அன்புள்ள வலைப்பூவிற்கு,
தேனாம்பேட்டையில் உயிர்மையின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதை
முன்னிட்டு நண்பருடன் சென்றிருந்தேன். டிஸ்கவரியைப் போலோ, கவிக்கோ மன்றத்தைப் போலோ
விசாலமாக இருக்கும் என்றெண்ணிப் போனால் புத்தகங்களுக்கென மிகச்சிறிய பகுதியே
ஒதுக்கப்பட்டிருந்தது. அதிலும் இரண்டு ஊழியர்கள் கீழே அமர்ந்து புத்தகங்களை
அடுக்கிக்கொண்டிருந்தார்கள். தாண்டுகால் போட்டுத்தான் உள்ளே நுழைய
வேண்டியிருந்தது. கடமைக்கு இரண்டு நிமிடங்கள் சுற்றிப் பார்த்துவிட்டு ஏற்கனவே
திட்டமிட்டிருந்தபடி தமிழ்மகனின் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
வாங்கிவிட்டு வெளியேறினோம்.
படங்கள் பார்த்தும், புத்தகங்கள் படித்தும் ஏறத்தாழ ஒரு
மாதமாகிவிட்டது. திரையுலகினரின் ஸ்ட்ரைக் காரணமாக சினிமா தியேட்டர் எப்படி இருக்கும்
என்பதையே மறந்துக்கொண்டிருக்கிறேன். (இவர்கள் உஷாராக வசூல் இல்லாத சமயமாக பார்த்து
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சம் மே மாத துவக்கம் வரை விளையாடிப்
பார்ப்பார்கள்). புத்தகத்தின் பக்கமும் மனது திரும்பவில்லை. சரியாக ஒரு
மாதத்திற்கு பிறகு படித்த புத்தகம் – வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்.
ஒரு வாசகனாகவும், எழுதுவதில் ஆர்வம் உள்ளவனாகவும் எனக்கு பல கதவுகளை
திறந்து விட்டிருக்கிறது வே.ந.ஜீ.கு !
குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்துகள் பொறித்த ஒரு நங்கூரம்
கிடைத்திருக்கிறது. அதனை மையமாக வைத்து பல தளங்களில் புகுந்து
விளையாடியிருக்கிறார் தமிழ்மகன். நான் படிக்கும் இவருடைய மூன்றாவது நாவல் இது. ஆண்பால்
பெண்பால் கொஞ்சம் ஒப்பீட்டளவில் சீரியஸானது. அதில் எம்.ஜி.ஆர். ஒரு கதாபாத்திரமாக
வருவார். ஆபரேஷன் நோவா மற்றும் இந்நாவல் இரண்டும் கொஞ்சம் விளையாட்டுத்தனங்கள்
கலந்த நாவல்கள். ஆபரேஷன் நோவாவில் இரண்டாம் உலகத்தின் சாயல்களை பார்க்கலாம். வே.ந.ஜீ.கு.வில்
ஆயிரத்தில் ஒருவன் ! (கொஞ்சம் அநேகனும்).
2037ல் மார்ஸ் மிஷனுக்காக பணிபுரிந்துக்கொண்டிருக்கும் தேவ் என்கிற இளைஞனிடமிருந்து
கதை துவங்குகிறது. அவனது நினைவுகள் மூலம் 2017, 1924, சோழர்கள் காலம், திருக்குறள்
எழுதப்பட்ட காலம், நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலம், மொழி தோன்றிய காலம் என
பல்வேறு காலகட்டத்திற்கு கதை பயணிக்கிறது.
எதிர்காலத்தில் நடைபெறும் கதை என்பதால் டெக்னாலஜி முன்னேற்றங்கள்
சிலவற்றை கணித்திருக்கிறார். ஆல்டேப் என்றொரு சாதனம் வருகிறது. இது தற்போது நாம்
பயன்படுத்திக்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர், செல்போன், வாட்ஸப், ஃபேஸ்புக், ஆதார்
அட்டை போன்ற எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துவிடுகிறது. ஆல்டேப்பின்
மூலம் திருமணத்திற்கு பெண் தேடலாம், தாகத்தை தீர்த்துக்கொள்ளவும் பெண் தேடலாம்.
இன்னொன்று, மேட்ச் ஃபிலிம் என்கிற மென்பொருள். தொலைக்காட்சியில் பயன்படும்
இம்மென்பொருளைக் கொண்டு பழைய சிவாஜி கணேசன் பாடலில் அவருடன் நயன்தாராவையோ அல்லது
புதிய பாடலில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக டி.ஆர்.ராஜகுமாரியையோ ஆட வைக்கலாம். இவை
தவிர்த்து, டச் ஷீட், வானூர் டாக்ஸி என்று நிறைய வருகிறது. முக்கியமாக இவை நாவலில்
கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. கதை 2037ல் இருக்கும்போது ஆல்டேப் வருகிறது.
2017க்கு மாறும்போது வாட்ஸப்பாகி விடுகிறது.
பிரம்மதேசத்தில் அமைந்துள்ள ராஜேந்திர சோழர் நினைவிடம் |
ராஜேந்திர சோழர் இக்கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். பிரம்மதேசம்
என்கிற இடத்தைப் பற்றி தெரிந்துகொண்டேன். சென்னையில் இருந்து 120 கி.மீ. தொலைவில்
செய்யாறு அருகே அமைந்திருக்கும் பிரம்மதேசத்தில் முதலாம் ராஜேந்திர சோழரின் கல்லறை
இருக்கிறது. இதைப் படித்ததும் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று பார்க்க வேண்டுமென்ற
ஆர்வம் துளிர்க்க ஆரம்பித்துவிட்டது. மேலும் சோழர்களின் வரலாற்றை
தெரிந்துகொள்வதற்காக இதுவரை தொட்டே பார்த்திராத பொன்னியின் செல்வன், கடல் புறா,
யவன ராணி போன்ற நூல்களை படித்துப்பார்க்கும் ஆர்வம் தோன்றுகிறது.
பல்வேறு கிளை அம்சங்களைக் கொண்ட இந்நூலின் பிரதான கருத்து உலகின்
முதல் மொழி தமிழ் என்பதுதான் ! இதற்காக பல தரவுகளை கொடுக்கிறார் ஆசிரியர்.
ஹரப்பாவிலும், மொஹஞ்சதாரோவிலும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்கிறார்.
ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் ஹரப்பாவில்
கண்டுபிடிக்கப்பட்டவையுடன் ஒத்துப்போகின்றன என்கிறார். பாகிஸ்தானிலும்,
ஆப்கானிஸ்தானிலும் தமிழ் பெயரில் கிராமங்கள் இருக்கின்றன என்கிறார். இரும்பொறை
சோழரிடம் கிரேக்கர்கள் பணியாற்றியதாக சொல்கிறார். ஈஸ்டர் தீவுகளில் ஆண்டுதோறும்
தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு பலகையை வைத்து வழிபடுகிறார்கள் என்கிறார்.
கொரிய மொழியில் கிட்டத்தட்ட நாற்பது தமிழ் வார்த்தைகள் இருப்பதாக சொல்கிறார்.
உதாரணமாக, தீ – தீ, வான் – ஆன், பாம்பு – பாம். ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னால் மொழிகளும் எண்களும் எப்படி உருவானது என்று சொல்கிறார். முதல், இடை, கடை
சங்கங்களைப் பற்றி படிக்கும்போது பள்ளிக்கூட காலங்களில் தமிழையும் வரலாற்றையும்
இன்னும் கவனம் செலுத்தி படித்திருக்கலாம் என்கிற ஏக்கம் தோன்றுகிறது.
இன்னொரு பிரதான அம்சம், முருகன் – இந்திரன் வேறுபாடு. முருகனின் வழி
வந்தவர்கள் திராவிடர்கள் என்றும், இந்திரனின் வழி வந்தவர்கள் ஆரியர்கள் என்றும்
சொல்கிறார். மேலும் முருகனும், இந்திரனும் தனி நபர்கள் அல்ல. வெவ்வேறு
காலகட்டத்தில் வாழ்ந்த இனக்குழுவின் தலைவர்கள் என்கிறார். வேலன், கந்தன், கடம்பன்,
சுப்ரமணியன், கார்த்திகேயன் என பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த தலைவர்களையே முருகன்
என்கிற பொதுப்பெயரில் அழைக்கிறோம் என்கிறார். ஆரியர்கள் நாகரிகத்தை எதிர்த்தவர்கள்
என்பதால் தொடர்ந்து தமிழர்களை எதிர்த்தார்கள் என்கிறார். இந்நூலில் வரும் ஆரிய –
திராவிட வேறுபாடுகளை இன்னும் யாரும் கவனித்து பிரச்சனை செய்யாததே ஆச்சர்யமாக
இருக்கிறது.
இவை தவிர்த்து, கிளைகளாக, இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி
சொல்கிறார். ராஜீவ் காந்தி படுகொலையின் ரகசியங்கள் பற்றி ஒரு அத்தியாயம் வருகிறது.
இந்தி எதிர்ப்பு, எமர்ஜென்ஸி போன்ற காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் எதுவும் செய்யாமல்
அமைதியாக இருந்தார் என்கிறார். முதன்முதலில் நெருப்பு எவ்வாறு
கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வள்ளுவர் எந்த
நோக்கத்தில் குறள் எழுதினார், அவை அப்போது எவ்வாறெல்லாம் விமர்சிக்கப்பட்டது
என்பது பற்றி சுவாரஸ்யமான ஒரு தனி அத்தியாயமே வருகிறது.
ஒரு வகையில் இந்நூலின் குறைபாடே இந்த ஓவர் டீட்டெயிலிங் தான். ஒரு கட்டத்தில்,
ஏங்க இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு என்று கேட்கத் தோன்றுவதை
தவிர்க்க முடியவில்லை. ராஜீவ்காந்தியின் படுகொலை ஒரு சர்வதேச சதி. தமிழர்களை
ஒடுக்குவதற்காகவே அதில் புலிகள் சிக்க வைக்கப்பட்டனர் என்கிறார்.
சுஜாதாவைப் போலவே எழுதுவது நல்ல விஷயம்தான். இருப்பினும் காபி
மேக்கர் பீப் பீப் என பீப்பிக்கொண்டிருந்தது என்றெல்லாம் படிக்கும்போது கோபம்
வருகிறது. ஏன் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு எழுதுகிறார்கள் ?
**********
கிண்டில் டிவைஸை மிகவும் கவனமாக கையாண்டு வருகிறேன். இலவசமாக
கிடைக்கிறது என்பதற்காக அவுட் ஆஃப் சிலபஸ் புத்தகங்களை உள்ளே சேர்ப்பது கிடையாது.
சில புத்தகங்களை லே அவுட் பார்த்தாலே வாங்க வேண்டும் என்கிற நினைப்பு
போய்விடுகிறது. அமேஸானில் கொஞ்சம் காபி நிறைய காதல் என்கிற கவிதை நூலின் லே
அவுட் ஈர்க்கும் விதத்தில் இருந்ததாலும், எழுதியவரின் பெயர் என்னுடைய பெயர்
என்பதாலும் தரவிறக்கினேன்.
பேருந்தின் ஜன்னலோர இருக்கை, மழைக்கால மாலைப்பொழுது, இளையராஜா என்று
பொதுவான கவிதைகள் நிறைய. ஆச்சர்யமாக காதல் எனப்படுவது யாதெனில் ? என்கிற தலைப்பில்
எழுதியிருக்கும் கவிதை –
Cafe Coffee Day-யில்
கைகளில் வைத்திருக்கும்
காப்பி கோப்பையில்
ஸ்டிர்ரரில்
இதழ்வழி
காற்று செலுத்தி
அதில் மேலெழும்
சிறு சிறு குமிழ்களில்
தன் முகம்
தெரிகிறதென
என்னிடம் சொல்வது !
என்னுடைய கணிப்பு சரியென்றால் பிரபாகரன்.ஈ ஏதோ மென்பொருள் நிறுவத்தில்
பணிபுரிகிறார். தன்னுடன் பணிபுரியும் பெண் ஊழியரை மடக்குவதற்காக கவிதைகள்
சமைத்திருக்கிறார். அவரது எண்ணம் ஈடேறியிருக்கும் என்று யூகிக்கிறேன் !
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
4 comments:
பொதுவாக காதலிக்கும் காலங்களில் கவிதை அருவி மாதிரி கொட்டியதுண்டு . இப்போது சம்சாரி ஆகிய பின்னர் ஒன்றையும் காணவில்லை நண்பரே .
உங்கள் வாசிப்புக்கு வாழ்த்துக்கள் .
பொதுவாக காதலிக்கும் காலங்களில் கவிதை அருவி மாதிரி கொட்டியதுண்டு . இப்போது சம்சாரி ஆகிய பின்னர் ஒன்றையும் காணவில்லை நண்பரே .
உங்கள் வாசிப்புக்கு வாழ்த்துக்கள் .
சமையல் நன்று...
உலக எழுத்தாளர்களின் சிகரம் சாரு நிவேதிதா MARGINAL MAN என்னும் நூல் வெளியிட்டுள்ளார் . படித்துள்ளீர்களா ?
நிச்சயம் படித்திருக்க மாட்டீர்கள்
ஆனால் யாரோ மொக்கை எழுத்தாளரின் நூலை எல்லாம் தேடி தேடி வாங்குவீர்கள்.
தமிழ் சூழலின் இழி நிலை
Post a Comment