோக்கியோ வரிசையில் நம் இந்தியாவின் மும்பையும்
ஒரு காட்சியில் வருகிறது. இந்தியா என்றதும் ஒரு புழுதி படர்ந்த கடைத்தெரு,
அழுக்கான மனிதர்கள், அழுக்குச் சட்டையில் ஒரு சிறுவன், அவனுடன் அழுக்காக ஒரு நாய்
என்று அழுக்காக காட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவின் பார்வையில் இந்தியா ஒரு
அழுக்கான நாடு என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே பிரேசிலை காட்டும்போது
கடற்கரையில் மக்கள் திரளாக அமர்ந்து ஓய்வெடுப்பது போலவும், அரபு நாட்டைக் காட்டும்போது
உயர, உயரமான கட்டிடங்களையும் காட்டுகிறார்கள்.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஜியோஸ்டார்ம் தோல்விப்படம்
என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் படத்தின் விஷுவல்கள் எப்போதும் போல என்னை மலைப்படையவே
செய்தன.
அவள் ! துவக்கத்தில் ஏதோ டப்பிங் படம் என்று
நினைத்துக்கொண்டிருந்தேன். முழுக்க இல்லை போலிருக்கிறது. முதலில் கோவை சரளா,
மொட்டை ராஜேந்திரன், தேவதர்ஷினி. ஸ்ரீமன் போன்ற கும்பல் இல்லாமல் நீட்டாக படம்
எடுத்ததற்கே இயக்குநரின் கால்களைத் தொட்டு வணங்க வேண்டும்.
நான் படம் பார்க்கப் போன சமயத்தில் எஸ்கேப்பில் நான்கைந்து
அய்யம்மாக்கள் படம் பார்க்க வந்திருந்தார்கள். படம் முழுக்க, நய்ய நய்ய என்று
பேசிக்கொண்டே இருந்தார்கள். குறிப்பாக சித்தார்த் – ஆண்ட்ரியா ரொமான்ஸ் செய்யும்
போதெல்லாம் அய்ய, இன்னாடி இவன் ஒட்டிக்கினே இருக்கான், ம்க்கும் என்று
சலம்பியபடி இருந்தார்கள். யாரோ ஒரு புண்ணியவான் நிர்வாகத்திடம் முறையிட்டு அவர்கள்
வந்து அய்யம்மாக்களிடம் சொல்லிவிட்டு போனார்கள். அப்போதும் முக்கல்களும்,
முனகல்களும் குறைவதாக இல்லை. ஒருமுறை DND ஷோ முயன்று பார்க்க வேண்டும்.
அவள் - அச்சு பிச்சு காமெடி எல்லாம் இல்லாத கலப்படமில்லாத ஹாரர் படம்.
இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டில் சித்தார்த் – ஆண்ட்ரியா தம்பதியர் வசிக்கிறார்கள்.
அவர்களுடைய பக்கத்து வீட்டுக்கு ஒரு குடும்பம் வருகிறது. அந்த பக்கத்து வீடுதான்
டார்கெட். இதுவரை நாம் பார்த்த அத்தனை ஆங்கில, கொரிய, (தரமான) தமிழ் பேய்ப் படங்களின்
சாயலும் அவளிடம் தெரிகிறது. ஏன் ஒரு கட்டத்தில் சந்திரமுகி கூட தெரிகிறது. அப்படி
இருந்தும் படம் நம்மை பயப்பட வைக்கிறது என்பதுதான் அடிக்கோடிட்டு காட்ட வேண்டிய
விஷயம். மற்றபடி, சிலாகிக்கும் அளவிற்கெல்லாம் கிடையாது.
ஒரு கட்டத்தில் படம் அறிவியலிலிருந்து முழுக்க அமானுஷ்யத்திற்கு
தாவும் போதே பாதி சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அத்துடன் எப்படா போடுவீங்க என்று
நம்மை நன்றாக காக்க வைத்துவிட்டு காட்டும் ஃப்ளாஷ்பேக் அப்படியொன்றும் அழுத்தமாக
இல்லை. சொல்லப்போனால் அந்த ஃப்ளாஷ்பேக் காட்சி ஒரு மோசமான சித்தரிப்பு. அதிர்ச்சி
மதிப்பீடு காட்டுகிறேன் பேர்வழி என்று இத்தனை குரூரமாக காட்டியிருக்கக் கூடாது.
படம் முடிந்தபிறகு ரோஸினா பள்ளத்தாக்கு என்கிற ஒன்று நிஜமாகவே
இருக்கிறதா என்று கூகிள் செய்து பார்த்தேன். ப்ச் இல்லை. குறிப்பாக பிரம்மாண்ட மலை
பின்னணியில் கொண்ட வீடு அபாரம். அது கிராபிக்ஸாகக் கூட இருக்கலாம்.
எப்படியும் எடுத்து வைத்திருக்கும் வன்முறையின் அளவிற்கும், ஹாரர்
தன்மைக்கும் ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்கப் போகிறது. அதை முழுக்க பயன்படுத்திக்
கொள்ளலாமே என்று சித்தார்த் – ஆண்ட்ரியாவை செமத்தியாக ஜல்ஸா பண்ண
விட்டிருக்கிறார்கள். (அதற்காக படம் பார்க்கலாம் யாரேனும் நினைத்திருந்தால் யூடியூபில்
காரிகை கண்ணே காணொளிப் பாடல் இருக்கிறது. பார்த்துவிட்டு உட்காரவும்).
அனிஷா விக்டர் |
தமிழ் சினிமாவின் முக லட்சணமான நடிகைகள்
என்றொரு பட்டியலிட்டால் அதில் ஆண்ட்ரியாவுக்கு நிச்சயமாக இடமிருக்காது. ஆனால் அவர்
முகத்தில் காட்டும் சின்னச் சின்ன பாவனைகள். வெட்கம், குறும்பு, காதல், காமம்
எல்லாம் சான்ஸே இல்லை. அனிஷா விக்டர் சிறப்பான அறிமுகம்.
இப்படத்திற்கு இது ஏதோ பெண் குழந்தைகளுக்கு
ஆதரவான படம் என்கிற நினைப்பில் அவள் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்று
நினைக்கிறேன். படம் முடிந்தபிறகு காட்டப்படும் ஸ்லைடு அந்த சந்தேகத்தை மேலும்
அதிகமாக்குகிறது. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் இயக்குநருக்கு என் ஆழ்ந்த
அனுதாபங்கள். ஒரு பெண் குழந்தையின் தந்தையாக இப்படத்தின் சில பகுதிகள் எனக்கு
மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
2 comments:
ரெண்டும் இன்னும் பாக்கலை...
பாக்கணும்.
>>ஆங்கில துணைப் பாடத்தில் அணையில் விழுந்த துளையை கட்டைவிரல் கொண்டு >>அடைக்கும் சிறுவனின் கதை நினைவிருக்கிறதா ?
அது துணைப் பாடம் இல்ல பாடத்துல தான் ன்னு என்னுடைய நினைவு..பீட்டர் இஸ் அ சமல் பாய் . ஹி லிவ்டு இன் ஹோலந்த்.....
பதிவுகள் மற்றும் தகவல்கள் அருமை.... வாழ்த்துகள்...
Post a Comment