அன்புள்ள வலைப்பூவிற்கு,
அமேஸான் ப்ரைமில் இணைந்து நான்கு மாதங்கள்
ஆகியும் அதில் ஒரு சினிமா கூட பார்க்கவில்லை. அதன் நிரலியை திறந்தால் ஒன்று
ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்
என்று பார்க்கவே கூடாது என்று நினைக்கும் படங்கள் அல்லது தீரன், துப்பறிவாளன், மாயவன் போன்ற பார்த்த படங்கள் வருகின்றன.
பின்னர் ஸ்க்ரோல் செய்து, செய்து அதில் பழைய தமிழ் படங்கள்
நிறைய இருப்பதை கவனித்தேன். குறிப்பாக, ஏ.வி.எம்., மெட்ராஸ் டாக்கீஸ், நிக் ஆர்ட்ஸ், கே.டி.குஞ்சுமோன் படங்கள். இவற்றைக் கண்டதும் மனது உற்சாகமடைந்தது.
பட்டியலில் இருந்த சில படங்கள் நான் பார்க்க வேண்டுமென நினைத்து, முடியாமல் போனவை.
எனது ஐந்து வயதில் திருடா திருடா பார்க்க
விரும்பினேன். ஏனென்றெல்லாம் தெரியவில்லை, விரும்பினேன் அவ்வளவுதான். அப்போது அமைதிப்படையும் வெளியாகியிருந்தது.
அப்பா என்னை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதாக சொன்னபோது திருடா திருடா போகலாம்
என்றேன். அதற்கு டிக்கட் கிடைக்கவில்லை என்று என்னை ஏமாற்றிவிட்டு அமைதிப்படைக்கு
அழைத்துச் சென்றார். அந்த ஏக்கம் மனதின் அடியாழத்தில் எங்கேயோ இருந்திருக்குமென
நினைக்கிறேன். தீனாவில் தன் வளரிளம் பருவ தங்கைக்கு அவள் சிறுவயதில் ஆசைப்பட்டு
கிடைக்காத பொருட்களை அஜித் வாங்கித்தருவார். அதுபோல அப்போது ஆசைப்பட்டு கிடைக்காத
திருடா2 இப்போது அமேஸான் ப்ரைமில் கிடைத்து ஏக்கத்தை தீர்த்துவிட்டது.
ஒருவேளை திருடா திருடாவை அப்போது
பார்த்திருந்தால் கூட இத்தனை உளப்பூர்வமாக பார்த்திருக்க மாட்டேன். அப்போது எனக்கு
மணிரத்னம் தெரியாது, சுஜாதா தெரியாது, ஏ.ஆர்.ரஹ்மான் தெரியாது. ஹீரா தெரியாது. படத்தில் வரும் கரன்ஸி
சம்பந்தப்பட்ட விஷயங்கள் புரிந்திருக்காது.
கதை என்ன, படம் எப்படி என்று சொல்ல
வேண்டியிருக்காது. (அதனால் கடைசியா என்ன சொல்ல வர்றீங்க பாஸ். படம் பார்க்கலாமா
வேண்டாமா ? என்கிற கேள்விக்கு இடமில்லை). படம் வெளியாகி கிட்டத்தட்ட இருபத்தைந்து
வருடங்களாகிவிட்டன. இருந்தும் எனக்கு சில ஆச்சர்யங்களை கொடுத்தன.
முதல் ஆச்சர்யம்: சந்திரலேகா (அனு
அகர்வால்)
முதலில் யாரோ ஒரு பெண் என்று துவங்கி, போகப்
போக அழகாகத்தானே இருக்கிறார் என்று தோன்ற ஆரம்பித்து, கடைசியில் யாரு இவர் இவ்வளவு
க்யூட்டாக (அதற்கு ரோகிணியின் குரலும் ஒரு காரணம்) என்று கூகுள் செய்ய
வைத்துவிட்டார். விபத்தொன்றின் காரணமாக இவரது சினிமா வாழ்க்கை சீக்கிரமாக
முடிந்திருக்கிறது. ப்ச் !
இரண்டாவது ஆச்சர்யம்: சி.பி.ஐ. அதிகாரி
லஷ்மி நாராயணன் (எஸ்.பி.பி.)
எஸ்.பி.பி.யின் அறிமுகக்காட்சியிலேயே
சுஜாதாவின் டச்சை எளிதில் உணரலாம். கிட்டத்தட்ட தன்னையே கதாபாத்திரமாக
எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். மனைவியின் அன்பில் சரணடைந்த ஒரு கணவன், அதே
சமயம் பணி என்று வந்துவிட்டால் கண்டிப்பான நபர். வொர்க், லைஃப் பேலன்ஸை எளிதாக
கற்றுக்கொடுக்கும் ஒரு வேடம்.
மூன்றாவது ஆச்சர்யம்: முக்கோணக் காதல்
ஹீராவுக்கு இரண்டு ஹீரோக்களையும்
பிடித்திருக்கிறது. இருவருடனும் நெருக்கமாக பழகுகிறார். அஃப்கோர்ஸ், ஆனந்தை
மட்டும்தான் துணை என்கிற வகையில் காதலிக்கிறார். இருப்பினும் வழக்கமான தமிழ்
சினிமா அறங்களை மீறி ஒரு பெண் ஒரே சமயத்தில் இருவருடன் பழகுவது புதுமை. ஒரு
காட்சியில் ஆனந்த் – ஹீரா இருவரும் பரஸ்பரம் காதலை சொல்லிக்கொள்கிறார்கள். அதே
சமயம் இன்னொரு இணைக் காட்சியில் அனு பிரஷாந்திடம் தன்னை திருமணம்
செய்துகொள்ளும்படி (விளையாட்டாகத்தான்) கேட்கிறார். கோலியுட் விதிகளின்படி
இச்சூழ்நிலைக்கு ஆனந்த் – ஹீரா, பிரஷாந்த் – அனு ஆடிப்பாடும் பாடல் தானே இடம்பெற
வேண்டும். ஆனால் இங்கே பிரஷாந்துக்கும் ஹீராவுக்கும் டூயட் வருகிறது.
நான்காவது ஆச்சர்யம்: தீ தீ தித்திக்கும்
தீ...
பாடல்கள் அனைத்தும் ரஹ்மானின் வெறித்தனமான
ஹிட்ஸ் என்றாலும் இந்த ஒரு பாடலை மட்டும் கேட்டதே இல்லை. கொஞ்சம் எராட்டிக்
தொனியில் இருப்பதால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாமல் இருக்கக்கூடும். நல்ல
ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள். ஹீராவின் உச்சபட்ச அழகு இதுவாகத்தான் இருக்க
வேண்டும். என்ன ஒரு நேர்த்தியான கழுத்து ஹீராவுக்கு !
ட்ரீம்ஸ், கண்களால் கைது செய், கண்ணாடி பூக்கள்,
லவ் பேர்ட்ஸ் போன்றவை என் வாட்ச்லிஸ்டில் இருக்கின்றன.
**********
மதனின் கி.மு. கி.பி.
படித்துக்கொண்டிருக்கிறேன். ப்ரீஃப் ஹிஸ்டரி பாணி புத்தகம். ஒரு பதினைந்து
வருடங்களுக்கு முன்பு கி.மு. கி.பி. படித்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பேன்.
விகடனாரின் வாசகர்களுக்காக எழுதப்பட்ட
புத்தகம் என்பதால் எளிமையாக புரியும்படி எழுதுகிறேன் என்று மட்டையடி அடித்திருக்கிறார்
மதன். ஒரே சப்பாத்தியை ஏதோ நாலைந்து குரங்குகள் பிடுங்கிய மாதிரி கோண்ட்வானா
கண்டம் பீஸ்பீஸாகப் பிய்ந்தது என்று எழுதுகிறார். எவ்வளவு பெரிய விஷயத்தை குரங்கு –
சப்பாத்தி என்று ஜஸ்ட் லைக் தட் கடக்கிறார் பாருங்கள். கூடவே டைனோசர் எழுந்து
நின்றால் எல்.ஐ.சி. பில்டிங் உயரம் இருக்கும், உலகின் ஆதி மனிதன் இப்போது வந்தால்
அவரிடம் மைலாப்பூர் விலாசம் கேட்கலாம் என்று நிறைய சிக் ஜோக்ஸ்.
கடைசியாக தமிழ்மகனின் வேங்கை நங்கூரம்
படித்தேன். அதற்கடுத்து இதுதான். இரண்டிலும் மனிதர்களிடம் நாகரிகம் தோன்றியது
பற்றி வருகிறது. ஹரப்பா, மோஹன்ஜதாரோ வருகிறது. தமிழ்மகன் அங்கே
கண்டுபிடிக்கப்பட்டது தமிழ் நாகரிகம்தான் என்று சில சான்றுகளை சொல்லி நிறுவ
முயல்கிறார். மதன் இதுகுறித்து குறிப்பிடும்போது சர்வதேச தொல்பொருள்
ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் உலகின் முதல் நகரம் இந்தியாவில் தோன்றிய
பெருமை நமக்குக் கிடைக்கும் என்று மட்டும் சொல்கிறார். இரண்டு
புத்தகங்களுக்கும் இடையே ஒரு நூலளவு வித்தியாசத்தை என்னால் கவனிக்க முடிகிறது.
மற்றபடி தகவல்களைப் பொறுத்தவரையில் குறை
சொல்வதற்கில்லை. சில தகவல்களை புத்தகத்தில் படித்ததுடன் நிறுத்திவிடாமல்
மேற்கொண்டு கூகுள் செய்தால் நன்மை பயக்கும். உலகின் முதல் மனிதர் –
ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரு பெண் என்கிறார். க்ரோ-மேக்னன் என்கிறார்.
(இதுகுறித்து மேலும் அறிந்து கொள்வதற்காக mitochondrial eve மற்றும் cro-magnon என்று கூகுள் செய்தால் இன்னும் சுவாரஸ்யமாக
இருக்கிறது).
**********
சில வாரங்களுக்கு முன் செக்ஸில் ஆண்கள்
பொதுவாக செய்யும் தவறுகள் சிலவற்றை பட்டியலிட்டிருந்தேன். இம்முறை பெண்கள்.
- தேவைப்படும் சமயம் தேவை என்று நேரடியாக
சொல்லாமல் குறிப்புகளால் உணர்த்த முயல்வது. (பொதுவாக ஆண்கள் மக்குகள். அவர்களது
மூளை அவ்வாறு வேலை செய்வது கிடையாது).
- பிணம் போல படுத்துக் கொள்வது. (இணைக்கு
நெக்ரோஃபிலியா இருந்தாலொழிய இப்படி செய்வது தவறு).
- ஓரல் செக்ஸ் என்பதை ஏதோ பாவச்செயல் /
அருவருக்கத்தக்க செயல் என்று கருதுவது.
- உற்சாகமாக உடலில் விளையாடிக்
கொண்டிருக்கையில் என்னங்க, இன்னைக்கு உங்க அம்மா என்னை என்ன சொன்னாங்க தெரியுமா
என்று ஆரம்பிப்பது.
- பெரும்பாலான பெண்கள் தங்கள் இணை
சுத்தமாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் தங்களை அவ்வாறு
வைத்துக்கொள்வதில்லை.
- கவனம் வேலையில் இருக்கும் சமயம் வந்து, நான்
குண்டாயிட்டேனா என்றோ இப்ப முன்னாடி மாதிரி இல்லல்ல (மார்பகங்களை
காட்டி) என்றோ கேட்பது.
- பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு லிபிடோ
(கூகுள் செய்யுங்கள்) அதிகம். அதற்காக சுவிட்ச் போட்டதும் தமையன் எழுந்துகொள்வான்
என்று நினைத்தல் தவறு.
- முதல் கூடலுக்குப்பின் ஆண் மீண்டெழ கால
அவகாசம் கொடாமல் அவனைப் போட்டு நிமிண்டுவது.
- தோழியின் செக்ஸ் வாழ்க்கையுடன்
ஒப்பிட்டு பேசுவது, அதை விட உங்கள் செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருந்தாலொழிய தவறு.
குறிப்பாக தோழி கணவனின் செயல்களை பட்டியலிடுவது மாபெரும் தவறு.
- செக்ஸின் முக்கியமான கட்டத்தில் அவசரமாக
சிறுநீர் வருகிறது என்று கழிவறைக்கு ஓடுவது !
பொறுப்பு துறப்பு: இப்பட்டியல்
எல்லோருக்கும் பொருந்தாது. இது பொதுவான பட்டியல். உதாரணத்திற்கு முதல் பாயிண்டை
எடுத்துக்கொள்ளுங்கள். தேவை என்பதை தேவை என்று சொல்வது. பெரும்பாலான இந்திய
கணவர்களைப் பொறுத்தவரையில் பெண்கள் செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே தவறு. எனவே இப்பட்டியலை உங்கள்
இணையின் மனநிலைக்கு தகுந்தவாறு பட்டி டிங்கரிங் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள்
பொறுப்பு !
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|