அன்புள்ள வலைப்பூவிற்கு,
உலகில் சின்னச் சின்ன பாவங்கள் என்று நிறைய
இருக்கின்றன. உதாரணத்திற்கு, சிகப்பு சிக்னல் விழுந்திருக்கும்போது போலீஸ்காரர் இருக்கிறாரா என்று நைஸாக பார்த்துக்கொண்டே எல்லையைக் கடந்து செல்லுதல், ஆஃபீஸில் கலீக் தம்
பிரேக் போன சமயம் பார்த்து அவரது சேரை மாற்றி எடுத்துக்கொண்டு அவர் திரும்பி
வரும்போது கேஷுவலாக அமர்ந்திருத்தல், ரெஸ்டாரண்ட் போனால் நமக்கு பின்னால்
நான்கைந்து பேர் எச்சில் கையோடு நிற்பதைப் பற்றி கூச்சம் எதுவும் கொள்ளாமல் வாஷ்
பேசினில் ஒரு மினி குளியலைப் போடுதல் போன்றவை. இவையெல்லாம் ஓரளவிற்கு யாருக்கும்
தீங்கிழைக்காத பாவங்கள், ஒருவேளை நீங்கள் சிக்னலைக் கடக்கும்போது பசுமாடு ஏதேனும்
குறுக்கே வராத வரை.
லிஃப்டில் இதுபோன்ற சி.சி.பாவங்களை நிறைய
பார்க்கலாம் –
நிறைய பேருக்கு லிஃப்டில் போன் பேசும்
பழக்கம் உண்டு. ஒன்றுமில்லை, இதற்குக் காரணம் அவர்களின் குடும்பப்பாசம் அல்லது
பொறுப்புதான். குறிப்பாக பெண்கள். இவர்கள் ஆஃபீஸில் இருந்து கிளம்புவதற்காக பேகை
மாட்டிய அடுத்த விநாடி யாருக்காவது போன் செய்து நான் கிளம்பிவிட்டேன் என்று சொல்ல
வேண்டும். அப்பாவுக்கு, கணவருக்கு, வெளியே பைக்கில் காத்திருக்கும் காதலனுக்கு,
அப்படியும் இல்லை என்றால் கேப் டிரைவருக்கு. போனை காதுக்கும், தோளுக்கும் இடையே
இடுக்கிக்கொண்டு வந்துதான் லிஃப்டிற்குள் நுழைவார்கள். கதவு மூடியதும் இணைப்பில்
சிக்கல் ஏற்படும். அத்தோடு விட்டால் கூட பரவாயில்லை. லிஃப்ட் தரையிரங்குவதற்குள்
ஹலோ, ஹலோ என்று நான்கைந்து முறை கூப்பிட்டு பார்த்துவிட்டு, திடீர் ஞானம் பெற்று
நான் லிஃப்டில் இருக்கிறேன். வெளியே வந்துட்டு கூப்பிடுறேன் என்று முடிப்பார்கள்.
நம்மூரில் நிறைய பேருக்கு லிஃப்டில் கீழே
போக வேண்டுமென்றால் கீழே உள்ள பட்டனை அழுத்த வேண்டும் என்ற விஷயமே தெரியாது. எதற்கும்
இருக்கட்டும் என்று மேலே, கீழே என்று இருக்கிற எல்லாவற்றையும் அழுத்தி வைக்கும்
ஒரு குரூப். ஏற்கனவே கீழே போவதற்கான பட்டனை யாராவது அழுத்தி வைத்திருந்தாலும்,
அதன் மீது நம்பிக்கையில்லாமல் ச்சக்கு, ச்சக்கு, ச்சக்குன்னு நான்கைந்து முறை
அழுத்துபவர்கள் இன்னொரு வகை.
பொதுவாக லிஃப்டில் கடைப்பிடிக்க வேண்டிய கல்யாண
குணங்கள் –
1. ஒரேயொரு தளம் (அல்லது இரண்டு தளங்கள்)
ஏறுவதற்கு லிஃப்டை பயன்படுத்தாமல் இருத்தல்.
2. போன் பயன்படுத்துவதை தவிர்த்தல்.
பேசுவது மட்டுமில்லாமல் பாடல் கேட்பது, ப்ரெளஸரில் XNXX பார்ப்பது உட்பட.
3. உள்ளே நுழையும் முன், இறங்க
வேண்டியவர்கள் இறங்கி முடிக்கும்வரை காத்திருத்தல்.
4. பட்டன்களை மறைத்துக்கொண்டு
நிற்காமலிருத்தல். அப்படி சூழல் அமைந்துவிட்டால் மற்றவர்களுக்கு உதவி செய்தல்.
5. ஏதாவது சாப்பிட்டுக்கொண்டோ அல்லது காபி
கோப்பையுடன் லிஃப்டில் ஏறாமலிருத்தல்.
6. லிஃப்டில் ஏற்கனவே அறிமுகமானவரைக் காண
நேர்ந்தால் ஒரு சின்ன ஸ்மைலோடு நிறுத்திக் கொள்ளுதல். மிச்சத்தை லிஃப்டை விட்டு வெளியேறிய பின்
பேசிக் கொள்ளலாம்.
7. நீங்கள் லிஃப்டை பிடித்துவிட்டீர்கள்;
உங்கள் நண்பர் பின்தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறார் என்றால் சில நொடிகள் வரை லிஃப்டை
பிடித்து வைத்திருக்கலாம். அதற்கு மேல் அநாகரிகம்.
8. கடைசி சில தளங்களுக்கு செல்வதென்றால்
லிஃப்டின் மூலைக்கு சென்று நின்றுகொள்ளலாம். முதல் சில என்றால் மற்றவர்களை
ஏறவிட்டு கடைசியாக ஏறிக்கொள்ளலாம். சூழ்நிலையால் தவறு ஏற்பட்டால் மற்றவர்களுக்கு
இடையூறு ஏற்படாமல் நடந்துகொள்ளுதல்.
9. மற்றவர்களை குறுகுறுவென்று பார்க்காமலிருத்தல். உரசாமல் நிற்பது உடலுக்கு நல்லது. கூட்டம் அதிகமாக இருந்தால்
அடுத்த முறைக்காக காத்திருத்தல்.
10. உச்சென்று சப்தம் எழுப்பி உங்கள்
விரக்தியை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் இருத்தல். உதாரணத்திற்கு, நீங்கள் ஏழாவது மாடிக்கு
போக வேண்டியிருந்து லிஃப்டில் உள்ள மற்றவர்கள் ஒன்றிலிருந்து ஆறு வரை அத்தனை
பட்டன்களையும் அழுத்தி வைத்திருந்தால் அதனால் ஏற்படும் டென்ஷனை வெளியே காட்டிக்
கொள்ளக்கூடாது.
திடீரென இன்று லிஃப்ட் எடிக்கெட்ஸ் பற்றி
எழுதுவதற்கு சரக்கில்லை என்பது தாண்டி வேறொரு காரணமும் உண்டு. ஒரு நிமிஷம். இனி
வரும் பத்திகளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான
ஒரு படத்தின் ஸ்பாய்லர் (அல்லது முழுக்கதை) வரப்போவதால், அதில் உங்களுக்கு ஏதாவது
சங்கடங்கள் இருந்தால் தொடர்ந்து படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன்.
KM சார்ஜூன் என்றொரு இயக்குநர். ஒருமுறை
பத்தாவது தளத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டுக்கு போயிருக்கிறார். திடீரென அங்கிருந்து
அவசர அவசரமாக கிளம்ப வேண்டிய சூழல். லிஃப்டை நோக்கி ஓடுகிறார். லிஃப்ட் தன்
கதவுகளை மூடிக்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. நல்லவேளையாக உள்ளே ஒரு ஆசாமி
இருந்தபடியால் லிஃப்டை தனக்காக சில நொடிகள் நிறுத்தி வைக்குமாறு இறைஞ்சுகிறார். ஆனால்
உள்ளே இருந்தவரோ ஒரு asshole. அவர் லிஃப்ட் கதவுகளை மூடச் செய்யும் பட்டனை
அழுத்துகிறார். இயக்குநர் லிஃப்டை தவறவிடுகிறார். உடனே இயக்குநரின் மனதிற்குள் ஒரு
மணியடிக்கிறது.
படத்தின் பெயர் ஐரா. ஹீரோயின் நயன்தாரா,
ஜர்னலிஸ்ட், இப்போதைக்கு திருமணத்தில் விருப்பமில்லை, பாட்டி வீட்டுக்கு
செல்கிறார், யூடியூப் சேனல் துவங்குகிறார், பேய் வீடியோக்கள் போட்டு மானெட்டைஸ்
செய்கிறார் என்று ஒரு மாதிரியாக போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஒரு
அமானுஷ்ய சக்தி சில நபர்களை கொன்று பழி வாங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு லாரி
டிரைவர், இரண்டு குடிகாரர்கள், ஒரு பியர் கம்பெனி உரிமையாளர் என்று ஒருவரோடு
ஒருவர் நேரடித் தொடர்பில்லாதவர்கள். ஒரு கட்டத்தில் இரு கதைகளும் ஒரு புள்ளியில்
வந்து இணைகிறது. அதாவது அந்த அமானுஷ்ய சக்தி அடுத்து ஹீரோயினை பழி வாங்கப்
போகிறது. ஆனால் எதற்கு ? அதுதான் சஸ்பென்ஸ்.
அதிலே பாருங்கள். அந்த அமானுஷ்ய சக்தி
யாரென்று பார்த்தால் அதுவும் நயன்தாரா தான். இரட்டை வேடம். முதலில் அறிமுகமான
நயன்தாராவின் பெயர் யமுனா. அப்படியென்றால் தமிழ் சினிமாவின் விதிகளின் படி
இரண்டாவது நயன்தாராவின் பெயர் கங்கா என்றுதானே இருக்க வேண்டும். அதுதான் இல்லை.
இரண்டாவது நயனின் பெயர் பவானி. பெரிய ட்விஸ்ட்டுல்ல ! இதில் இயக்குநரின் மஹா கைங்கர்யம்
என்னவென்றால் இரண்டாவது நயன்தாரா கொங்கு மண்டலத்தில் பிறந்து, வளர்ந்தவர். அதனால்
கொங்கு மண்டல நதியான பவானியின் பெயரை சூட்டியிருக்கிறார். அதே சமயம் இன்னொரு நயன்தாரா
கதைப்படி சென்னை பெண் என்பதால் அவருக்கு கூவம் என்றோ, அடையாறு என்றோ பெயர் சூட்ட
இயக்குநருக்கு மனம் ஒப்பவில்லை.
கதைக்கு வருவோம். இப்போது பவானியின் ஆவி
யமுனாவை பழி வாங்கத் துரத்துகிறது. அது ஏன் என்பதை இரண்டே கால் மணிநேர படத்தில்,
கிட்டத்தட்ட கடைசி இருபது நிமிடங்கள் வரை சொல்லாமல் விட்டுவிட்டார்கள். இவ்வளவு
சஸ்பென்ஸ் வைத்து கடைசியாக உடைக்கப்போகும் அந்த விஷயம் பயங்கரமாக இருக்கப்போகிறது
என்று பார்த்தால் – பவானி ஒருமுறை பத்தாவது மாடியிலிருந்து இறங்குவதற்கு லிஃப்டை
நோக்கி செல்கிறார். அப்போது அதனுள்ளே இருக்கும் யமுனா அவரது அவசரத்திற்காக
லிஃப்டின் கதவுகளை மூடச்செய்கிறார். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு உலகத்தின்
நிகழ்வுகளையே மாற்றிப்போடும் என்று ஒரு தியரி உள்ளது அல்லவா. அதன்படி பவானியின்
வாழ்க்கையில் சில விளைவுகள் ஏற்படுகின்றன. அதற்கு காரணமான ஒவ்வொருவராக பழி வாங்கி
கடைசியாக யமுனாவைக் கொல்ல வருகிறார். கொன்றாரா இல்லையா என்று அமேஸான் ப்ரைமில்
பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது எனக்கு வேறு மாதிரியான பயங்கள் வர
ஆரம்பித்துவிட்டன. ஒருமுறை இப்படித்தான் இரவில் லிஃப்டில் தனியாக நுழைந்தேன்.
எதிரே சற்று தொலைவில் ஒரு அழகான இளம்பெண் லிஃப்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.
இரவு, இளம்பெண், தனியாக லிஃப்டில் - யார் தான் தவறவிடுவார்கள் ? லிஃப்ட் கதவுகள்
மூடிக்கொள்ளாமலிருக்க அதன் பட்டனை ச்சக்கு, ச்சக்கென அழுத்துகிறேன். ஆனால் பலனில்லாமல்
லிஃப்ட் கதவுகள் மூடிக்கொண்டன. எனக்கு ஏமாற்றமாகிவிட்டது. அப்புறம்தான்
கவனித்தேன். ஸ்பென்ஸர் பிளாஸாவில் உள்ள லிஃப்ட்கள் புராதன காலத்தை சேர்ந்தவை
என்பதால் பட்டன் மீதுள்ள குறியீடுகள் அழிந்து போயிருந்தன. நானோ தவறுதலாக லிஃப்ட்
திறந்திருப்பதற்காக அழுத்த வேண்டிய பட்டனை விட்டுவிட்டு, மூடிக்கொள்வதற்கான
பட்டனைப் போட்டு அழுத்தியிருக்கிறேன். இப்போது அப்பெண்ணுக்கு எனது செய்கையின் விளைவால் எந்தத் தீங்கும் ஏற்பட்டிருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
என்றும்
அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
5 comments:
சொல்லி இருப்பவை பெரும்பாலும் சரி .கற்பனைகள் இலவசம் .எனவே நீங்கள் எதனையும் நினைத்துக் கொள்ளலாம் ..ஹா ...ஹா...
ஹஹஹ. சூப்பர்
அருமையான பதிவு. அந்த பொண்ணு லிப்ட் க்குள்ள ஏறியிருந்தா தான் பிரச்சினை. அதனால் ஏற்படவிருந்த அசம்பாவிதம் கயாஸ் தியரிபடி தடுக்கப்பட்டது.
வாழ்த்துக்கள்....
ரசனை. நானும் அமேசானில்தான் படம் பார்த்தேன். கடைசி வரி ஒரு சுவாரஸ்யம் என்றால், லிப்டுக்குள் செய்ய/செய்யக்கூடாதவை பற்றிய குறிப்புகள் மிகவும் சுவாரஸ்யம், உபயோகம்!
12 B படம் மாதிரி பவானி லிப்டில் ஏறி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று ஒரு பாகம் சொல்லியிருக்கலாம். அல்லது இரண்டாம் பாகம்?
Post a Comment