அன்புள்ள வலைப்பூவிற்கு,
அன்றைய தினம் ஒருபுறம் விக்டரும் லிசாவும் திருமணம் செய்துகொள்ள,
மறுபுறம் விக்டருக்கும் சத்யாவுக்குமான நட்பு இன்னொரு புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து
வைத்தது !
விக்டரின் திருமண விழாவிற்கு அவன் மீது ஒருதலையாய் மையல் கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வந்திருந்தார்கள். விக்டரையும் லிசாவையும் ஜோடியாகக்
கண்டதும் ஆற்றாமையால் புலம்பத் துவங்கினாள் ஒருத்தி. இன்னொருத்தியோ அவன் மீது
பொய்க்கோபம் கொண்டு அடிக்கப் போனாள். ஒருத்தி, இதோ மேடையேறி வந்து உன்னுடன் நின்று
கொள்கிறேன் என்று பாய, மற்றவள்கள் அவளை பிடித்து நிறுத்தினார்கள். இதற்குள் ஒருத்தி
ஏதோ நடந்தது நடந்துவிட்டது, விக்டர் தனக்கு பொருத்தமானவளைத் தானே தேர்வு செய்திருக்கிறான் என்றதும், மற்றவர்கள் அதனை
ஆமோதித்து விக்டரை வாழ்த்தத் தயாரானார்கள். இப்படித்தான் விக்டரின் மணவிழா
துவங்கியது.
ஒரு பக்கம் மணக்க, மணக்க பிரியாணி தயாராகிக் கொண்டிருந்தது. சத்யாதான்
எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தான். சத்யா என்பவன் விக்டரின் நெருங்கிய நண்பன். ‘நெருங்கிய’
என்றதும் சின்ன வயதில் இருந்து பழக்கம் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். வெறும்
ஆறே மாதங்கள். ஆனால் இந்த ஆறு மாதங்களில், ஆறு போல நிறைய திருப்பங்கள் நிகழ்ந்துவிட்டன. ஒரு வகையில்
பார்த்தால் சத்யா இல்லாவிட்டால் விக்டர் இப்போது உயிருடன் கூட இருந்திருக்க
மாட்டான்.
வேலூர் சிறை. அங்கேதான் முதல்முறையாக சத்யாவை சந்தித்தான் விக்டர்.
ஆசைத்தம்பியின் ஆட்கள் விக்டரை கொல்லத் திட்டமிட்டிருப்பதாக தகவல் சொன்னான் சத்யா.
முதலில் விக்டர் அதனை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவன் கொஞ்சம் அசந்திருந்த
சமயம் எட்டு கைதிகள் சேர்ந்து அவனை சுற்றி வளைத்தபோதுதான் அவனுக்கு உரைத்தது.
இருந்தாலும் அவன் அசரவில்லை. கையில் கிடைத்த பொருட்களையும், சமயத்தில் கைகளேயும்
ஆயுதமாக பயன்படுத்தி அவர்களை திக்குமுக்காடச் செய்தான். அதே சமயம் விக்டர்
இளைப்பாற நினைத்த இரண்டு நொடி இடைவேளையில் எட்டில் ஒருத்தன் அவனை கத்தியால் குத்த
வர, அங்கே பிரவேசித்தான் சத்யா. ஒருவேளை சத்யா வராவிட்டால் அப்போதே வெளியே
வந்திருக்கும் விக்டரின் குடல். நன்றி சொல்லிக் கொள்ளக்கூட விக்டருக்கு நேரமில்லை.
சத்யாவும் சேர்ந்துகொண்டான். எழுதிக்கொண்டிருக்கும் இந்த பத்தியை நிறைவு செய்யும்
முன் அவசர அவசரமாக அவர்கள் இருவரும் சேர்ந்து எட்டு பேரையும் துவம்சம் செய்து முடித்தார்கள்.
அன்றிலிருந்து சத்யாவுக்கும் விக்டருக்கும் இடையே நல்ல நட்பு
உருவானது. குறிப்பாக விக்டர் சத்யாவை மானசீகமாக நேசிக்க ஆரம்பித்தான். நாட்கள்
நகர்ந்தன. ஒருமுறை சத்யாவையும் விக்டரையும் வெவ்வேறு வழக்குகளுக்காக மாஜிஸ்திரேட்
முன்னிலையில் ஆஜர் படுத்த வேண்டியிருந்தது. அதற்காக அவர்களை காவல் துறையினர்
அழைத்துச் சென்றபோது, இருவரும் முன்பே திட்டமிட்டிருந்தது போல காவலர்களை
தாக்கிவிட்டு துப்பாக்கிமுனையில் தப்பித்தார்கள். அதுமுதல் அவர்களது நட்பு கூடுதல்
பலம் பெற்றது.
சிறையிலிருந்து தப்பித்ததும் விக்டர் முதல் வேலையாக லிசாவைப் போய்
சந்தித்தான். சத்யாவுக்கும் அவளை அறிமுகப்படுத்தினான். விக்டருக்கும் லிசாவுக்கும்
காதல். வன்மையான காதல் என்று சொல்லலாம். ஒருவேளை விக்டர் இதிகாசங்களில் வருவது போல
வனவாசம் சென்று வந்தாலோ, அல்லது இரட்டை ஆயுள் தண்டனை பெற்று திரும்பி வந்தாலோ கூட
லிசா அவனுக்காக காத்துக்கொண்டிருப்பாள். விக்டரும் அவ்விதமே அவளைக் காதலித்தான். சத்யாவின்
நட்பு கிடைத்தபிறகு விக்டரின் காதல் பயணங்களுக்கெல்லாம் சாரதியானான் சத்யா.
விக்டரையும் லிசாவையும் காரின் பின்னிருக்கையில் உட்கார வைத்து சாகசங்கள் செய்து
காட்டுவான் சத்யா. அவனது வித்தைகள் விக்டரைக் கவர்ந்தன. சத்யாவை சரியான முறையில்
பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைத்து வைத்திருந்தான். ஒரு வகையில் அவனது
திருமணமே அதற்கான துவக்கமாக அமைந்தது.
ஏனென்றால் விக்டரின் திருமணத்திற்கு அவனது குழுத்தலைவன் மேத்தீவ்
வந்திருந்தான். மேத்தீவ் ஒரு முன்னாள் பாதிரியார். பதிமூன்று வயதிலேயே தனது
வாழ்க்கையை மதத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மேத்தீவின்
அன்புக்கு பாத்திரமாய் அவனுடனிருந்த சிறுவன் ஒருநாள் கொல்லப்பட, மேத்தீவ்
துப்பாக்கி தூக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதன்பிறகு மேத்தீவ்
துப்பாக்கியை கீழே வைக்கவே இல்லை. நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி என்று தென்
மாவட்டங்களில் மேத்தீவின் கை ஓங்கத்துவங்கி இன்று சென்னை, பெங்களூரு போன்ற
பெருநகரங்களில் கூட புழங்கத் துவங்கிவிட்டான். கஞ்சா, கொக்கைன் போன்ற போதை மற்றும்
போதை தொடர்பான வஸ்துகளை டீல் செய்வது மேத்தீவின் பிரதானத் தொழில். மற்றபடி ஆளைத்
தூக்குவது முதல் ஆளையே தூக்குவது வரை எல்லா முறையற்ற வேலைகளையும் செய்பவன் மேத்தீவ்
!
திருமண நிகழ்வில் வைத்து மேத்தீவையும், சத்யாவையும் பரஸ்பரம் அறிமுகம்
செய்து வைத்தான் விக்டர். அறிமுகப்படுத்தியதும் சத்யா மேத்தீவிடம், நான் உங்க
ஃபேன் தல என்றது மேத்தீவை கவர்ந்திருக்கக்கூடும். கொஞ்ச நேரத்திலேயே சத்யாவும், மேத்தீவும்
இயல்பாகப் பேசிக்கொள்வதும், மேத்தீவ் சத்யாவை கிண்டலடிப்பதுமாக இணக்கமாகியிருந்தார்கள்.
இதற்குள் திருமண நிகழ்வு ஆட்டம் பாட்டம் என்று களை கட்டத் துவங்கியிருந்தது.
விக்டரின் காதலிகள் ஒரு பக்கம் ஆட, லிசாவின் கடைக்கண் அனுமதி பெற்று
விக்டரும் ஆடத்துவங்க, விக்டர் அவனது தலைவன் மேத்தீவையும் உடனாட அழைத்தான். மேத்தீவோ
புது நண்பன் சத்யாவை ஆடச்சொல்லி தள்ளிவிட்டு, ஒதுங்கிக்கொண்டான். அதன்பிறகு
சத்யாவும் விக்டரும் சேர்ந்துப் போட்ட குத்தாட்டத்தில் அந்த மாலைப்பொழுது ஆரவாரமானது.
விழாவுக்கு வந்திருந்த தன் மற்ற நண்பர்களையும், சகாக்களையும்
சத்யாவுக்கு அறிமுகம் செய்துவைத்தான் விக்டர். ஆச்சர்யமாக அவர்கள் அனைவரையும்,
அவர்களது குற்றப் பின்னணியுடன் சேர்த்து தெரிந்து வைத்திருந்தான் சத்யா. விழா
முடிந்தபிறகு மேத்தீவிடம் சத்யாவை அழைத்துச் சென்றான் விக்டர். சத்யாவின் கார்
டிரைவிங் பிரஸ்தாபங்களை அவன் மேத்தீவிடம் ஒப்புவித்தான். சத்யாவையும் அவர்களது குழுவில் சேர்த்துக்கொள்ள கோரினான். மேத்தீவின் தொழிலுக்கும்
சாகசக்கார வாகன ஓட்டுநர் என்பது அவசியத்தேவையாய் இருந்தது. மேத்தீவின் வலது
கையாயிருந்தவன் மட்டும் ஏனோ ஆரம்பம் தொட்டே சத்யாவை சந்தேகமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இருப்பினும் விக்டரின் நம்பிக்கையான வார்த்தைகளுக்கு இசைந்தான் மேத்தீவ்.
அன்றைய தினம் ஒருபுறம் விக்டரும் லிசாவும் திருமணம் செய்துகொள்ள,
மறுபுறம் விக்டருக்கும் சத்யாவுக்குமான நட்பு இன்னொரு புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து
வைத்தது !
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
3 comments:
தம்பி என்னப்பா இது.???இத எதுக்கு இவ்ளோ நீட்டி எழுதனும். அந்த பாட்டோட லிங்க் க இங்கே ஷேர் பண்ணியிருக்கலாம் ல...ஏன் யா இந்த கொல வெறி. ஆனால் நேர்த்தியா எழுதியிருக்க ல.....அருமை..
வாழ்த்துகள்......
Lol
Very creative posst
Post a Comment