அன்புள்ள வலைப்பூவிற்கு,
முந்தைய பகுதி: கோவா – கர்லீஸ்
கோவாவில் இரண்டு பிரதான நதிகள்
ஓடுகின்றன – மண்டோவி மற்றும் ஸுவாரி. இவையிரண்டும் சேர்ந்து கோவாவின் கடலோரப்
பகுதிகளை மூன்றாகப் பிரிக்கின்றன. ஸுவாரி நதிக்கு கீழே கோவா விமான நிலையம் துவங்கி
கல்கிபாகா கடற்கரை வரை இருப்பது தெற்கு கோவா. மண்டோவி நதிக்கு மேலே அகுவாடா கோட்டை
துவங்கி க்வேரிம் கடற்கரை வரை வடக்கு கோவா. இவ்விரு நதிகளுக்கும் இடையே உள்ள
நிலபரப்பு – மத்திய கோவா (பஞ்ஜிம், இதனை பழைய கோவா என்று குறிக்கிறார்கள்).
சுமார் முப்பத்தைந்து கி.மீ. நீளமுள்ள
வடக்கு கோவா கடலோரத்தில் ஏறக்குறைய இருபது கடற்கரைகள் உள்ளன. இங்குள்ள கடற்கரைகள் நமது மெரீனா போல ஒரே
ஸ்ட்ரெச்சில் இல்லாமல் நதிகளாலும், சிறிய கால்வாய்களாலும், குன்றுகளாலும்
பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை அவை அவ்வாறு பிரிக்கப்படாமல் இருந்திருந்தால் மெரீனா
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாக இருந்திருக்காது. பொதுவாக கோவாவின் கடற்கரைகளை
மேப்பில் பார்த்தால் அடுத்தடுத்து வரிசையாக இருப்பது போல தோற்றமளிக்கும். ஆனால்
ஓர் கடற்கரையிலிருந்து அடுத்த கடற்கரைக்கு வர வேண்டுமென்றால் குறுக்கு சந்துகள்
வழியாக பிரதான சாலையை அடைய வேண்டும், மீண்டும் அடுத்த கடற்கரைக்கு அருகிலுள்ள
குறுக்கு சந்துகள் வழியாக கடற்கரையை அடைய வேண்டும். இதனால் எல்லா கடற்கரைகளையும்
காண வேண்டுமென நினைத்தால் ஏமாறுவீர்கள்.
வடக்கு கோவாவில் உள்ள கடற்கரைகளையும்
அவற்றின் சிறப்பம்சங்களையும் சுருக்கமாக பார்க்கலாம். வழக்கத்தை மீறி இப்பதிவில் டெக்ஸ்டை விட கூடுதலாக படங்கள் பதிகிறேன். பொறுத்தருள்க !
க்வெரிம் பீச் (அல்லது கெரி பீச்) –
கோவாவின் வடக்கு மூலையில் உள்ள கடற்கரை. இக்கடற்கரைக்கு அப்பால் ஒரு நதி ஓடுகிறது.
நதியைக் கடந்தால் மகாராஷ்டிரா. ஒப்பீட்டளவில் அதிக தூரம் பயணிக்க
வேண்டியிருப்பதால் கூட்டம் குறைவு. இங்கிருந்து மகாராஷ்திர எல்லையில் அமைந்துள்ள
திறக்கோல் கோட்டைக்கு படகு சவாரி செய்யலாம்.
க்வெரிம் கடற்கரை செயற்கை பாறைகள் |
க்வெரிம் கடற்கரையிலிருந்து மகாராஷ்டிர எல்லை |
அடுத்து நாம் பார்க்கப் போகும் ஏழு
கடற்கரைகளிலும் ரஷ்யர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.
அரம்போல் பீச்: சமீபகாலமாக கூட்டம்
அதிகம் சேரும் கடற்கரை. வரிசையாக குடில் உணவகங்களும், அவற்றின் முன்பாக பிகினியில்
படுத்திருக்கும் ரஷ்ய பெண்கள். அரம்போல் கடற்கரைக்கு அருகில் ஒரு சிறிய மலை
அமைந்திருக்கிறது. ட்ரெக்கிங் பிரியர்கள் கவனத்திற்கு. இம்மலையில் இருந்து பாரா
கிளைடிங் செய்யலாம். கோவாவில் பாரா கிளைடிங் அமைந்துள்ள ஒரே இடம் இதுதான் !
அரம்போல் கடற்கரை - ஏரியல் வியூ |
மண்ட்ரெம் பீச்: கூட்டம் குறைவான,
அமைதியான கடற்கரை. கரையில் இடையிடையே கடல்நீர் குட்டை போல தேங்கியிருப்பதால்
அவற்றை உங்களுக்கான பிரத்யேக நீச்சல் குளமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மரத்தால்
அமைக்கப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள்ளது.
மண்ட்ரெம் கடற்கரையின் சிறு பாலம் |
அஷ்வெம் பீச்: அமைதியான சிறிய கடற்கரை.
செந்நிற பாறைகள் அமைந்திருக்கின்றன. உணவகங்கள் மிகக் குறைவு.
அஷ்வெம் கடற்கரையின் செந்நிற பாறைகள் |
மோர்ஜிம் பீச்: அவள் பட கிளைமாக்ஸில்
காட்டப்படும் பீச். வரிசையாக பல ரஷ்ய பிகினி தேவதைகளை ரசிக்கத்தரும் கடற்கரை. கடல்
ஆமைகளை பராமரிக்கும் நிலையம் இங்கு அமைந்துள்ளது.
மோர்ஜிம் கடற்கரையின் எழில்தோற்றம் |
வகேட்டர் பீச்: வாட்டர் ஸ்போர்ட்ஸ் கொண்டுள்ள
கடற்கரை. பாரா செய்லிங், பம்ப் ரைட், வாட்டர் ஸ்கூட்டர் போன்ற சாகச
விளையாட்டுகளில் ஈடுபடலாம். கடற்கரைக்கு அருகாமையில் சபோரா கோட்டை அமைந்துள்ளது.
கோட்டையின் மீதிருந்து கடற்கரையை பார்த்தால் கொள்ளை அழகு !
சபோரா கோட்டையிலிருந்து வகேட்டர் |
ஓஸ்ரான் பீச்: பாறைகள் கொண்ட சிறிய கடற்கரை.
கோவா கடற்கரைகளில் பிகினிகள் சகஜம். ஆனால் இங்கே அதையும் தாண்டி புனிதமான சில
விஷயங்களையும் பார்க்கலாம். பாறையொன்றில் சிவனின் முகம் தெரிவதாகக் கூறப்படுகிறது.
ஓஸ்ரான் கடற்கரை |
ஓஸ்ரானில் சிவன் முகம் |
அஞ்சுனா பீச்: அஞ்சுனா பகுதியில்
அமைந்துள்ள கர்லீஸ் பற்றி முந்தைய பகுதியிலேயே பார்த்திருந்தோம். அஃதில்லாத மற்றொரு
கடற்கரை. இங்கே ஜனத்திரள் கொண்ட பகுதியும் உண்டு, சற்று நடந்தால் தனிமையும்
கிடைக்கும். ஷாப்பிங் செய்ய ஏராளமான கடைகள் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம்.
வாட்டர் ஸ்போர்ட்ஸ் உள்ளது.
அஞ்சுனா ஷாப்பிங் பகுதி |
பாகா பீச்: கோவாவின் மோஸ்ட் வாண்டட்
கடற்கரை. கூட்டம் அதிகம் இருக்கும். இரவு வாழ்க்கைக்கு பெயர் போனது. பாகா பீச்சின்
பின்புறம் பார்ட்டிகள் நடக்கும் டிட்டோஸ் லேன் உள்ளது. (டிட்டோஸ் லேன் பற்றி
அடுத்த பகுதியில் தனியாக பார்க்கலாம்). வாட்டர் ஸ்போர்ட்ஸ் உள்ளது.
பாகாவின் நீளமான கரை |
இரவு நேர பாகா |
கேலங்குட்டே பீச்: பாகாவின் பிரதி;
மற்றொரு முனை. பாகாவில் கூட்டம் அதிகம் என நினைப்பவர்கள் இங்கே பாகாவிலிருந்து
நடந்தே வந்துவிடலாம்.
கேலங்குட்டே கடற்கரை |
கேண்டோலிம் பீச்: ஒப்பீட்டளவில்
கூட்டம் குறைவான வாட்டர் ஸ்போர்ட்ஸ் கொண்ட கடற்கரை. கூடுதலாக ஜெட் ஸ்கீயிங்,
கட்டுமரப் பயணம் போன்றவை கிடைப்பது சிறப்பம்சம்.
சிங்க்வெரிம் பீச்: பம்பாய் படத்தின்
உயிரே பாடலை படம்பிடித்த அகுவாடா கோட்டைக்கு அருகில் உள்ள கடற்கரை. வாட்டர் ஸ்போர்ட்ஸ்
உள்ளது. வடக்கு கோவாவின் கடைசி பீச்.
அகுவாடா கோட்டையிலிருந்து சிங்க்வெரிம் |
டோனா பாலா பீச்: வடக்கிற்கும்,
தெற்குக்கும் மத்தியில் பழைய கோவாவில் அமைந்துள்ள கடற்கரை. குறிப்பிடும்படியான
அம்சம் இங்குள்ள வியூ பாயிண்ட். ஷாப்பிங் செய்ய கடைகள் உண்டு.
டோனா பாலா |
இவை தவிர்த்து குட்டிக் குட்டியாக கோகோ
பீச், கெக்டோல் பீச், மிராமர் பீச், டெவில்’ஸ் ஃபிங்கர், ஓஷோ பீச் மற்றும் பெயரே
கேள்விப்படாத நிறைய கடற்கரைகள் உள்ளன. இக்கடற்கரைகளை சென்று பார்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. சில சமயங்களில் அக்கடற்கரைக்கு செல்ல போதுமான சாலை வசதி இராது. அப்படியே போய் பார்த்தாலும் அங்கே குறிப்பிடும்படியாக ஏதும் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் முழு கோவாவையும் சுற்றிப் பார்த்து முடித்துவிட்டு எக்ஸ்ப்ளோர் மோடில் இருக்கும்போது இக்கடற்கரைகளை போய் பார்க்கலாம்.
மற்றபடி மேலே சிறுகுறிப்பு கொடுக்கப்பட்ட கடற்கரைகளை இரண்டாகப் பிரித்து பட்டியலிடுகிறேன். தவறவிடக் கூடாதவை மற்றும் பார்க்க வேண்டியவை. பட்டியலில் இல்லாத கடற்கரைகளை தவிர்த்தால் பாதகம் ஒன்றுமில்லை என்று அறிக.
மற்றபடி மேலே சிறுகுறிப்பு கொடுக்கப்பட்ட கடற்கரைகளை இரண்டாகப் பிரித்து பட்டியலிடுகிறேன். தவறவிடக் கூடாதவை மற்றும் பார்க்க வேண்டியவை. பட்டியலில் இல்லாத கடற்கரைகளை தவிர்த்தால் பாதகம் ஒன்றுமில்லை என்று அறிக.
தவறவிடக்கூடாதவை:
வகேட்டர்
அஞ்சுனா
பாகா
சிங்க்வெரிம்
மோர்ஜிம்
பார்க்க வேண்டியவை
க்வெரிம்
அரம்போல்
ஓஸ்ரான்
டோனா பாலா
அடுத்த கட்டுரையில் கோவாவில் உள்ள சாகச விளையாட்டுகளைப் பற்றி பார்க்கலாம்.
அடுத்து வருவது: கோவா – அட்வெஞ்சர்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
3 comments:
நல்ல பதிவு.
அழகிய படங்ளும் சுவாரசியமாக தகவல்களும்.
very very usseful thalava
i am waiting for next part
Post a Comment