அன்புள்ள வலைப்பூவிற்கு,
முந்தைய பகுதி: கோவா –
தெற்கின் அழகு
கோவா பயணத்தின் கடைசி நாள் வந்தது. இறுதிக்கட்டம் என்றாலே சொதப்பலாக அமையும் என்பது எழுதப்படாத விதி.
முந்தைய இரவில் டெஸ்மாண்ட்ஜி என்னும்
அரக்கனை கொன்று வீழ்த்திய களைப்பில் கொஞ்சம் அயர்ந்துவிட்டோம். மாலையில் தான்
விமானம் என்பதால் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் கடைசி நாளுக்காக இரண்டு
கடற்கரைகளையும், கடற்படை அருங்காட்சியகத்தையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நம்
ஆட்கள் சாவகாசமாகக் கிளம்பி, ஷாப்பிங் ப்ளான் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
இப்போது போய் நான் அருங்காட்சியகம் செல்ல வேண்டுமென்று சொன்னால் உதைப்பார்கள்.
அதனால் எனது ஆசையை புதைத்துக் கொண்டேன்.
ஷாப்பிங் பற்றி எங்கள் ஐரோப்பிய விடுதி
உரிமையாளரை விசாரித்தோம். அவர் பிக்-ஜி (BIG G)
என்ற வளாகத்தைப் பற்றி சொன்னார். பயணித்தோம். இம்முறை தெற்கிலிருந்து
மத்திய கோவாவிற்கு. இறுதியில் அந்த பிக்-ஜி மால் அப்படியொன்றும் சிலாக்கியமாக
இல்லை. கோவா என்றில்லை. மதுரையோ, கோவையோ, பொள்ளாச்சியோ எங்கு சென்றாலும் இவர்கள்
ஷாப்பிங் காம்ப்ளக்ஸைத் தான் மால் என்கிறார்கள். அதை இவர்கள் உறுதியாக நம்பவும்
செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
கோவா விமான நிலையத்தின் முகப்புத்தோற்றம் |
பின் வாஸ்கோவில் உள்ள சின்னச் சின்ன
தெருக்களில் இறுதிநேர ஷாப்பிங் செய்துவிட்டு அங்கிருந்து விமான நிலையம் சென்றோம்.
விமான நிலையம் டாபோலிம் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. வாஸ்கோவிலிருந்து சுமார்
ஐந்து கி.மீ. கோவா விமான நிலையத்தின் கட்டமைப்பு அப்படியே சென்னை விமான நிலையத்தை
நினைவூட்டுகிறது. உள்நாடு, வெளிநாடு பயணங்களுக்கு ஒருங்கிணைந்த நிலையம். நிறைய ஐரோப்பிய
மற்றும் ரஷ்ய விமானங்கள் ஸீஸன் சமயங்களில் மட்டும் கோவாவுக்கு வந்து செல்கின்றன.
ரஷ்யா என்றதும் சில விஷயங்கள்
நினைவுக்கு வருகிறது. எப்படி போர்த்துகேயர்களுக்கும் கோவாவுக்கும் ஒரு இணைபிரியா
தொடர்பு உள்ளதோ அதே போல ரஷ்யர்களுக்கும் கோவாவுக்கும் உள்ளது. கோவாவின் ஒரு
குறிப்பிட்ட பகுதியை லிட்டில் ரஷ்யா / மினி மாஸ்கோ என்று சொல்லும் அளவிற்கு ரஷ்யர்கள்
இப்பகுதியில் வந்து மாதக்கணக்கில் தங்கிவிட்டு போகிறார்கள். இப்பகுதிகளில்
உணவகத்தின் பெயர் பலகைகள், மென்யூ கார்டு எல்லாம் ரஷ்ய மொழியில் தான் உள்ளன.
அப்படியென்ன ரஷ்யர்களுக்கு கோவாவின்
மீது காதல் ? நிறைய காரணங்களை பட்டியலிடுகிறார்கள். அதில் முக்கியமான காரணம்
தட்பவெப்பம். ரஷ்யாவில் குளிர்காலம் என்பது கொடூரமானது. அக்டோபர் துவங்கி ஏப்ரல்
மே வரை ரஷ்யாவின் தட்பநிலை மைனஸ் முப்பத்தைந்துக்கும் கீழ் செல்கிறது. சில
பகுதிகளில் இது மைனஸ் அறுபது, எழுபது வரை செல்கிறது. சில அயல்தேசப் பறவைகள்
வருடாவருடம் சீஸன் சமயத்தில் நம்மூர் வேடந்தாங்கலைத் தேடி வருவது போல இவர்களும்
குளிர் தாளாமல் கோவா வந்துவிடுகிறார்கள்.
அத்தனை குளிரில் வாழ்ந்து
பழகியவர்களுக்கு இந்திய வெய்யில் எப்படி இருக்கும் ! நேரே கடற்கரைக்கு வந்து
பிகினியில் படுத்துவிடுகிறார்கள். ஒரு வகையில் இவர்களின் வருகையும், தாராள
கவர்ச்சியும் தான் கோவாவிற்கென ஒரு சிறப்பு அந்தஸ்தை தருகிறது.
வேறெங்கோ செல்லாமல் குறிப்பாக
கோவாவுக்கு ஏன் வருகிறார்கள் என்றால் இங்கு செலவு குறைவு என்பதும், இங்கே செக்ஸ்,
போதை போன்ற விஷயங்களில் கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதே காரணம். இத்தனைக்கும்
அவ்வப்போது ரஷ்ய பயணிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதும், கொலை செய்யப்படுவதும்,
பணம் ஏமாற்றப்படுவதும் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன.
லிட்டில் ரஷ்யாவில் எனக்கு ஏற்பட்ட ஒரு
அனுபவம். நாங்கள் வடக்கு கோவாவில் தங்கியிருந்த விடுதி வரவேற்பறையில் ஒரு பெரிய
அலமாரி முழுக்க புத்தகங்கள் கேட்பாரின்றி கிடந்தது. நமக்குத் தேவையானதை எடுத்துக்
கொள்ளலாம் என்று அங்கே சென்று புரட்ட ஆரம்பித்தேன். அலமாரி முழுக்க புரட்டிப்
பார்த்துவிட்டேன். அத்தனையும் ரஷ்ய புத்தகங்கள். குறிப்பாக நிறைய விண்வெளி
சம்பந்தப்பட்ட அறிவியல் புனைவுகள் என்று அட்டைப்படங்களை வைத்து உணர முடிந்தது. ஒரு
பக்கம் அந்த அட்டைப்படங்கள் ஈர்க்கிறது. இன்னொரு பக்கம் ரஷ்யமொழியில் ஒரு வார்த்தை
கூட தெரியாமல் அது ஒரு அவஸ்தை.கடைசியில் ஒரேயொரு ஆங்கில புத்தகம் கேரளா மற்றும்
கோவா பற்றிய டிராவல் கைடு அது மட்டும் ஆங்கிலத்தில் கிடைத்தது.
போர்த்துகீஸ் மற்றும் அதனைச்
சுற்றியுள்ள நாடுகள், சோவியத் கூட்டுறவு நாடுகள் போன்ற தொடர்புகளால் கோவாவில் ஒரு
முக்கியமான மாற்றத்தை காண முடிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்
பெரும்பான்மை மதம், சச்சின் விருப்ப தெய்வம். ஆனால் கோவாவில் கால்பந்தின் மீதுதான்
மக்களுக்கு காதல். 2016ம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து கோப்பையை போர்ச்சுகல்
கைப்பற்றியபோது அதனை கோவா கொண்டாடித் தீர்த்தது என்கிறது ஒரு குறிப்பு.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கிளப் வைத்து கால்பந்து ஆடிய பெருமை கோவாவுக்கு
உண்டு. ஐ.பி.எல் பாணியில் கால்பந்திற்கென இந்திய பிரிமியர் லீக் துவங்கப்பட்டபோது கிரிக்கெட்டில் பட்டியலில் கூட இல்லாத கோவாவிற்கு தனி ஃப்ராஞ்சைஸ்
கொடுக்கப்பட்டது.
கோவா விமான நிலைய ரன்வே |
அரக்கப் பறக்கச் சென்று கடைசியில்
விமான நிலையத்தில் நீண்ட நேர காத்திருப்பின் பிறகு எங்கள் விமானம் புறப்படத் தயாரானது.
இந்தியாவின் அபாயகரமான ரன்வேக்களில் கோவாவும் ஒன்று. அரபிக்கடலில் குதித்து
தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் பார் என்று நம்மை பயமுறுத்திவிட்டு பறக்கத்
துவங்குகிறது விமானம்.
ஒரு பந்தக்காலில் துவங்கிய நீண்ட பயணம் இன்னொரு பந்தக்காலில் வந்து நிறைவடைகிறது.
விமானம் சென்னை வந்திறங்கியது !
ஒரு பந்தக்காலில் துவங்கிய நீண்ட பயணம் இன்னொரு பந்தக்காலில் வந்து நிறைவடைகிறது.
விமானம் சென்னை வந்திறங்கியது !
அடுத்து வருவது: கோவா – சில தகவல்கள்
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
|
No comments:
Post a Comment